பட்டாம்பூச்சி நாட்கள்...


பட்டாம்பூச்சிகள் பிடிக்கும் கனவை
பாதியில் கலைத்து
லட்சம் பட்டாம்பூச்சிகளை என்னுள்
பறக்கவிட்டவள்...
வெள்ளை உடையணியா
காலெனும் இறக்கை
முளைத்த தேவதை,
நடைப்பழகும் நர்த்தனம்...
கள்ளச் சிரிப்பினில்
கவனம் சிதைத்திடுவாள்...
வார்த்தைகளற்ற மொழியில்
கோடிக்கவிதை அவளுள்,
அவளால் என்னுள்....
வானம் தூவும்
முதல் துளி அவள்
மழலை மொழி....
கைக்கடங்கும் உலகம்...
எனினும் தினம்
நான் அவளைச் சுற்றும்
அதிசயம் நிகழ்த்துபவள்...
காற்றுக்குமிழிக்கும் மூச்சுவாங்க வைக்கும்
சிரிப்புக்கு சொந்தக்காரி...
இரவும், பகலும் என்னுடன்
இமை போல் இருப்பாள்..
எனினும், இடையில் பிரிந்து
கொஞ்சம் வருத்துவாள்...
வந்துவிடுவாள் என அறிவேன்,
இருந்தும் காத்திருக்கிறேன்
குழந்தைப்பருவமும்,
குதிரை விளையாட்டும்
அவளால் மீண்டும் பெற....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.....

வாழ்த்து சொல்வதுன்னு முடிவு பண்ணியாச்சு.. தீபாவளி முடிஞ்சாலும் விட்டுடுவோமா?? அதான் வந்துட்டேன்... எல்லோருக்கும் என் தாமதமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். :-))

என்னதான் பொங்கலுக்கும் புது ட்ரெஸ் எடுத்துக்கிட்டாலும், கரும்பு சாப்பிட்டாலும் இந்த தீபாவளிக்கு மட்டும் ஏதோ ஒரு சிறப்பு இருக்குங்கறது உண்மை தான். தீபாவளி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியும், அந்தந்த இடங்களுக்கு தனித்தனி தாத்பரியங்களும், அததுக்கு தனித்தனி கதைகள் சொல்லப்பட்டாலும் தீபாவளின்னாலே நமக்கு பலகாரம் தான்.. ஹி ஹி ஹி ;-)). இதை கொண்டாடும் விதங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமில்ல, வயதுக்கு வயதும் மாறுபடுது....

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அதைப் பத்தின பேச்சுகள் தொடங்கிடும் பள்ளிப்பருவங்களில்... கூடவே ஒரு நாள் லீவ் என்பதும் சந்தோஷத்த இரட்டிப்பாக்கும்... மாம்பழ கலர் பட்டுப்பாவாடையும், பச்சையோ அரக்குக் கலரோ பார்டரோடு, அந்த பார்டருக்கு மேட்சான சட்டை, அதுக்கு கைல பஃப் வெச்சு தச்சி, ஓரங்கள்ல மஞ்சள் கொஞ்சம் வெச்சு, நாம போட்டுக்கறதுக்காக ரெடியா இருக்கற அந்த பட்டுப்பாவாடைய, நாளுக்கு மூனு முறையாவது பீரோவ திறந்து பார்த்து, கசங்காம மடிச்சு வெச்சு, தொட்டு தொட்டு பார்த்துக்கறது ஒரு சுகம்னா, முதல் நாள் முழுவதும் ஊரெல்லாம் அலைஞ்சு மருதாணி இலைத்தேடி, சாயங்காலம் வாசல் உரல்ல கை சிவக்க, உரல் மணக்க, புளி, கொட்டைப்பாக்கு வெச்சு அம்மா அரைக்க, தண்ணி நிறைய ஊத்தினா நிறைய மருதாணி வரும்ன்னு நினைப்போட பக்கத்துல உட்கார்ந்து பாத்துக்கிட்டே இராத்திரி எப்போ வரும், நம்ம கை எப்போ சிவக்கும்ன்னு காத்திருக்கறதும் ஒரு சுகம்...

மருதாணி வெச்சு கையெல்லாம் குளிர்ல விறைத்தாலும் பிடிவாதமா இரவு முழுக்க வெச்சிருந்து காலைல யார் கை அதிகம் சிவந்திருக்குன்னு சண்டைப்போட்டுக்கிறதும் சுகம் தான்.. :-))

தீபாவளியும் அமாவாசையும் ஏன் தான் சேர்ந்து வருதோன்னு திட்டிக்கிட்டே, விடியகாலை அம்மா எழுப்ப "அம்மா ப்ளீஸ் ஃபைவ் மினிட்ஸ் மா" என்பதற்குள் அண்ணன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்திருப்பான். நம் பங்கு போய்விடும் என பாதித் தூக்கம் போயிருக்கும். மஞ்சள், மிளகு, வத்தல் மிளகாய் போட்டு காய்ச்சிய சூடான எண்ணெய் தலையில் சுர்ர்ர்ர்ர்ரெனும் போது மீதி தூக்கமும் பறந்திருக்கும்...

குளித்து புது ட்ரெஸ் போட போகிறோம் என்கிற ஆவல் கண்ணில் விழும் சீகைக்காயையும் பொருட்ப்படுத்தாது... வெடிவெடித்து, சாமிகும்பிட்டு, வெடிவெடித்து
கோவிலுக்கு சென்று , வெடிவெடித்து, பலகாரம் கொஞ்சம் சாப்பிட்டு (அது என்னவோ தீபாவளி அன்னைக்கு பலகாரம் சாப்பிடவே பிடிக்காது.), பாவாடையில் கொஞ்சம் பட்டாசால் ஓட்டை போட்டு, அது தெரியாமல் மறைத்து, தெரிந்த பின் முழித்து... அடுத்த நாள் திரும்ப ஸ்கூல் எனும் போது காய்ச்சலில் இரவு கழிந்து... அப்பப்பா...

இப்படி கொண்டாட ஆரம்பித்த தீபாவளி தான் வளர, வளர நமக்கு நாமே திட்டம் போல "அம்மா நானே ட்ரெஸ் செலெக்ட் பண்றேன்"-ல தொடங்கி, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ அந்த சுடிதாரை போட்டிருந்து, உடனே நைட்டியோ அல்லது நைட் ட்ரெஸ்கோ மாறி "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" பார்த்து, கொஞ்சம் வெடித்து என மாறி...

அடுத்த ஓரிரு வருடங்களில் ஹைதையிலோ, மைசூரிலோ அல்லது பெங்களூரிலோ ட்ரைனிங்க் அல்லது வேலைகளுக்கு இடையில் 10 மணிவரைத் தூங்கி, " அம்மா ஹாப்பி தீவாளி மா, பட்டாசு வாங்கியாச்சா, ம்ம் முறுக்கு எனக்கும் கொஞ்சம் எடுத்து வை.. வந்து சாப்பிடுவேன்.. ஓகே பை மா" என்பதோடு முடியும்...

"புது ட்ரெஸ் எடுத்துக்கோயேன்"

"போ மா போன வாரம் தானே வாங்கினேன்."

"அத தான் சொல்ல சொல்ல கேட்காம போட்டுட்டியே.. இப்போ வாங்கிக்கோ".

"அம்மா இந்த சுடிதார் பாரேன் குந்தன் வொர்க்கோட, அழகா இருக்கு, ஜஸ்ட் 5000 தான், ப்ளீஸ் மா வாங்கிக்கிறேன்... " என போத்தீஸின் வாசலில் முடியும் தீபாவளிகளும்,

"இது தான் உன் தீபாவளி புடவை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சு, சாஸ்த்திரத்துக்கு வெடிச்சிட்டு வா" வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமே முடியும் தீபாவளிகளும் உண்டு.. :-)))

எப்படி இருப்பினும் தீபாவளி தீபாவளி தான்... ஒவ்வொரு முறை கேட்கும், சொல்லப்படும் நரகாசுரன் கதை அழகு தான்... :-)))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

விளையும் பயிர்...

வற்றிப்போன ஆறுகளின்
மேல் புதிய பாலம்
நம்பிக்கை!


கவிதை சத்தியமா என்னோடதில்ல... பின்ன யாரோடது? கண்டுபிடிங்க... பதிவோட கடைசில சொல்றேன். ;-))


'என் புருஷனும்(sorry for the language :-( ) கச்சேரிக்கு போறான்'னு நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் நாலு மாசம் ஆச்சு. இதுவரைக்கும் உருப்படியா எதாவது எழுதினேனா தெரியல... இதுல நிறைய எழுதனும்ன்னு நினைச்சு பாதியோட நின்ற பதிவுகள் இன்னும் ட்ராஃப்ட்ல தூங்குது... அதுக்கு எப்போ மோட்சம்ன்னு தெரியல...

சிறுகதை பட்டறைக்கு போலைன்னாலும் நர்சிம் அண்ணாவோட இந்த பதிவ படிச்சதுனால புனைவு எழுதவும் பயமா இருக்கு... நாம எதாவது எழுதி நக்கீரர்கள் நெற்றிக்கண்ண தொறந்துட்டா என்ன பண்றது?? ;-))

சரி கவிதைங்கற பேர்ல வழக்கம் போல மொக்கை போடலாம்னா, 'மறுபடியும் போஸ்ட் மார்டனிஸமா?? அவ்வ்வ்வ்வ்'-ன்னு கார்த்திக் அழறான்.

பதிவே போட வேண்டாம்ன்னு முடிவு பண்ணா கார்க்கி இப்படி போட்டு கொல்றாரு.

ஹ்ம்ம்ம் தீபாவளி வாழ்த்து பதிவு மட்டும் போட்டுட்டு, அத ஷெட்யூல் பண்ணி வெச்சிட்டு எஸ் ஆகலாம்ன்னு கணினி முன்னாடி உட்கார்ந்தா ஃபோன்...

"ம்... சொல்லு" (தெரிஞ்சவங்களா இருந்தா, ஹலோ கிடையாது..)

"எப்படி இருக்க?"

"என்ன திடீர்ன்னு?"

"ஹி ஹி ஹி... சும்மா தான்"

"ம் இருக்கேன்..."

"உன் ப்ளாக் எல்லாம் எப்படி போகுது?" இந்த கேள்விக்கப்பறம் தான் எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்தது. ஏன்னா இவங்க சாதாரணமா என் ப்ளாக் பத்தி கவலைப்படாதவர், அதுவும் இல்லாம நான் இதுல நேரம் ரொம்ப செலவழிக்கறதா என் அம்மாகிட்ட போட்டுக்கொடுத்த புண்ணியவான்.

"என்ன விஷயம் சொல்லு?"

"எனக்கு ஒரு கவிதை தோணிச்சு, நீதான் ப்ளாக் வெச்சிருக்கியே? அதுல போடேன் ப்ளீஸ்...."

"என்ன???????"

"சொல்லவா?"

"இத போட்டேதான் ஆகனுமா?"

"நான் ஈவினிக் வந்து பார்ப்பேன். அது உன் ப்ளாக்ல இருக்கனும். எழுதிக்கிட்டியா?"

"டேய் நிஜமாவே போடனுமா?"

"ஆமாம். Bye".

பிசாசு... எவ்ளோவோ சொன்னேன் கேட்கல.. அதான் இங்க போட்டுட்டேன். வர்ட்டா? அது யார்ன்னு இன்னும் சொல்லனுமா?? வேற யார்? என் கூட பொறந்த பாசமலர் 'மாதவன்' தான் அது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இன்னும் வேற நிறைய கவிதை இருக்கு... அப்பப்ப சொல்றேன்னு சொல்லிருக்கான். நான் ப்ளாக மூடிடலாம்ன்னு ப்ளான்ல இருக்கேன்.. ;-)))))

டிஸ்கி: நான் இத போடலேன்னா அவனே ப்ளாக் ஆரம்பிக்கும் அபாயம் இருக்கு.

டிஸ்கி1: பாரேன் அவனும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டான். க்ரேட்!!( நான் எனக்கு சொன்னேன்.)

டிஸ்கி2: தலைப்பு இன்னுமா புரியல?

டிஸ்கி3: டிஸ்கி 2 இருக்கறதால இது டிஸ்கி 3-ஆ போச்சு... ஹி ஹி ஹி :-D.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஏழ் பிறவிக்கும்....


தாவணிகளை எட்டித்தொட்ட
நாட்களில் துவங்கியது...
குழந்தைப் பருவம் முழுவதும்
உதிர்ந்திராத காலம்...
மனதில் கிளந்தெழுந்த
ஆவலுடன் முதல் நாள்
எனத் தொடங்கி,
திருநீற்றுத் தீற்றலுடன்,
கொஞ்சம் குங்குமமும்
எனக்கான பிராத்தனைகளும்
என வளர்ந்து...
தேர்வுகளும், சில நமக்கான
பரிட்சைகளும் என
முற்றுப்பெற்றன மூன்றாண்டுகளும்...
இனியும் தொடரும் என
உறுதியளித்தாய்...
பணி நிமித்தம் பிரியமாட்டோம்
என சூளுரைத்தாய்...
ஆயிற்று வருடங்கள் மூன்று...
ஏதோ ஒரு நிறுவனத்தின்
பொருளாதாரத்தை
உயர்த்த நானும்,
குடும்பத்தின் வாழ்க்கைத்தரம்
உயர்த்த நீயும் என
சராசரிகளாகிக் கொண்டிருந்தோம்....
தகவல் தொழில் நுட்பங்கள் எதுவும்
கைக்கொடுக்கவில்லை நமக்கு,
உன்னிடம் பகிரவும்,
என்னிடம் பகர்க்கவும்
பலவுண்டு நம்மிடம்....
சந்திப்புகள் கைக்கூடிய நேரத்தில்...
கணத்தில் பார்வைகளில்
பெற்றுக்கொண்டாய் உனக்கான
என் வார்த்தைகளை...
அப்படியே நானும்...
பெண்களின் நட்பு
பிறந்தகம் வரைக்கும்தானாம்..
தூற்றுபவர்கள் தூற்றட்டும்...
இருந்துவிட்டு போகட்டும்,
ஏழ் பிறவிக்கும் நம் நட்பு....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது