ஈரம்


கோடைக்கால
மழை மேகத்தையோ,
பன்னீரால் பரவசப்படுத்தும்
சிறு பூவையோ,
ஞாபகப்படுத்தி சென்றது
கொடியில் காயும் அம்மாவின்
பருத்திப் புடவை ஈரம்...

மழையின் ஈரம்
காயாத இலைகள்
ஞாபகப்படுத்திச் சென்றன
நேற்றைய
உன் முத்தத்தை...

குளித்து தலைத்துவட்டி
நீர் தெளிப்பத‌ற்குள்
அவசரமாக வரையப்பட்டிருந்தது
வாசலில் கோலம்.
அதிகாலை மழை...

குடைக் கொண்டவர்கள்
நனையத் தயாரில்லை...
அவர்களுக்கெனப் பெய்ய
மழையும் தயாரில்லை...

நீ கவிழ்த்த கோப்பையில்
இன்னும்
மிதந்துக்கொண்டிருந்தது
எனக்கான வானம்...


முதல்ல எல்லாரோட அன்புக்கும் நன்றி எழுதலன்னு சொன்னதும் பதறிபோய் வந்து திரும்பக்கூப்ட்டதுக்கு... :-) நான் கொஞ்ச நாள் லீவ் தான் கேட்டேன் மத்தபடி எழுதவே மாட்டேன்னு சொல்லல... இப்பவும் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல தான் வந்தேன்.. நிறைய புதிய ப்லோக்கேர்ஸ் வந்திருந்தீங்க முந்தைய பதிவுக்கு அவங்களுக்கும் நன்றி.. :-) இப்பவும் புதிய இடம், நிறைய வேலை, எக்ஸாம்ஸ் வேறன்னு பிஸியா இருக்கேன். கூடிய சீக்கிரம் உங்கள சந்திக்கிறேன்.. பை பை..!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

இன்றும் ஒரு நாளென..

அன்று படித்த வரிகளின் தாக்கம்
இன்று இல்லை என் கவிதைகளில்.
துரு ஏறிய இரும்புப்பெட்டியின் உள் விளிம்பில்
காய்ந்துவிட்டிருந்தது
கட்டைவிரலின் இரத்தம்.
கற்றை முடிகளோடு தெருவில் கிடந்தது
நேற்றைய புதிய சீப்பு.
காலம் மட்டும் சுழன்றுகொண்டேயிருந்தது
இன்றும் ஒரு நாளென...

அறிவிப்பு(?!), டிஸ்கி(?!), (ஏதோ ஒன்னு... சொல்லுங்கப்பா): நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில். கடைக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுடவா?? அதாவது, கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கருக்கப்பட்ட கனவுகள்...

கால் வரைத் தாழ்ந்து
காதல் சொல்லாத கணங்களிலும்...,
சுவாசிக்கும் காற்று
வடிகட்டப்படும் நேரங்களிலும்,
என்மேலான என்னுரிமைகள்
உன்னால் பறிக்கப்பட்ட பொழுதுகளிலும்
என,
என் கருக்கப்பட்ட
கனவுகளனைத்தும்...
கருப்புப்பூசி
கவிதைகளாய்
கடைவீதிகளில் உலாவரலாம்....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கவிதையின் ஆரம்பம்


எந்த எழுத்தில் தொடங்குவது
எனத்துவங்கி,
எண்ண முடிச்சுகளால்
கொஞ்சம் நீண்டு...
நினைவுகளிலும், பிரிவுகளிலும்
அகன்றும், குறுகியும்
அவனின் அவதானிப்பிலும்,
சிறிது நிதானிப்பிலும் வளர்ந்து...
காற்புள்ளிகளையும் தாண்டி
ஏதோ ஒரு புள்ளியில்
முற்றுப்புள்ளிகளோடு முடிவுறுகின்றன...
குழப்பங்களும்,
ஆரம்பிக்கும் ஒவ்வொரு கவிதைகளும்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

உப்புமா செய்வது எப்படி?? (அப்படின்னா??)

உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான சமையல் சமாச்சாரம் உப்புமா தான்... யார் சொன்னா?? நான் தான் சொல்றேன்... ஏன்னா தண்ணி கம்மியா போனாலும் பிரச்சனை, தண்ணி அதிகமா ஆனாலும் டம்ப்ளர்ல ஊத்தி குடிக்கிறமாதிரி ஆகிடும்... இவ்ளோ கஷ்டமான இந்த உப்புமா செய்யறது எப்படின்னு உங்களுக்கு நான் சொல்லப்போறேன்னு நினைசீங்கன்னா அதுதான் தப்பு... ஏன்னா என்னைவிட நல்லா சமைக்கிற நிறைய பேர் இங்க இருக்கீங்க எனக்கு தெரியும்... அதனால இத்தகைய வரலாற்று புகழ் மிக்க உப்புமாவ நான் எப்படி செஞ்சேன்னு தான் சொல்லப்போறேன் வித் டிப்ஸோட... (என்ன கொடும சரவணா??)

தேவையான பொருட்கள்லாம் உங்களுக்கே தெரியும்.. ஆனா, முதல் முதல்ல சமைக்கரவங்களுக்கு அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி அவசரமா சமையல் கத்துக்கரவங்களுக்கு அவசியமான பொருட்கள் என்னென்னன்னு சொல்றேன்...

1.முதல்ல ஒரு செல்போன். நிஜமா தாங்க... அதுல எந்நேரமும் மெசேஜோ, காலோ வந்துகிட்டே இருக்கணும்... அதுவும் அவரோடதா இருந்தா டபுள் ஓகே... இது பின்னாளில்.. அதாவது, கல்யாணத்துக்கு பிறகு ஏன் உப்புமா ஒழுங்கா செய்யலைன்னு அவர் கேள்வி கேட்கும் போது, நான் கலைய கத்துக்கும் போது உங்களோடு தொலைபேசியதால் தான் முழுமையா கத்துக்க முடியலன்னு பழி போட வசதியா இருக்கும்... (இந்த ரகசியமெல்லாம் உங்களுக்கு மட்டும் அவர்கிட்ட அனாவசியமா சொல்லி உஷார் பண்ணிடாதீங்க)...

2.அப்பறம் ஒரு அண்ணன். (அதுவும் எனக்கு (இளிச்ச) வாய்..ச்ச மாதிரி... எதுக்குன்னா வெங்காயம் கட் பண்ணி கொடுக்க.. அப்பறம் உப்பு சரி பார்த்து சொல்ல... இதுவும் ஏன்னு சொல்றேன்.. சப்போஸ் நீங்க பண்ண உப்புமா கன்றாவியா இருந்துதுனா (கண்டிப்பா அப்படிதான் இருக்கும்) அதுக்கு கண்டிப்பா திட்டு விழும்.. அப்போ, நாம தப்பிக்க நல்ல வழி இது தான்... உடனே நீ வெங்காயம் கட் பண்ணி கொடுத்ததுதான் சரி இல்ல... அதான் உப்புமா இப்படி ஆயிடிச்சின்னோ... அல்லது, நீ போட்ட உப்பு பத்தல இல்லன்னா என் உப்புமா தேவாமிர்தம் (த்தூ...) மாதிரி இருக்கும்ன்னோ வாதாடலாம்.... )

3.அப்பறம் இன்னுமொரு ஜீவன் இருக்கட்டும்.. அதுவும் உங்களைவிட சின்னவனா.. (எதுக்கா?? நாம செஞ்சத ருசி பார்க்க தான்.... :-(( கண்டிப்பா நாம செய்யறத பக்கத்துல இருந்து பார்த்த அண்ணனுக்கு அதை சாப்ட்டு பார்க்கும் துணிவு இருக்காது... அதனால வேற ஒரு ஜீவன தான் இதுக்கு தேடனும்... அதுவும் கிடைச்சாச்சுன்னா உப்புமா ரெடி... )

4. இன்னுமொரு முக்கியமான விஷயம் தவறி கூட அந்த உப்புமாவ நீங்க சாப்டுடாதீங்க ஏன்னா தற்கொலையும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே...!!

டிஸ்கி1: பதிவு முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல.

டிஸ்கி2:உண்மைக்கதையோ, சொந்தக்கதையோ அல்ல.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

நெய்விளக்கு


காலைத்துயிலெழ,
காட்டுமல்லி பூக்க,
கடிதங்கள் வந்து சேர,
கனவுகளில் கூட நான் சிரிக்க,
தாலியையும்,
தன் கணவனையும் காப்பாற்ற,
பண்டிகைகள் முதல்
பலகாரங்கள் வரை சிறக்க,
தன்னைவருத்தும் தன்னிலிருந்து
என்னைப்பிரிக்கும் திருமணம்
என எல்லாவற்றிற்கும் நம்புவாள்
குளத்தங்கரை அய்யனாருக்கு வாங்கி ஏற்றும்,
இரண்டு ரூபாய் நெய்விளக்கை...
தன் பெருமை தானறியாத,
என் அம்மா....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது