பயணங்கள்

"நான் ரொம்ப சாதாரணமான பொண்ணு எல்லார் மாதிரியும் சிரிக்கும் போது சிரிச்சு, அழும்போது அழுது, கோவப்படும் போது கோவப்படறேன் அவ்ளோ தான்... ஒரு வேல நான் கோவப்படற, சிரிக்கிற சூழ்நிலைகள் வேணும்னா என்ன மத்தவங்ககிட்ட இருந்து வித்தியாசமா காட்டலாம்.... கும்பலான ட்ரைன்ல ஏறிட்டு என்ன இடிக்கிராங்கன்னு கோவப்படறது பைத்தியக்காரத்தனம்ன்னு நான் நினைக்கிறேன்", மது பேசினால் இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். காலை நேர சென்னை ரயிலின் நெரிசலை ரசிக்கும் ஒரே ஜீவன். ரசிக்கத்தான் வாழ்க்கை என வாதிக்கும் அழகான தேவதை.

"சரி விடு டி.. நீ இப்ப அம்மா சொன்ன விஷயத்துக்கு என்ன பதில் சொல்ற?", அழகான பெண்ணுக்கு தோழியாக இருப்பது தொல்லையான வேலை என வாதிடும் அழகான தோழி அல்லது அழகியின் தோழி வித்யா.

"நான் என்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கிற?"

"அப்போ நீ அம்மா சொல்ற பையன நீ கல்யாணம் பண்ணிக்க போறதில்லையா??"

"நான் எப்போ அப்படி சொன்னேன்?"

"குழப்பாம பதில் சொல்லு.... அவன் அழகா இருக்கான்னு நீ தானே சொன்ன?? அப்பறம் ஏன் வேண்டாம்ன்னு சொல்ற??"

"இப்பவும் சொல்றேன் அவன் அழகா இருக்கான்.... ஆனா, அழகா இருந்தா பிடிக்கனும்னு அர்த்தமில்லை... பிடிச்சிருந்தா அழகா தான் இருக்கனும்கற கட்டாயமில்லை..."

"ஹைய்யோ ஆள விடு... இப்போ அம்மா என்ன கேட்டா என்ன சொல்லட்டும்?? அதை மட்டும் சொல்லு..."

"நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லு..." பெரு மூச்சு விட்டாள் வித்யா.

மதுராவிடம் பேசி ஜெயிப்பது சுலபமில்லை. சில நேரம் இவள் பேசினாலே ஒழிய நாள் நன்றாக இருப்பதாக தோன்றாது.

*********************************************************************
"என்ன மதுரா எதுக்கெடுத்தாலும் சிரிக்கற? எப்படி உன்னால இப்படி எல்லா விஷயத்தையும் சிரிச்சு ஏத்துக்க முடியுது?"

"சிம்பிள்... நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."

"திமிரு அதிகம் உனக்கு.."

"இந்த ஜோக் கூட ரசிக்க தெரியலேன்னா உனக்கு வயசாகிடிச்சுன்னு அர்த்தம்...", மறுபடியும் சிரித்தாள். கோவத்தோடு அவன் அவளை கடந்துவிட்டிருந்தான்.

***********************************************************************

"என்ன மது? என்ன யோசிச்ச?"

"இதுல யோசிக்க என்ன இருக்கு? அந்த பையனே எனக்கு ஓகே.."

"என்னடி சொல்ற?"

"ஆமா... எப்படியா இருந்தாலும் புது இடம், புது மனுஷங்க, புது விதமான சவால்கள்ன்னு நான்.. இல்ல நாம எங்க போனாலும் சமாளிச்சு தானே ஆகணும்?? அது ஏன் அம்மா, அப்பா இஷ்டப்படி இருக்கக்கூடாது? அதான் முடிவு பண்ணிட்டேன்.. ஓகே சொல்றதுன்னு.."

"உன்ன புரிஞ்சிக்கவே முடியல...".

சிரித்தாள்.

"ஐயோ இந்த ட்ரைன் வேற ஏன் தான் இவ்ளோ லேட் பண்ணுதோ?"

"எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."

"வித்தியாசமா இருக்க.."

"இல்ல... அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... நான் ரொம்ப சாதாரணமானவ.."

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கண்கள்+கனவுகள்

இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்...

பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....

தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து....

கண்கள்
கண்ணாடி ஜன்னல்
கனவுகள் பிரதிபலிப்பு
கண்ணாடி கொத்தும்
பறவை நீ...!

கனவுகள்
கருப்பு வெள்ளை
கண்கள்
ஏந்தும் அஞ்சனத்தால்...

* அஞ்சனம் - கண் மை.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

வேனிற்காலம்

"பை மம்மி"

"பை நிஷா... ம்ம் ஈவினிங் நீ டியூஷன் போக வேண்டாம்... ஸ்கூல்ல இருந்து நேரா வீட்டுக்கு வந்துடு..."

"ஏன் மம்மி??"

"ஒரு அங்கிள் உன்ன பார்க்க வராங்கன்னு சொன்னேன்ல??"

"ஹைய்யா ஜாலி... ஓகே மம்மி"

அலுவலகம் செல்வதில்லை என ஏற்கனவே செய்திருந்த முடிவை நினைத்து வருந்தினாள், காத்திருத்தலில் கணங்கள் யுகங்களாகும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால். முடிக்காத வேலைகளை முடிப்பதென முடிவு செய்தாள். மகேஷ் மாலை தாமதமாக வருவதை உறுதி செய்தாள். மணித்துளிகள் மெதுவாகக் கரைந்தது. கடிகாரத்தைத் தவிர மற்றவை எல்லாம் நகர்வதாகவும், தன் வேலையை செய்வதாகவும் நினைத்தாள்.

ஏதாவது படிப்பதென செய்திருந்த முடிவை மேஜை மேலிருந்த கடிதம் உறுதிப்படுத்தியது. இந்த இருபது நாட்களில் குறைந்தது இருநூருமுறை வாசித்து மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். எனினும், ஏதோ ஒன்றை இழந்திருந்தது போலிருந்தது அக்கடிதம்.


அன்புள்ள மதுமிதாவிற்கு (அவர்களுக்கு?!),

நலம். நலம் அறிய ஆவல். இன்னும் இரு தினங்களில் இந்தியா வரும் திட்டம் உள்ளது. சந்திக்க அவசியம் வருவேன். நிஷாவிற்கு என் ஆசிர்வாதங்கள்.

மற்றவை நேரில்.
இப்படிக்கு,
அருண்.

இன்று மட்டும் மணித்துளிகள் கரைக்க முடியாத கல் போலிருப்பதாக உணர்ந்தாள். நான்கு ஐம்பது என்பதை ஐம்பது முறை சரி பார்த்தாள். ஐந்து மணிக்கு அவனை சந்தித்துவிடுவாள். எதேட்சையாக கடப்பவரையும் இருமுறை திரும்பிப்பார்த்து அவனில்லை என்பதை உறுதி செய்தாள். புத்தகத்தை அணைத்தபடி வீடு வந்த நிஷாவும் பொம்மையுடன் ஐக்கியமாகியிருந்தாள்.

கலங்கிய கண்களை மறைக்க சமையலறையில் தஞ்சம் புகுந்தாள். அழைப்பு மணி அவனின் வருகையை உறுதிசெய்ய, நிஷா இரண்டாவது முறையாக உறுதி செய்தாள்.

"மம்மி யாரோ நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க..."

"நீ தான் நிஷா குட்டியா??"

"நீங்க தான் அருண் அங்கிளா??"

"என் பேர் உனக்கு தெரியுமா??"

"ஓஓ தெரியுமே... அம்மா சொல்லிருக்காங்க நீங்க என்ன பார்க்க வரீங்கன்னு.."

மதுவின் தேநீர் தயாரிக்கும் இடைவெளியில் நிஷா முழுவதும் அவனுடன் ஒட்டியிருந்தாள்.

"இது பார்த்தீங்களா நான் என்னோட ஸ்கூல் ஆனுவல் ஃபங்ஷன்ல ப்ரைஸ் வாங்கினப்போ எடுத்தது... அதோ அங்க ஃப்ரேம் பண்ணீருக்கே அதுவும் நானே வரைஞ்சது..."

"நீ நல்லா பாடுவியா??"

"ஓஓ நல்லா பாடுவேனே....!"

"ம்ம்ம் எங்கே பாடு.."

"ம்ஹும் மாட்டேன்..."

"ஏன்??"

"நீங்க ஏன் உங்க வீட்டு குட்டி பாப்பாவ கூட்டிட்டு வரல?? நான் விளையாடலாம்ன்னு நினைச்சேன்... ஆமா, அவங்க ஏன் அங்கிள் வரல??"

பல நேரங்களில் மௌனங்கள் சாதாரண வார்த்தைகளுக்கு ரணமான சக்தி கொடுத்து அனுப்பும் எந்நாளும் மாறாத வடுக்களை உண்டுபண்ணும் அவனின் வார்த்தைகளைப்போல்.

"எங்க வீட்ல குட்டி பாப்பா இல்ல"

"ஏன் இல்ல??"

"இல்ல அதனால இல்ல.."

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

"டாடி, மம்மி ரொம்ப அழறாங்க"

"சரி... நீ தூங்குடா மார்னிங் ஸ்கூல் போகணும்ல??"

"மது என்ன ஆச்சு??"

"அவர் கல்யாணமே பண்ணிக்கலங்க..."

விசும்பல் அழுகையாக வெடித்தது.
உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்பொழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

அழைப்பு


பிடித்தப் பாடலும்
வாத்தியங்களின் சத்தமாய்;
அடுத்த வீட்டுக்குழந்தை
அழுகையின் உச்சமாய்;
கண்மூடும் நேரம்
இமைகளும் முட்களாய்;
நாளேடுகளின்
விரும்பாத செய்தியாய்;
உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

படபடக்கும் கணங்கள்...

உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்.....

கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....

ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...

முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....

சிறுகதைகளின்
கருக்கொண்ட வரிகளென
முடிகின்றன முத்தங்கள்
இதழ்களில்.....

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்...

காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

நிச்சயிக்கப்பட்ட சொர்க்கம்

கனவுகள் சுமந்த
கவிதைகளால்
காகிதம் நிரப்பியிருந்தேன்....
மைப்பட்ட புத்தகத்தின்
பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது
கண்ணீரில் குலைந்த காதலால்....
எதேட்சையாக கண்களில்
பட்டுத்தொலைக்கும்
உன் பெயரும்...
நாம் சென்ற கடற்கரையின்
மணலில் தான்
இன்னும்
இன்றும் நீ நடைப்போடுகிறாய்
என்ற எண்ணங்களும்...
வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...
இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......
இருந்தபோது விரும்பி,
இன்று வெறுக்கும்
வாலாட்டும் ஜீவன் தானே அது??
.
.
.
.

பிரிவெழுத பிரியமில்லை...
.
.
எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

கவிதைகளும் தான்...

குமிழி உடைக்கும்
குழந்தையாயிருந்தேன்...
குற்றப்பத்திரிக்கைகள் சுமக்காமல்,
பருவம் கடந்தேன்...
எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்...
உன்மேலெனக்கு
காதல் என்றனர்...
தடைத் தாண்டிச் செல்லத்
திணவின்றி திரும்பிவந்தன...
நினைவுகளனைத்தும் நாடோடிகளாய்...
பின்,
தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...
ஏனோ, இப்பொழுதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

க(ன)ணப்பொழுதுகள்..!


உனக்காக காத்திருக்கிறேன்
காலங்கள் நீள்கிறது
தவம் கூட வரமே
காதலில்.....
காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...
ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....

மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....


காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது