கனவுகள் விற்பனைக்கல்ல...


கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்....
வாழ்வின் துவக்கப்புள்ளியினின்று
தள்ளியிருக்கிறேன்...
விடுபட வரமளி...
இன்றைய எந்நிலை உணர்த்த
எனக்கும் வாய்ப்பளி...
ஏனெனில்,
உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு
உடன்பட்டிருக்கிறேன்....
என்னில்,
உனக்கான விதிமுறைகள்
இன்னும் தளர்ந்தப்பாடில்லை....
எனினும்,
மனதில் மட்டும்
மாட்டிவைத்துள்ளேன்,
என் கனவுகள் எதுவும்
விற்பனைக்கல்லவென்று...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

மழைக்கம்பிகள்


தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிலிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....
எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?


-அன்புடன்,
ஸ்ரீமதி.

பக்கத்து வீடு


தனியே ஆடும் ஒற்றை ஊஞ்சல்,
பூத்து, வாடி, உதிரும் மஞ்சள் ரோஜா,
நீளமான தாழ்வாரத்தின்
ஆள் வாசனையற்ற தூண்கள்,
மகிழ்ச்சிக்கென விலைக்கொடுத்து
தனிமையே கொண்டு சேர்க்கும்
தகவல் தொழில்நுட்பங்கள்,
விடிந்துவிட்ட எதோவொரு காலையின்
அவசர அயல்நாட்டு அழைப்புகள்,
சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்...

டிஸ்கி: பரிசல் அண்ணாவின் இன்றைய இந்த பதிவின் தாக்கம்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கவிதை தூண்டும் வரிகள்

கவிதை தூண்ட வரிகள்;
வரிகள் கோர்க்க வார்த்தை;
வார்த்தை தோன்ற வாழ்க்கை;
வாழ்க்கை சிறக்க காதல்;
காதல் பருக சிறு ஊடல்;
ஊடல் முடிக்குமொரு மௌனம்;
மௌனம் கலைக்கும் ஒரு கவிதை;
கவிதைத் தூண்ட வரிகள்
வேண்டும்.............

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வேறு

பேசினோம்
கேட்காமல் கடந்தது
காலம்...
~*~
ஆளுக்கொரு வார்த்தை
வாழ்க்கை...
~*~
மனப்போராட்டம்
டிவியில் கிரிக்கெட்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

வட்டத்திற்குள் பெண்..[எச்சரிக்கை: தொடர் பதிவு]

முன் குறிப்பு: இது என்னோட வழக்கமான பதிவு இல்ல... கவிதை வேண்டுவோர் நேற்று போட்ட இடுகையை படித்துக்கொள்ளவும்.

'வட்டத்திற்குள் பெண்' தலைப்பே எனக்கு புரியல... அதென்ன வட்டத்திற்குள் பெண்?? ஏன் சதுரத்திற்குள் பெண்ணுன்னு இருக்கக்கூடாதான்னு ரொம்ப யோசிச்சு.... அப்பறம் கண்டுபிடிச்சேன் சதுரத்திற்கு மூலை (மூளை) இருக்கு... வட்டத்திற்கு தான் இல்லைன்னு... இப்படி தான் பல தேவையில்லாத, இன்னும் சொல்லப்போனா வட்டம் போல மூலை (மூளை) இல்லாத பல விஷயங்கள்ல தன்னை மாட்ட வெச்சிகிட்டு வெளிவரத் தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்காங்க, இல்ல தவிக்கவிடறாங்க...

பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? எனக்கு ஒண்ணுமே புரியல...

அவங்களும் நம்ம கூட நம்மள மாதிரி பிறந்தவங்கதான்னு நினைச்சாலே போதும்.... ஆனா, பெண்களே அப்படி நினைக்கிறதில்ல... என்னவோ தான் ஒரு தனிப்பிறவின்னும், தியாகத்தின் மறுஉருவம்னும் நினைப்பு... பழைய சாதத்துலையும், ஆறு முழம் புடைவைலையும் தன்னோட ஆசைகளையும், ஆயுளையும் முடிச்சிக்கிறதுதான் அல்லது முடியறதுதான் தனக்கு பெருமை... அப்பதான் இந்த உலகம் தலைல வெச்சுக்கொண்டாடும்ன்னு நினைப்பு....

இன்னமும் பல பெண்களுக்கு கல்யாணம் செஞ்சுக்கரதுதான் வாழ்க்கைல செட்டில் ஆனதுக்கு அர்த்தம்ன்னு நினைச்சுக்கறது வேதனையான உண்மை... 'கணவன் கிரிக்கெட்ல ஜெயிச்சா காலர துவைச்சது நாந்தான்'ன்னு பெருமைப்பட்டுக்கற பெண்கள் தான் அதிகம் நாட்டுல... அவங்கள சொல்லி தப்பில்ல... பெண்கள மகள்களாகவே வளர்க்கப்படுவதில்லை.... ஏதோ ஜல்லிக்கட்டுக்கு காளைய ரெடி பண்ற மாதிரி கல்யாணத்துக்கு ரெடி பண்றாங்க.....

எனக்கு இந்த தலைப்பிலேயே உடன்பாடில்ல... ஏன் பெண்ணுன்னு பிரிச்சி பேசனும்ன்னு தோணுது?? அதான் இப்படி... இந்த பதிவ நான் யாரையும் புண்படுத்தறதுக்காக எழுதல... இந்த பதிவு எதுக்கு ஆரம்பிச்சாங்க?? இதுவரைக்கும் இதுல என்ன எழுதினாங்க?? எதுவுமே எனக்கு தெரியாது... இந்த தலைப்புல எனக்கு என்ன தோணித்தோ, அத இங்க எழுதிருக்கேன்... அதுத் தவிர யார் மனசையாவது புண்படுத்தியிருந்தேனா... தயவு செய்து மருந்து வாங்கி தடவிக்கோங்க.... இந்த தொடர் பதிவுக்கு அழைத்த பாவத்துக்காக சரவணன்கிட்ட காசு வாங்கிக்கோங்க...

சரவணனுக்கு:- சரவணா! நீ இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நாளிலிருந்து நானும் யோசிக்கிறேன்... யோசிக்கிறேன்... யோசிச்சிகிட்டே இருக்கேன்.... எனக்கு இதத் தவிர வேற எதுவும் தோணல... மன்னிக்கவும்.. :-((

கவிதை இருக்கும்ன்னு நினைச்சு வந்தவங்களுக்கு:- நல்ல தலைப்ப கொடுத்து எழுத சொன்னா... அத வெச்சு பெண் பூ போன்றவள்... பிரிட்ஜ்ல வெச்சிருந்தா ரெண்டுநாள் கழிச்சுக்கூட யூஸ் பண்ணிக்கலாம்ன்னு கவிதைங்கற பேர்ல பூசி மெழுக எனக்கு விருப்பமில்ல... சாரி...

யாரையும் இத தொடர கூப்பிடவும் ஆசையில்ல... சாரி...

டிஸ்கி: லேபிள்ல 'பதிவர் சதுரம்'ன்னு போட்ருக்கேன்... வட்டத்துக்கு மூளை இல்லன்னு சொல்லிட்டு, நானே பதிவர் வட்டம்ன்னு போட்டா தேவையில்லாத ஆட்டோக்களை சந்திக்கவேண்டியிருக்கும்கற காரணத்தால்....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

குறிப்புகளாய் சில கவிதைகள்

உனக்கான கவிதைகளை
குறிப்பெடுத்துக்கொண்ட கைப்பேசி
இப்பொழுதெல்லாம்
சிணுங்குவதே இல்லை....
பிரிவுக்கவிதைகளை
காகிதத்தில் உமிழ்ந்தப்பின்....

பறந்துவிட்ட காகிதத்தில்
குறித்துவைத்த வார்த்தைகள்
மறந்துவிடுமுன்
முடித்துவிட வேண்டும்
கவிதையை....

வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...

கண்கள் எரிய
இரவில் கோர்த்துவிட்ட
கவிதைகளால்
வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....

படித்துமுடித்த புத்தகத்திலிருந்து
குறிப்புகளாய் வந்து விழுந்தன
கொஞ்சம்
கவிதைகளும்,
நிறைய
வார்த்தைக் குவியல்களும்...

முழுவதும் மொழியாத
பொழுதுகளில்
குறிப்புகளாய்
சில கவிதைகள்...-அன்புடன்,
ஸ்ரீமதி.

ரசிக்கத் தெரியாதவனின் கவிதை

கவிதை ரசிக்கத் தெரியாதவனின்
கண்களிலிருந்து கவிதையைக் காண
எத்தனித்தேன்
சில வார்த்தைகள்
என்னையும் அறியாமல்
கவிதைக்குள் இழுக்க
பெரும் பாடுடன் நான் வெளிவருவதும்,
உள்ளிழுப்பதும் தொடர்ந்தது
இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....-அன்புடன்,
ஸ்ரீமதி.

சந்திப்புகள்


கலைந்துவிட்ட கேசத்தை
சரி செய்ய சொல்லியிருக்கலாம்...
நெற்றி திலகத்தை
நேர்ப்படுத்த மொழிந்திருக்கலாம்...
தொலைந்துவிட்ட குங்குமத்திற்கான
காரணம் வினவியிருக்கலாம்....
வளர்ந்துவிட்ட நகங்களை சீர்ப்படுத்த
வழிமுறைகள் பகன்றிருக்கலாம்....
அங்கு,
அவளின் மடியில் அழும்
அந்த குழந்தையின் உச்சி முகர்ந்து
வேடிக்கைக்காட்டியிருக்கலாம்...
என் துறையினை சார்ந்து
எங்கோ ஓர் மூலையில்
இருக்கும் காதலனிடம்
கேட்ட பெண்ணின்
சந்தேகம் தீர்த்திருக்கலாம்...
முன்பின் முகமறியாத எங்களின்,
எதிர்ப்பாராமல் ஒன்றாக அமைந்துவிட
இந்த பயணத்தில்,
எதுவும் செய்யயியலவில்லை என்னால்...
எல்லாவற்றிற்குமாய்
ஒரு சிறு புன்னகையும்,
இந்த கவிதையும் தவிர...


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வணக்கம்..! உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்... 'சந்திப்புகள்' என்னுடைய 100-வது பதிவு. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு (எப்படி இவ்ளோ பதிவு போட்டேன்னு இல்ல ;-)) இவ்ளோ சீக்கிரம் எப்படி உங்க மனசுல எல்லாம் இடம் பிடிச்சேன்னு தான்... சாதாரணமா வலையுலகத்துக்கு வரவங்க எல்லாம் சொல்ற டையலாக் தான்... "நான் அதிகம் யார்கூடயும் பேசமாட்டேன்... இங்க வந்ததுக்கு அப்பறம் தான் பேச கத்துக்கிட்டேன்"-னு.. ஆனா நான் அப்படி இல்லைன்னாலும் நல்லா பேச, பழக இங்க வந்துதான் கத்துகிட்டேன். அந்த பெருமை எல்லாம் உங்களையே சாரும். ரொம்ப சீக்கிரம் பல நல்ல உள்ளங்கள சம்பாதிச்சிருக்கேன்.. :-)) ம்ம்ம் அப்பறம் இவ்ளோ நாள் நான் போட்ட மொக்கை எல்லாம் தாங்கிகிட்டு இவளும் ரொம்ப நல்லவன்னு நம்பி வந்து படிச்சிட்டு கமெண்ட்டிட்டு போனவங்களும், முதல் முதல்ல நான் தமிழ்மணத்துல சேர ரொம்ப உதவியா இருந்த நிஜம்ஸ் அண்ணா, தமிழ்ப்ரியன் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா அவர்களுக்கும் (இப்போல்லாம் ஏன்னு தெரியல நிஜம்ஸ் அண்ணா வெறும் ஸ்மைலியோட போயிடுறார்.. :-(( ) இவ்ளோ நாள் நான் எழுத ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் என் நன்றி! நன்றி! நன்றி!

வெறும் நன்றி மட்டும் சொல்லி உங்களை எல்லாம் பிரிக்க விரும்பல.. சோ கூடிய சீக்கிரம் உங்களுக்கெல்லாம் ட்ரீட் வெக்கிறேன்.. இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-))) ஒவ்வொருத்தர் பேரோடவும் நன்றி சொல்லனும்ன்னு தான் ஆசை... அப்பறம் பதிவு பெரிசா போச்சுன்னு அடிக்க வந்துடுவீங்க.. :-(( அதனால இதோட இந்த நன்றி நவிலல் படலத்த முடிச்சிக்கிறேன்... பை..! :-)


-அன்புடன்,
ஸ்ரீமதி.

வேலிப் பூக்கள்

(புகைப்படம்: TKB காந்தி)

சாலை இருமருங்கிலும்
கிளை விரித்து பரவியிருந்தது..
ஆரஞ்சும், சிவப்பும் கலந்திருக்க
அந்திவேளை ஞாயிறை ஞாபகப்படுத்தியது...
பொம்மை இழந்து
கண்மை கலைய
அம்மா பின் சென்ற பிஞ்சுக்கும்,
காதல் இழந்து
தனியாய் தவிக்கும் அவளுக்கும்,
மல்லிகை மட்டுமே
கூந்தலில் சூடும்
வழக்கம் கொண்ட என் அம்மாவுக்கும்,
கணவன் இழந்த
அடுத்த வீட்டு பெண்ணுக்கும் என,
எல்லாம் ஓய்ந்துவிட்ட
இந்த வேளையில் பூத்திருக்க வேண்டாம்
சாலையோர வேலிப் பூக்கள்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் தோய்ந்து


(புகைப்பட உதவி: TKB காந்தி)

தனித்து நின்ற தனிமையை
எரித்துவிட்டு போனது
உன் பிரிவு;
சாம்பல் மட்டும்
சாயம் போகா
உன் நினைவுகளாக
என்னில்.....

போட்டதும் கலைந்த
படுக்கையும்,
கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,
சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றன
இரவுகளை....

உன்னை நினைத்து
உறங்கிவிட்ட இரவுகளில்
கவிதைகளெதுவும் கைவரவில்லை...
மைதோய்ந்த காகிதங்களும்,
கொஞ்சம் மையும்
மட்டும் கோலமிட்டிருந்தது,
உன் காதலை
என்னைச் சுற்றி....

தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வேறு

நள்ளிரவு நேரத்தில்
கைப்பேசி வெளிச்சத்தில்
கைவலிக்க எழுதிய
நலம் குறித்த
அம்மாவுக்கான கடிதத்தை
கிழித்தெறிகிறேன்
அறைத்தோழியின்
"சுகந்தன்னே?"-வில்...


காடு, மலைகளையும்
காட்டருவிகளையும்
இன்னப்பிற
இயற்கை நிகழ்வுகளையும்
நட்சத்திர, வெண்ணிலவுகளையும்
ரசிக்க முடிந்தது
மின்சாரம் தடைபடாத
முழு இரவின்
கனவில்....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

அம்மாவின் வாசனை


நகம் வெட்டிக்கொள்ளா
ஞாயிற்று கிழமைகளும்..
கலைந்த கூந்தலின்
சீகைக்காய், தேங்காய் எண்ணெய்
நறுமணங்களும்....
உன்னால் முணுமுணுக்கக் கற்றுக்கொண்ட
பழைய பாடல் வரிகளும்...
உள்ளங்கையின் இளஞ்சிவப்பு
மருதாணி நிறமும்...
மார்கழி மாதத்து உதட்டு வெடிப்பின்
நெய் பூசிய பளபளப்பும்...
வெளிச்சம் தொலைத்த இரவு
மெழுகு உருகல்களின்
கைச்சுடும் தீயும்....
புடவை முந்தானையின்
நனைந்துவிட்ட பாகமும்...
என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

எனக்கென்று ஒரு வானம்...


எனக்கென்று ஒரு வானம்,
துரோகங்களின் நிழல்கள் படியாமல்...
அங்கு, என்
விண்மீன்களை நாற்றுகளாக்கி,
விளைநிலங்களில்
வெண்ணிலாக்களை ஊடுபயிராக்கியிருந்தேன்...
வானம் தொட்டுப்பறந்த
பறவையின் சிறகுகளில்
கொஞ்சம் சிக்கி
அதன் எச்சங்களில்
கொஞ்சம் பூமி பார்த்தேன்....
கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...
அவ்வப்பொழுது
மின்னல் கீற்றுகளை அருவிகளாக்கி,
மலைகளை மாலைகளாக்க
வார்த்தைகளைக் கொஞ்சம் வழியவிட்டேன்...
கவிதை அமைந்தது...
சாகாவரம் பெற்ற கவிதைகளனைத்தும்
இப்பொழுது,
மரங்களாகி நிற்கிறது
மீண்டும் என் வானம் தொட....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

நர்சிம் அண்ணாவுக்காக.....

இன்னைக்கு நான் இத எழுத காரணம் நர்சிம் அண்ணா ரெண்டு நாளா போட்ட இந்த பதிவுகள் தான். அதுக்கு என்னன்னு கேட்கறீங்களா? இருக்கு... கடைசில சொல்றேன்.. இப்போ வலையுலகத்துல கொஞ்ச நாளாவே இந்த புத்தகங்கள பத்தின பதிவுகள் அதிகமா இருக்கு. பரிசல் அண்ணா, கார்க்கியோட இந்த பதிவுகள். இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம் தான். என்னென்ன புத்தகங்கள் படிச்சிருக்காங்க, நாம என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம், எதை எல்லாம் இன்னும் படிக்கல, இப்படி பல விஷயங்கள் தெரிஞ்சிக்க உதவுது. ஓகே., விஷயத்துக்குவா.. அதானே?? இருங்க சொல்றேன். அது வேற ஒன்னும் இல்ல எங்க வீட்லயே அதிகம் படிச்ச படிப்பாளி நான் தான் (சிரிக்கக்கூடாது..). பாட புத்தகங்கள் தவிர்த்து கைல கிடைக்கிற எந்த பேப்பரா இருந்தாலும் படிப்பேன். சக்கர கட்டி வந்த பேப்பர படிக்கிறேன்னு சர்க்கரை கொட்டி, அம்மா தலைல குட்டி... ஓகே விடுங்க...

இந்த படிக்கிற பழக்கம் எப்போ வந்ததுன்னு எனக்கு தெரியல.. என் அம்மாவோ, என் அப்பாவோ, மாதவனோ (அப்போவெல்லாம்) இப்படி புக் வெச்சிகிட்டு படிச்சு நான் பார்த்ததில்ல.. "கழுத வாய பார்த்து நெல்ல கோட்ட விட்ட கத" (இந்த கதை தெரியாதா??)தான் நடக்க போகுது உனக்குன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.. எப்படி இப்படி ஆனேன்னு தெரியல.. ஆனா, சின்ன வயசுலேயே பாட புத்தகமெல்லாம் வாங்கினதும் முதல் வேலையா என்னோட, அண்ணாவோட நான்-டீட்டெயில் எல்லாத்தையும் படிச்சிட்டு தான் வெப்பேன்.

அப்பறம், ஆறாவது படிக்கும் போதுன்னு நினைக்கிறேன்.. தமிழ் பாட புத்தகத்துல பாரதிதாசனோட 'இருண்ட வீடு' பத்தி படிச்சிட்டு லைப்ரரி மூட இருந்த அவசர அஞ்சு நிமிஷத்துல படிச்சேன். அப்பறம் அந்த லைப்ரரியனுக்கு (ஒரு அக்கா) என்ன பிடிக்காம போச்சு... (பின்ன பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை புக் எடுத்தா??) இப்படி ஆரம்பிச்ச என் பழக்கம் சுஜாதா படைப்புகலால நல்லா வளர்ந்து வந்தது. ஆனாலும், இது வரைக்கும் எல்லாராலையும் பேசப்படற பல பிரபல எழுத்தாளர்களோட படைப்புகள நான் படிச்சதில்ல. ஒரு பதிவுல சென்ஷி அண்ணா கேட்டதா ஞாபகம் பாலகுமாரன் எழுத்துகள் படிப்பீங்களான்னு?? அவர் புத்தகமெல்லாம் பார்த்திருக்கேன் (தாடியோட தானே இருப்பார்?) ரொம்ப பெரிசு பெரிசா இருக்கும்.. வீட்ல ஒத விழும் இவ்ளோ பெரிசா எடுத்துட்டு போனான்னு அதை அப்படியே விட்டுட்டேன்.

எனக்கும் சுஜாதாவுக்குமான பரிச்சயம் (ம்கும்..) அதிகமானது கல்லூரி நாட்கள்ல தான்... அவரோட எல்லா நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாத்தையும் படிச்சிட்டேன்னு சொல்ல முடியாது... ;-)) ஆனா, ஸ்ரீரங்கத்து தேவதைகள், வைர கல், காயத்ரி, நைலான் கயிறு, பத்து செகண்ட் முத்தம், எதையும் ஒரு முறை, ஓரிரு எண்ணங்கள்... இன்னும் பல முதல் அட்டை இல்லாத, சில பெயர் தெரியாத அப்படின்னு படிச்சிருக்கேன்.

அப்பறம் கவிதை புத்தகங்களுக்கு எப்பவும் முதலிடம் உண்டு. சும்மா கலந்து கட்டி படிப்பேன். வைரமுத்து, கவிக்கோ.அப்துல் ரஹ்மான், பா.விஜய்(உடைந்த நிலாக்கள் பாகம்-II), மீரா(கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்) ,தபூ சங்கர், அறிவுமதி (இவரோட 'நட்புகாலங்கள்' மட்டும் ஆயிரம் முறைக்குமேல வாசிச்சிருப்பேன்.) இதெல்லாம் ஓசில படிச்சது.. (மீன்ஸ் லைப்ரரில). ஆனா, எனக்கே எனக்குன்னு வந்த உயர்ந்த பரிசுகளா இன்னைக்கும் நினைக்கறது பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் (இருண்ட வீடு, குடும்ப விளக்கு, எதிர்பாரா முத்தம்), அப்பறம் திருக்குறள்.

கல்லூரி காலத்துல ரமணி சந்திரன் நாவல்கள் என் தோழிகள் மூலம் பழக்கம். சும்மா உளுந்து உளுந்து படிப்பாளுங்க. என்னதான் இருக்குன்னு வாங்கிபார்த்ததுல சத்தியமா சொல்றேன் அதுல உருப்படியா ஒண்ணுமே இல்ல. இப்பவும் பிடிச்ச ஒரே கத "லாவன்யா" (நல்லவேள அந்த ஆன்டி எழுதறதில்ல போல இப்போவெல்லாம்...)


'பொன்னியின் செல்வன்' படிச்ச குஷில 'சோழ நிலா' எடுத்தேன். 'இப்படியே போயிட்டு இருந்தா நீ காலேஜ் முடிக்கமாட்டன்'னு சொல்லி என் தோழிங்க பிடுங்கி வெச்சிட்டாங்க. (அப்போ எனக்கு பைனல் செமஸ்டர்..) அப்பறம் அதை பார்க்கவே முடியல.. :-(( காலேஜ் முடிச்சு வந்து இந்த ரெண்டு வருஷத்துல நான் படிச்ச புத்தகங்கள் கதாவிலாசம்(எஸ்.ரா), கற்றதும் பெற்றதும், வந்தார்கள் வென்றார்கள், சினிமா சினிமா, மால்குடி டேஸ், இப்போ மறுபடியும் ஓரிரு எண்ணங்கள். இவ்ளோ தாங்க நம்ம புத்தக அறிவு.

இப்போ நர்சிம் அண்ணா விஷயத்துக்கு வருவோம்... நானும் இந்த ரெண்டுநாளா அவர் போடற பதிவ படிக்கிறேன்... படிக்கிறேன்.... படிக்கிறேன்... படிச்சிகிட்டே இருக்கேன்... எனக்கு கொஞ்சமும் புரியவே இல்ல... பிரபல பதிவர கேட்டா அதெல்லாம் பின் நவீனத்துவம் உனக்கேதுக்குன்னுட்டார்... :-((

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கண்ணாடி துகள்கள்

சிதறிய
கண்ணாடி துகள்களென
என்னிதயம்
உன்னைக்
கடந்த பின்..!

உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...

காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்...

திருமணத்திற்கு
முந்தைய
காதலென உறுத்தியது
ஜீன்ஸ் அன்று
கால் கொலுசு...


கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது