ஹிட்லர் மீசை

மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய்
நெற்றிப் பொட்டில் தெறித்து
உயிர் நனைக்க....
காதலும், காற்று வாங்க
கனவுடன் கைக்கோர்த்து,
கதைகள் சொல்ல...
கண்களுக்குள் கனல் மெல்ல
கனன்றெரிய...
சிருங்கார ரசமிழந்து
நாழிகைகள் நான் கடத்த...
ஏதோ ஒரு கனவில்
எங்கோ சஞ்சரித்து..
போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு
ஏனோ வரைந்துப்பார்க்கிறேன்
ஹிட்லரின் மீசை....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தலைப்பிட்டிருக்கலாம்.....


காலை தேநீர்....
கனவின் நீட்சி...
குடையின் ஈரம்...
குடிசையின் அழுகுரல்...
கொடிபடர்ந்த கிளை...
கொஞ்சும் கிளி....
கொலுசின் சிணுங்கல்...
கோவைப்பழம் நிறம்...
கோபத்தில் சிவக்கும் கன்னம்....
ஆனந்தம் கொண்ட கண்ணீர்...
அவசிய நேரத்துதவி...
என,
இவை ரசிக்கும் நேரம்
வீணென உணர்ந்தேன்...
உன் பிஞ்சு பாதங்களில்
உருண்ட மழைத்துளி
கண்ட பின்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

எங்கெங்கும் கடவுள்கள்...

முடிமேல் மயிலிறகு தரித்தவன்
கண்ணன் என
அடையாளம் காட்டப்பட்டான்..
கைகளில் தங்க காசு எனில்
லக்ஷ்மி...
வீணையுடனிருப்பவள் வாணி...
பாம்பின் மேலெனின்
ரங்கநாதர்...
மீசை இருந்தால்
கண்மூடிக்கொண்டு சொல்வேன்
பார்த்தசாரதி என..
என் தெரு போக்கிரி பிள்ளையாருக்கு
வெவ்வேறு பெயர்களில்
ஊரெங்கும், தெருவெங்கும்
கோவில்கள்...
எனினும் கோவில்கள்
கட்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன...
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

குதிரு....


குறுவையும்,பொன்னியும்,
தாளடியும்,சம்பாவும்
எலி, எறும்பு,
கரையான், பூச்சிகளுக்கும்...
அம்மாவுடனான சண்டை,
அண்ணனுடன் கண்ணாமூச்சி ஆடவும்,
என எல்லாமுமாகவும்...
சுற்றி வந்தும் கட்டிக்கொள்ளவோ
எட்டித்தொடவோ முடியாமல்
அடி முடி எட்டா
என் அந்நாளைய கடவுளாகவும் இருந்து...
மழைப் பொய்த்து போனதில்
நிலம் சோம்பல் ஆனதில்
நெல் தங்காமல் சில நாள்
எள், சோளம் காத்து...
பின் மழை பெய்து கெடுத்ததில்
பல நாள் தள்ளாடி...
சரிந்து விழுந்து கரைந்தது...
காலங்கள் ஓடி போனதில்...
கண்ணாமூச்சி ஆட்டங்கள் மறந்து, மறைந்ததில்...
சோஃபா மறைத்தவிடத்தில்
மறையாமல் நிற்கிறது வடுவாய்
காரையாலான என் வீட்டு குதிரின்
மேடான இடம் மட்டும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஹேய்ய்ய்ய் எந்திரன் வந்தாச்சே!!!!!!!!!

இதான் மேட்டர் நான் எந்திரன் படத்த இன்னும் பாக்கல.... மறுபடி போஸ்ட் போடலாம்னு வந்தா எங்கேயும் எந்திரன் மயம். நானும் "நினைவில் ஊசலாடிய உறவுகளின் பிரிவுகளில் அடைந்த சுவடுகளின்" -னு கவுஜ எழுதினா, யார்ரா இதுன்னு அற்ப புழுவே ரேஞ்சுக்கு பாத்துட்டு போயிடுவீங்க. அதான் இப்படி தலைப்பு .எப்படி நம்ம ஐடியா?? ;-)

விஷயம் ஒண்ணும் இல்ல. நான் வந்துட்டேன், இனி இங்க சோக கவுஜ, அறுவ ஜோக்கு, அழு மூஞ்சி கத எல்லாம் வரும். அப்படிக்கா எங்கயாவது என் ப்ளாக சுத்தி போயிடுங்கன்னு சொல்ல தான் வந்தேன். வரட்டா!!!!!!! :-))))))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

வண்ணங்கள் குழைத்த வானவில்...


உன் மூர்க்கத்தனங்களும், கோபங்களும்
என்மேலான உனது வெறுமைகளும்
பல வண்ணக்குழம்புகளை
என்மீது வாரி இறைக்கின்றன...
வண்ணக் கலவைகளிடம்
விடுபட இயலா என் கோபங்கள்
மேலும் வண்ணங்களைப் பெருக்கி..
என் கண்களிலும், கன்னங்களிலும்,
நினைவுகளிலும், நிசப்தங்களிலும்
சுழித்து ஓடச்செய்யும் ஆறாக
உருமாற்றம் அடைகிறது...
சில நேரங்கள் வண்ணங்கள்
என்னுள்ளும்...
பல பொழுதுகள் நான் அதனுள்ளும்
பதுங்கும் சமயங்களில் நினைத்துக்கொள்கிறேன்..
உனக்கான விருப்ப வானவில்
எனக்குப்பிடித்த
இரு வண்ணங்களில்
ஏதேனும் ஒன்றாக தான் இருக்குமென...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

Congrats...!!

'நான் வராமலா?' என்ற ஷர்மிளாக்களும்,
'கண்டிப்பா வந்துடுவேண்டி' என்ற சரண்யாக்களும்,
கரைந்துதான் போகின்றனர்
கல்யாண பந்தல்களில்..
என்றாவது தெருமுனைகளில்
எதேட்சையாக பானைவயிற்றுடன்
சந்திக்க நேர்கையில்
வந்துவிழுகின்றன
கல்யாண விசாரிப்புகளுக்கு முன்
'கங்கிராட்ஸ்கள்' அசட்டுச்சிரிப்புடன்..
எனினும் இன்னும்
கல்லூரிகளின் கடைசி நாள்களிலும்,
கல்யாண வீடுகளிலும்
காற்றில் கரைந்துக்கொண்டுதானிருக்கின்றன..
'கண்டிப்பா வந்துடுவேண்டி'க்கள்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாதவன்!!


"வருஷத்திற்கு வருஷம் எதுவும் மாறுவதில்லை எண்களைத் தவிர!!"

உன்னைப்பார்த்துதான் இந்த அறிய உண்மையைக் கண்டுப்பிடிச்சேன் நான் (பின்ன இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருந்தா!!). தினம் கண்ணாடி பார்த்து, " நான் இன்னைக்கு கொஞ்சம் வெள்ளையாகிட்டேன்ல?" என்றோ, " நான் இன்னைக்கு கொஞ்சம் அழகா இருக்கேன்ல?" என்றோ கேட்கும் உன் கேள்விகள் இன்னும் மாறல. (ஆனா இந்த கேள்வியில இருந்தெல்லாம் நான் தப்பிச்சிட்டேன். :-)) )


இன்னும் இருவருக்குல்லான சண்டைகளுக்கும் பஞ்சமில்ல. (என்ன முன்னல்லாம் அடிச்சிக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கமாட்டோம், இப்போ பார்க்கும்போதெல்லாம் அடிச்சிக்கிறோம்.)

"ப்ளாகிங்க் பண்ணி டையத்த வேஸ்ட் பண்றா"ன்னு போன வருஷம் வரைக்கும் போர்க்கொடி தூக்கின நீ!! இந்த வருஷம் ரெண்டு ப்ளாக்ஸ் ஆரம்பிச்சி "செட்டிங்க்ஸ் மாத்திக்கொடு"ன்னு சொல்ற. :-))

இன்னும் உன்ன பத்தி சொல்ல நிறைய இருந்தாலும் ஏற்கனவே சொல்லிட்டதால இதோட நிறுத்திக்கிறேன் வாழ்த்துகள் மட்டும் சொல்லிட்டு.. :-))

Happy Birthday to you!! :-))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

உறங்கும் உணர்வுகள் (அ) உறக்கம் கலைக்கும் கனவுகள்


காலண்டர் தேதிகள் கிழிக்க
கட்டாயம் மறுக்கின்றேன்,
நெட்டிமுறித்துத் தள்ளும்
நினைவுகள் கலைக்கின்றேன்,
பூக்களையோ, புகைப்படங்களையோ
வாழ்த்தட்டைகளையோ,
பார்க்கவும் மறுக்கின்றேன்,
நெடிதுயர்ந்து வளர்ந்துவிட்ட உன்
பிம்பங்கள் ஏற்படுத்தும்
மனக்கிளர்ச்சிக்கு மருந்தின்றி
கீறிக்கிழிக்கும் முட்கள் கொண்டு
ரணமாக்கும் இந்த நாட்களை
அடியோடு வெறுத்து,
ஓரிடத்தில் சிலையாகும் உறுதிப்பூண்டு,
பின்பும் தோல்வியுற்று..............
.
.
.
போதும்...
எனினும் கேட்பதில்லை,
தாண்டிச்செல்கின்றன காலங்கள்...
அதனாலேயே வந்துவிட்டதென எண்ணிக்கொள்கிறேன்,
எல்லாவற்றையும் போல
இக்காதலர் தினமும்...
உன் ஞாபகம் சிறிதும் எனக்கில்லை
என உரக்கக்கூவிக்கொள்கிறேன்
என் மனதுக்குள் மட்டும்..

P.S: This is my 143rd post. Enjoy folks.. :-)))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

மீண்டும்... மீண்டும்...

"த்தா இந்த எடம் தான் எறங்கு"

என் பரபரப்பு அவளையும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். வேக வேகமாக தன் தோள் பையை எடுத்துக்கொண்டு குதித்தாள். ஆம் குதித்தாள் என்பதுதான் சரி. அந்த இடத்தில் நிறைய நேரம் ரயில் நிற்காது என அவளும் யூகித்திருக்க வேணும்.

"ம்ம் வா"

வேகமாக அவளை இழுத்துக்கொண்டு நடந்தேன். எல்லோரையும் வேடிக்கைப்பார்த்தபடி வந்தாள். சிவப்பு நிற உடையில் ஆண்களும், பெண்களும் நடந்தபடி, சிரித்தபடி, உட்கார்ந்தபடி, எங்களை திரும்பிப்பார்த்தபடி, திரும்பிப்பார்த்தவர்கள் திரும்பிக்கொண்டபடி இருந்தனர். இது அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்திருக்க வேண்டுமென கண்களைப் பார்த்துக்கண்டறிந்தேன். மெல்லிய செறுமல் கேட்டது அவளிடமிருந்து.

"ந்தா நாம எங்க வந்துருக்கோம்?"

பதில் சொல்லாமல் நான் சிரித்தது அவளுக்கு கோவம் மூட்டியதை உணர்ந்தேன். என் கைகளிலிருந்து வேகமாக அவள் கைகளை விடுவித்துக் கொண்டாள்.

"என்னாச்சு இப்போ?"

"நாம எங்க வந்துருக்கோம்ன்னு சொல்லு"

"எதுக்கு?"

அவளிடம் பதில் இல்லை என்பது நன்றாக விளங்கியது.

"ம்ம்ம் சொல்லு... நாம எங்க வந்துருக்கோம்? இல்ல... நீ என்ன எங்க கூட்டியாந்திருக்க? அதச்சொல்லு"

"எம்மேல உனக்கு நம்பிக்க இல்லயா?"

"உன்ன நம்பி தானே என் குடும்பத்தையே விட்டுட்டு வந்துருக்கேன். அப்பறம் என்ன?"

"சரி வா போலாம்"

"சொல்லமாட்ட?"

"அட! சொல்றேன் வா"

இந்த முறை நான் முன்னெச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அவள் நடையில் தளர்ச்சி தெரிந்தது.

'இவ வேற நேரங்காலம் தெரியாம அடம் பண்ணிக்கிட்டு'

"என்னா? வீட்டு ஞாபகமா?"

'எவ்ளோ அழுத்தம் பதில் சொல்லாம வரா?'

"இப்போ உனக்கு என்ன தெரியனும்? நாம எங்க இருக்கோம்னா?"

"ஆமா"

"இத பாரு... இப்போ மணி மதியம் 12:00. 2:00 மணி வரைக்கும் பொருத்துக்க. உனக்கே தெரிஞ்சிடும்"

கொஞ்சம் பழக்கப்பட்ட இடம் என்பதால் அவ்வளவு பதட்டம் என்னுள் இல்லை. அவனது ஹாஸ்டல் தேடுவதொன்றும் எனக்கு பெரிய வேலையாய் இருக்கவில்லை.

"நீ இங்கனயே இரு வரேன்"

"த்தா எங்க போற?"

"இங்கன ப்ரெண்டு ஒருத்த இருக்கான். அவன் நமக்கு ஹெல்ப் பண்ணுவான். ரெண்டு நிமிசத்துல வரேன் இரு."

டீக்கடை அண்ணாச்சி தாண்டி பாலாஜியின் ஹாஸ்டல். இருப்பான் இந்நேரம்.

"டேய் முருகா... எப்பிடி டா இருக்க? எப்ப வந்த? சொல்லிருந்தா ஸ்டேஷனுக்கு நானே வந்துருப்பேன்ல?"

"இல்லடா திடீர்ன்னு கிளம்பற மாதிரி ஆயிடிச்சி.."

"ஏன் மச்சி? வேல எதும் கிடைச்சிடிச்சா என்ன?"

என் மௌனம் அவனை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.

"சொல்லுடா... என்ன ஆச்சு? என்ன ப்ராப்ளம்? அந்த வீட்ல இருந்து எதாவது தொல்ல பண்ணாங்களா? இல்ல அந்த கோமதி எதாவது சொல்லுதா? சொல்லுடா..."

"அதெல்லாம் இல்லடா. அந்த புள்ள எங்க என்ன நெனைக்க போவுது? நல்லா கழுத்து நெறைய நகையோட போன வருசம் திருவிழாக்கு வந்தத நீ தான் பாத்தல்ல?"

"ஆமாண்டா அதான் உனக்கும் சொன்னேன்.. அவள மறந்துட்டு புது வாழ்க்க ஆரம்பின்னு"

"அதுக்கு தாண்டா இங்கன வந்தேன்"

"என்னடா? வேல எதாவது தேடியா? இல்ல பணம் எதாவது?"

"இல்ல மச்சி... அதுவந்து..."

"சொல்லு"

"என்னய என்ன கிறுக்குப்பயன்னு நினைச்சிட்டாளா மச்சி அவ? அவ இல்லேன்னா இன்னொருத்தி..."

"சரிடா... இப்போ என்ன?"

"அதா மச்சி அவ சித்தி பொண்ணு இருக்கால்ல? அந்த போஸ்ட்காரு புள்ள... லதா"

"ஆமா.. அதுக்கென்ன?" அவன் குரலின் பதட்டம் என்னை உலுக்கியது.

"சொல்லுடா... என்ன பண்ண?"

"ச்சீ..ச்சீ.. நா ஒன்னும் பண்ணல... கூட்டியாந்துட்டேன்.. ரெசிஸ்டர் ஆபிஸ் எப்ப தொறக்கும்?"

-அன்புடன்,
ஸ்ரீமதி.

யுத்தம்


உதட்டுக்கும், தொண்டைக்குமாய்
அலைப்பாயும்
ஈராயிரம் வார்த்தைகள்..
தொலைந்து பின் மீண்டும்
முளைக்கும் பார்வைப்பயிர்கள்...
சில்லென சிலிர்த்து விழிக்கும்
உன் சிருங்காரங்கள்...
பேச்சுக்களினூடே
எண்ண மறக்கும்
சிலவாயிரம் முத்தங்கள்...
வலிகளில்லா
வருடும் நோக்கத்திலான
உனது ஊடல்கள்...
போலவே,
இன்னும் சில பல கோபங்கள்...
எனக்கான உன் தாபங்கள்...
எல்லாம் வீணாகின்றன...
சீக்கிரம் முடித்துவிடு
உன் கோரத்தாண்டவமாடும்
இரண்டரை மணிநேர
மௌன யுத்தத்தை...

-o0O0o-
தமிழ்மணத்தில் இதுவரை முதல்கட்ட வாக்கெடுப்பில் என் கவிதைக்கு ஓட்டுப் போட்ட எல்லாருக்கும் எனது நன்றிகள். இரண்டாம்கட்ட வாக்கெடுப்பில் ஓட்டுப்போடவிருப்பவர்களுக்கும் எனது நன்றிகள். ஓட்டுப்போட...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது