காதலும் கற்று மற(?!)-2

காதலும் கற்று மற(?!)-1

"ரொம்ப திமிர் பிடிச்சவண்டி"

"ஹேய் இந்த சப்பாத்திய பாரேன் கீழ போட்டதும் உடைஞ்சிடிச்சு..."

"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்க?"

"ஆமாண்டி யாருன்னே சொல்லாம காலைல இருந்து திட்டிட்டு இருக்க. யார்ன்னு கேட்டாலும் சொல்லமாட்ட.. இதுல நான் வந்து என்னத்த சொல்றது?"

"அவன் தான் அந்த சீனியர்.."

"அவன் என்ன சொன்னான்?"

"பிசாசே... பக்கத்துல தானே இருந்த? என்னமோ தெரியாதவ மாதிரி கேட்கற?"

"நிஜமாவே கவனிக்கல... சாரி டி... அவன் எவ்ளோ நல்லா இருந்தான்? ம்ம்ம் என்னை தான் பாக்கவேமாட்டேங்கறான்"

"ச்சீ ஜொள்ளு.."

"சரி சொல்லு.. அவன் அப்படி என்ன சொன்னான்?"

"அடுத்து நடக்க போற Thanks Giving Party-க்கு நான் புடவை கட்டிக்கிட்டு வரணுமாம்... நான் என்ன ட்ரெஸ் போடனும்னு முடிவு பண்ண இவன் யாரு... ரொம்ப திமிர் அவனுக்கு... எனக்கு கொஞ்சம் கூட அவன பிடிக்கல..."

"அப்ப சரி"

"என்னடி?"

"கூடிய சீக்கிரம் உனக்கு அவன பிடிச்சிடும்..."

"Will you plz stop this non-sense?"

"Calm down... சாதாரணமா சொல்ற மாதிரி தானே அவன் சொன்னான்? கட்றதா இருந்தா கட்டிக்கோ இல்லேன்னா விட்டடுடு.. என்ன சொல்ற?"

முறைத்துவிட்டு வேகமாக நடந்துசென்றுவிட்டாள்.

-oO0Oo-

"டேய் அந்த ஜீனியர் பொண்ணுக்கிட்ட அவ்ளோ நேரம் என்னடா பேசிட்டு இருந்த?", காலையிலிருந்து ஏதோ ஒரு நகைப்புடன் இருந்தவனை சீண்டிப்பார்த்தான் கணேஷ்.

"நீ சும்மா இருக்கமாட்டியா?"

"இந்த தினேஷ் எப்பவும் இப்படிதான் இவனும் பேசமாட்டான், நம்மளையும் பேசவிடமாட்டான். இவனும் பார்க்கமாட்டான், நம்மளையும் பார்க்கவிடமாட்டான்... நீ சொல்லு சத்யா"

"ம்ம்ம் அவள புடவை கட்டிட்டு வர சொன்னேன்... பார்ட்டி அன்னைக்கு"

"டேய் ஏன்டா?", கிட்டத்தட்ட அதிர்ந்த குரலில் வழியில் செல்லும் இருவர் திரும்பிப்பார்க்க போதுமான அளவு கத்தினான் தினேஷ்.

"ம்ம்ம் சும்மா தோனிச்சு... புடவ கட்டினா அவ இன்னும் அழகா இருப்பான்னு நினைச்சேன்... சொன்னேன்"

"அந்த பொண்ணு தப்பா நினைச்சிக்கிட்டா?"

"அது அவ இஷ்டம்... பிடிக்கலைன்னா கட்டிட்டு வரமாட்டா, பிடிச்சா கட்டிட்டு வருவா"

"எதடா?", என கணேஷ் கேட்பதை விசிலடித்தே ரசித்தவாறு பல்சரிடம் ஓடினான்.

-oO0Oo-

"ம்ம்ம் நல்லாதான் இருக்க", காலையிலிருந்து தன் முதல் புடவை அனுபத்துடன் கண்ணாடியிடம் தஞ்சம் புகுந்தவளை தன் பங்கிற்கு வம்பிழுத்தாள் மிருதுளா.

"ம்ம்ம் போதும் போதும்.. என்ன கிண்டல் பண்ணது.. நீ போய் ரெடியாகு..", கோவம் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவள் பேச்சை ரசிக்கவே செய்தாள்.

-oO0Oo-

"இன்னைக்கு எல்லார் பார்வையும் உன் மேல தான்..."

"கேட்டேனா?"

"சொல்ல வேண்டியது என் கடமை இல்லயா? முக்கியமா அந்த சீனியர் உன்னையே தான் பாக்கறான்"

"மிருதுளா..."

"ஓகே.. ஓகே"

-oO0Oo-

"எங்க போன இவ்ளோ நேரம்?"

"கோவிச்சிக்காதமா.. இன்னைக்கு சீனியர்ஸ்க்கு நாம தானே எல்லா Food items சர்வ் பண்ணனும் அதான் அந்த பக்கம் போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வந்தேன்"

"பொய் சொல்லாத"

"சரி விடு... சாப்டு பார்த்துட்டு வந்தேன் போதுமா? அப்பறம் இன்னொரு விஷயம்"

"என்னது?"

"அவன் பேரு எனக்கு தெரியுமே"

"எவன் பேரு?"

"ம்ம்ம் உன்ன ரொம்ப உரிமையா புடவ கட்டிட்டு வர சொன்னானே அவன் பேரு... கேட்டா நீ ரொம்ப ஆச்சரியபடுவ"

"என்ன பேரு?"

"சத்யா"

"சொல்லு"

"இல்லடி.. அவன் பேரும் சத்யா தான்."

"என்னது? நிஜமாவா சொல்ற?"

"நிஜமா தான். பட் முழு பேரு தெரியாது."

-oO0Oo-

"ம்ம்ம் தேங்க்ஸ்"

"எதுக்கு?"

"நான் சொன்னதும் புடவ கட்டிட்டு வந்ததுக்கு"

"சீனியர்ங்கறதுனால செஞ்சேன். மத்தபடி இத அட்வான்டேஜா எடுத்துக்க வேண்டாம்"

"ம்ம்ம்ம் அப்படின்னா?"

"அப்படின்னா... இனிமே நீங்க சொல்றதெல்லாம் செய்வேன்னோ, அல்லது வேற எப்படியுமோ நினைச்சிக்க வேண்டாம்"

"வேற எப்படி?"

"இப்படி கேள்வி கேட்கறத முதல்ல நிறுத்துங்க"

"அதெப்படிங்க முடியும்? நீங்க ஏதோ சொல்லவரீங்க, அது எனக்கு புரியல. புரிஞ்சிக்க கேள்வி கேட்கத்தானே வேணும்?"

"ம்ம்ம் உங்க ஃப்ரெண்ட்ஸ் இத சாக்கா வெச்சு, நீங்களோ, நானோ போகும் போதெல்லாம் "சத்யா, சத்யா"ன்னு கத்தறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல"

"உங்க பேர் என்ன?"

"சத்யா"

"வாட்?"

"ஏன்?"

"Nice to meet you"

"What?"

"என் பேரும் சத்யா'ங்க"

-oO0Oo-

"நான் ஏதோ இருக்கும்னு நினைச்சேன்டா.. பட் இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்ல"

"கொஞ்சம் புரியற மாதிரி பேசறியா?"

"அதில்ல மச்சி.. அந்த பொண்ண பாத்ததுமே எனக்குள்ள ஏதோ ஆச்சு.. ஆனா, இப்போ அந்த பொண்ணு பேரும் என் பேரும் ஒன்னுன்னு தெரிஞ்சதும்... எனக்கு அது கன்ஃபார்ம் ஆகிடிச்சு"

"எது?"

"அதாண்டா L..O..V..E" , அவன் நிறுத்தி சொன்னவிதம் அழகாக இருந்தாலும் அந்த வார்த்தை தினேஷுக்கு பிடிக்காததால் முகம் சுழித்தான்.

"நீயெல்லாம் படிச்சவன் தானே? எங்கேயாவது பேர் ஒன்னா இருந்தா உடனே காதல்ன்னு யாராவது பேத்துவாங்களா?", சூடாக வந்துவிழுந்த வார்த்தையில் கொஞ்சம் தடுமாறிதான் போனான் சத்யா. அதன் பிறகு அவளைப்பற்றி அவனிடம் பேசாது தவிர்த்தாலும், அவளுக்காக இவனெடுக்கும் பிரயத்தனங்கள் தினேஷிற்கு தெரியாமலில்லை.

அன்றும் அப்படித்தான்.....

-தொடரும்..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதலும் கற்று மற(?!)-1

"All Girls are My Sisters, Except 'U' ".

படித்துக்கொண்டே வந்த தினேஷ் மோதிக்கொண்டான் அவன் மீது.

"டேய் என்னடா இது? என் மேல வந்து மோதற அதுக்கு..."

"ம்ம்ம் சொல்வ டா... என்னதிது? காலேஜ்க்கு வர லட்சணமா இது? ஒரு ஃபார்மல் போட்டுட்டு வரமாட்ட?"

"ஃபார்மலா? அப்படின்னா?", தினேஷ் சூடானான்.

"ஓகே.. ஓகே கோவிச்சுக்காதடா... இன்னைக்கு Freshers Day function தானே? ப்ரபோஸர்ஸ் யாரும் நம்மல கண்டுக்கமாட்டாங்கடா... அதோட இல்லாம நிறைய கேர்ள்ஸ் வருவாங்க.. அவங்க முன்னாடி போய் டை எல்லாம் கட்டிக்கிட்டு சேல்ஸ்மேன் மாதிரி நிக்க சொல்றியா? இப்படி ரகளையா ட்ரெஸ் பண்ணாதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்.. அதான் இப்படி.... எப்புடி?"

"எதாவது பண்ணித்தொலை", இடத்தை விட்டகன்றான் தினேஷ். விசிலடித்தபடியே புது மாணவர்களை வரவேற்க வாசல் நோக்கிச்சென்றான் சத்யா.

-o0O0o-

"ஹாய்! அம் மிருதுளா. நீங்க?"

"ஹாய்! அம் சத்யா."

"முழு பேரே சத்யா தானா?"

"ஏன்?"

"இல்ல. சாதாரணமா பசங்களுக்கு தான் சத்யான்னு வெப்பாங்க அதான் கேட்டேன்".

"ம்ம்ம்... சத்ய நாராயணி.. தான் முழு பேர்..."

"அப்பா... ரொம்ப பெரிசா இருக்கு. நான் சத்யான்னே கூப்பிடுறேன்".

-o0O0o-

"அந்த 'U' யாருங்கறது தான் அங்க பிரச்சனை".

"என்ன சொல்ற?"

"நீ பாக்கவே இல்லயா??"

"எத?"

"அப்போ நீ காலைல இருந்து அந்த ஸ்டேஜ தவிர வேற எதையுமே பாக்கலையா?"

"நீ என்ன பேசறன்னே புரியல".

"நம்ம சீனியர் ஒருத்தன் காலைல இருந்து இங்கயும், அங்கயும் அலைஞ்சிட்டு இருக்கான். அவன் T-shirt-ல "All girls are my sisters except 'U' "-ன்னு போட்டிருக்கு. அதுல தான் அந்த 'U' யாருங்கறது தான் பிரச்சனைன்னு சொன்னேன். ஏன்னா நான் படிச்சா என்னையும், நீ படிச்சா உன்னையுமில்ல பாயிண்ட் பண்ணும்?"

"ரொம்ப முக்கியமா இப்ப?"

"அப்போ நீ அவன கவனிக்கலன்னு கவலப்படற"

"ச்சே ச்சே இல்ல...."

"அப்போ நீ அவன் உன்ன கவனிக்கனும்ன்னு ஆசைப்படற"

"கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?"

-o0O0o-

இதுவரை குடும்பம் பிரிந்து வந்திராத நிலையும், தனிமையும் முதல் முதலாக சத்யா உணர்ந்தாள். ஹாஸ்டலில் அவளை விட்டு கிளம்பும்போது, இவள் கையில் விழுந்த அம்மாவின் கண்ணீர்த்துளி இன்னும் பிசுபிசுத்தது.

"ஏய்! என்ன சோகமா உட்கார்ந்திருக்க? அங்க பாரு, எங்க வீட்டுல என்ன கொண்டுவந்து இங்க தள்ளினத ஒரு விழாவா கொண்டாடிட்டு போறாங்க... ம்ம்ம்"

-o0O0o-

"ஹேய் இன்னைக்கு சீனியர்ஸ் நம்ம கிளாஸ்க்கு வராங்க", கிட்டத்தட்ட குதித்தபடி ஓடிவந்தாள் மிருதுளா. பொறியியல் படிப்பிற்கென்று இந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்து அதற்குள் நான்கு வாரங்கள் ஓடியிருந்தன. விடுதியின் சமையலும் பழகி போயிருந்தது. சீனியர்கள் பற்றி மட்டும் புரியாத புதிராயிருந்தது. காரணம் அவர்கள் யாரும் இவர்களைத் தேடி இதுவரை வரவில்லை. முதல்நாள் விழாவின் போது பார்த்தது. இன்று எதற்கு இங்கு வரவேண்டுமென நினைத்தாள்.

"அவனும் வராண்டி..."

"எவன்?"

"சீனியர மரியாதை இல்லாம பேசாத".

"யாரு?"

"ம்ம்ம் Except 'U' பார்ட்டி..."

நிஜமாகவே மறந்திருந்தாள். ஆனால் வாழ் நாள் முழுவதும் அவனை மறக்காதபடி செய்வானென அவள் எதிர்ப்பார்க்கவில்லை....

-தொடரும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

சம்பவங்கள்

"கொஞ்சம் நகந்துக்கோங்களேன்", சிரித்துக்கொண்டே என்னருகில் வந்து நின்றார். "ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் உள்ள வந்துடுங்க", என்றேன். ஒரு கையில் குழந்தையை இறுகிப்பிடித்தவாறு, இன்னொரு குழந்தையை என்னருகில் நிற்கவைத்தார்.

மாலை கல்லூரி, பள்ளி, அலுவலகம் முடியும் சமயங்களில் பேருந்தின் நெரிசல் அந்த நாளையே கசப்பாக உணரச்செய்யும். எப்படி இவர் இவ்வளவு தூரம் இந்த குழந்தைகளோடு செல்லப்போகிறார் என வருத்தமாக இருந்தது. என் கையில் இருக்கும் லஞ்ச் பாக்ஸ் பல நேரங்களில் பிறர் மடியில் தஞ்சம் புகுந்திருக்கும். வாங்குபவரின் முகங்களில் தான் எத்தனை எத்தனை பாவங்கள்? சிலர் சிரிப்புடனும், சிலர் சலிப்புடனும், சிலர் கவனிக்காதது போலவும், சிலர் கோவத்துடனும் பெற்றுக்கொள்வர். அவர்களின் கவலை அவர்களுக்கு. இதில் குழந்தையுடன் போவோரை யார் கவனிக்கப்போகிறார்கள்?

நான் நின்ற கம்பிக்கருகில் உட்கார்ந்திருந்தவர், நின்றிருந்தவரின் குழந்தையை வாங்கிக்கொண்டார். எனினும் கைக்குழந்தையுடன் நிற்பது சிரமம் தான்.

"Excuse me", என நினைவுகளைக் கலைத்தது பின்னிருக்கைக்குரல்.

"அவங்கள இங்க வந்து உக்காந்துக்க சொல்லுங்க", சிரித்துக்கொண்டே எழுந்துக்கொண்டார். ஏனோ மனதுக்கு நிம்மதியாக இருந்தது. என் கால்களில் ஏறி பின்னிருக்கை சென்று நன்றியையும், சாரியையும் முறையே அவரிடமும், என்னிடமும், பின் ஆளுக்கொரு புன்னகையும் பரிசாக அளித்தார். அடுத்து வந்த நிறுத்தங்களில் பலர் என் காலிலும், என்னருகே நின்ற பெண்ணின் காலிலும் ஏறி பயணம் செய்து, இனிதே அவரவர் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டனர். எனினும், பயணத்தில் ஏதோ ஓர் இறுக்கம் கலைந்தது போலிருந்தது. அனைவரும் அவ்விரு குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தோம். பல மணி நேர ரயில் பயணங்களைப் போலவே, சில நேர டவுன் பஸ் பயணங்களும் சில சமயங்களில் சிறப்பாக அமைந்து ஆச்சரியப்படுத்துகின்றன.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

"Early முகூர்த்தம் வேற சீக்கிரம் போகனும்", வேகமாக நடந்தபடி பேசியதில் கொஞ்சம் மூச்சு வாங்கியது. எனினும் இதை அடிக்கடி என்னிடம் சொல்வதனால் என்னைக் கொஞ்சம் துரிதப்படுத்தலாம் என்று நினைத்ததாலோ என்னவோ அம்மா இதை அறுபதாவது முறையாகக் கூறினார்.

"பஸ் நம்பர் கரெக்டா கேட்டுண்டியா? என்னவோ இங்க வந்தா உன்ன நம்ப வேண்டியதா இருக்கு. ஊர்லயே கல்யாணத்த வெச்சிருக்கலாம். எங்க சொன்னா கேட்டாதானே? பஸ் நம்பர் என்ன?"

"266, 166, PP66"

"என்ன இவ்ளோ நம்பர் சொல்ற? இத்தன நம்பரா வெப்பா ஒரு பஸ்க்கு? இல்ல இத்தன பஸ் ஏறி இறங்கி போகனுமா?? இதெல்லாம் அவங்க சொல்லவே இல்லயே? பத்திரிக்கையிலேயும் வேற பஸ் ஸ்டாப் பத்தி தெளிவா போடல"

"இல்லம்மா. இந்த நம்பர் உள்ள பஸ் எல்லாம் போகும். எது கிடைச்சாலும் போகலாம்"

அதை அதிஷ்டம் என்பதா? துரதிஷ்டம் என்பதா எனத்தெரியவில்லை. 266 நின்றிருந்தது. கும்பல் கொஞ்சமல்ல அதிகமாகவே இருந்தது. முகூர்த்த நாள் என தனக்குத் தானே காரணம் சொல்லிக்கொண்டாள் அம்மா. அடுத்த பஸ்ஸில் போகலாமா என கேட்க நினைத்து அறுபத்து ஓராவது முறையாக அவள் அந்த புகழ்வாய்ந்த வசனத்தை சொல்வதோ, நான் கேட்பதோ கூடாது என நினைத்ததால் வார்த்தைகளை விழுங்கினேன்.

எல்லா Speed breakers மற்றும் ஒவ்வொரு ப்ரேக்கிற்கும் என் மீது சாய்ந்த உயரம் குறைவான, சற்று என்னைவிட வலுவான அந்த பெண்ணை மானசீகமாக மன்னித்தேன். எனினும், இதனால் செருப்பறுந்து போகுமென சிறிதும் நான் நினைக்கவில்லை.

"ஏன் ஒரு மாதிரி நடக்கற?"

"செருப்பு அறுந்து போச்சு", அழுகை வந்தது எனக்கு.

"இப்போ தானே ரெண்டு வாரத்துக்கு முன்னே வாங்கின? அதுக்குள்ள பிச்சிட்டியா? ஒரு பொருளையும் உருப்படியா வெச்சிக்காதே. கல்யாண வீட்டுக்கு போகும் போது இப்படி தான் வருவியா?"

அறுந்து போனாலும் அதை இழுத்துக்கொண்டே நடந்துவிடலாம் என்ற என் நம்பிக்கை அம்மா வார்த்தைகளின் முன் தோற்று போனது.

"உன் பொண்ணா? என்ன படிக்கறா? நல்லா இருக்கா. கால் சரியில்லையோ? அவ தாத்தா மாதிரி? கஷ்டம் தான். பாத்து இருந்துக்கோ. இந்த காலத்துல நல்லா இருக்கற பொண்ணுங்களுக்கே...."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மதினி. பஸ்ல வரும்போது அவ செருப்பு பிஞ்சு போச்சு அதான்".

அம்மா இந்த கதையை இன்னும் நான்கு பேரிடம் சொல்லியிருந்தால் சென்சுரி அடித்திருப்பாள். எல்லாருக்கும் ஒரு அவஸ்தையான புன்னகை பரிசளித்து கடைகளோ, அல்லது தைய்ப்பவரையோ தேடினேன். தேவையில்லாமல் செருப்புடன் நடப்பவர்கள் மீதும், புது செருப்பைக் காட்ட வந்த தங்கையின் மீதும் கோபம் வந்தது. வரும் வழி எல்லாம் சாப்பாட்டின் பெருமை சொன்னாள் அம்மா.

"நீ தான் எவ்ளோ கூப்பிட்டும் வரல, ஏன் உம்முன்னு இருக்க?"

செருப்புத்தைப்பவர் கண்களில் பட வேண்டும் வீடு சேர்வதற்குள் என வேண்டினேன். பசித்தது.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

இருத்தலின் விதி


கீச்சுக்குரலென ஆரம்பித்து
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கியிருந்தது,
மழை...
எங்கோ உள்ளங்கையில்...
சிறிது வானம்
சேகரித்திருக்கும் குழந்தை..
நீலக்குடையின் வெளியில் கை நீட்டி...
இங்கு இனி,
வாகன ஓட்டிகளின்
மனிதாபிமானங்கள் கேள்விக்குள்ளாகும்
சேறடித்தது செல்லும்போது...
விழும் துளிகளை கொஞ்சம் ஏந்தி
சொட்டு நீர் பாசனம் செய்யும்...
மண்ணுக்கு மரம்...
காக்கைக்கும், நரிக்கும்
கல்யாணம் செய்விக்க
கிழக்கில் உதிக்கும்...
துளியோடு கதிரவன்...
முகவரிகள் மாறிப்போகும்
தெருக்களுக்கு...
குடையோடு நடப்பவர்கள்
கனவான்களாவார்கள்...
சூடான பாப்கார்ன்களுடன்
மாலைப்பொழுதுகள் கழியும்..
மழையை சபித்தபடி....
இருத்தலின் இருப்பை உறுதிப்படுத்தும்
வேகம் இங்கெப்போதும்...
ஒவ்வொரு கண்களிலும்....
வெறும் மானுட இனம்....
திட்டிக்கொண்டே திரும்பிக்கொண்டேன்...
எனது திருப்பம் வந்ததும்
சரியாக,
மழையில் நனைந்துவிடாதபடி....
உலகை உய்விக்க
மழை வேண்டுமாம்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தலைப்பு யோசிச்சு நொந்துட்டேன்...

ஏற்கனவே தீபாவளி வாழ்த்துகள் பதிவு போட்டதுக்கே இது ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்துருக்க வேண்டிய பதிவுன்னு பல்ப் வாங்கியாச்சு.. இப்ப மறுபடியும் அதேதான்... கூடவே ஒரு விருதும்... அழைத்த ஆதவன் அண்ணாவுக்கு நன்றிகள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள். :-))

1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

"தன் பெருமை தானறியாதவள்.." இதத்தவிர சொல்ல 1ம் இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-))

2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எல்லா தீபாவளியுமே எனக்கு மறக்கமுடியாதது தான். தனியா எதுவும் இல்ல.

3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

என் அம்மா, அப்பா இருந்த ஊர்ல.. ;-))

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

இரவு பத்து மணி வரைக்கும் எவ்ளோ நேரம்(?!) வேணும்னாலும் இங்க தீபாவளி கொண்டாடலாம்....

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

வாங்கினது சரவணால, தச்சது வீட்டு பக்கத்துல இருந்த டைலர்கிட்ட...

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

நிறைய செஞ்சாங்க அதெல்லாம் சொன்னா பதிவு பத்தாது.. அப்பறம் கண்ணுப்பட்டுடும்... ;-))

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

ஃபோன்தான் இப்போல்லாம்..

8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

ரெண்டும் இல்ல.. வெடி வெடிப்பேன்...

9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த தொடர்பதிவோட நோக்கமே இதுதான்னு நினைக்கிறேன்... இதுவரைக்கும் உருப்படியா எதுவும் செய்யாத எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. :-((

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

கார்க்கி- http://www.karkibava.com/
கார்த்திக்- http://rainbowstreet-karthik.blogspot.com/
ஆதி அண்ணா- http://www.aathi-thamira.com/
நர்சிம் அண்ணா- http://www.narsim.in/

அடுத்து விருது வழங்கும் விழா.. ;-))

எனக்கு விருது கொடுத்த நான் ஆதவன் அண்ணாவுக்கு நன்றிகளும், நான் விருதை பகிரப்போகிற நால்வரும்...


கார்க்கி.
கார்த்திக்.
ஆதி அண்ணா.
நர்சிம் அண்ணா. (இவருக்கு முதல் முதல்ல விருது குடுக்கறது நான் தான்னு நினைக்கிறேன்.. பெருமையும் கூட...)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது