காணாமல் போன கனவுகள்!


பட்டாம்பூச்சிகள் பிடிப்பது
பாவமென்றாய்,
மழையில் நனைந்த சிறகானது மனது..
வெயிலும், மழையும்
விரும்புதல் தவறென்றாய்..
கற்பனைக் காளான்கள் கருகின
ஒவ்வொரு மழைநாளிலும்...
இடைவருட எத்தனித்த
ஒற்றைப்பின்னல் கூடாதென்றாய்,
இரண்டானது
பின்னலும், மனதும்..
பால்ய நண்பனிடம் பழகுதல்
குற்றமென்றாய்,
நண்பர்கள் தொலைத்து
நான் மட்டும் நடைபோட்டேன்
நாட்கள் தள்ளி...
பிடித்த நிறங்களும்,
பணிகளும், பொழுதுபோக்குகளும்,
விளையாட்டுகளும்
என்னால் கண்டுகொள்ளப்படாமல்
உன்னால் திணிக்கப்பட்டது...
கனவில் மட்டுமே கைநிறையும்
மண்குடிசை மழலையின்
மாளிகை பொம்மையென
கண்ணீரில் பிரதிபலிக்கும்
செவ்வானமானது
என்னின் காதல் கனவுகள்
இதோ,
இன்று, வேறு பாதையை நோக்கி
என்னை செலுத்த தயார்படுத்துகின்றாய்
கடிவாளமிட்ட குதிரையென
கடக்க காத்திருக்கிறேன்
மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..
உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...

  • (02-03-09)உயிரோசை இதழில் பிரசுரமானது.


-அன்புடன்,
ஸ்ரீமதி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா..!


மாதவா...!!

* எனக்கு அண்ணனா பிறந்ததத் தவிர வேறெந்த புண்ணியமும் நீ செய்யாதிருந்திருந்தாலும்,

* என் பிறந்த நாளா இருந்தாலும், உன் பிறந்த நாளா இருந்தாலும் எனக்கும் புது டிரஸ் வாங்கித்தரனும் என்கிற நம்ம குடும்ப வழக்கத்த மறந்து நீ மட்டும் தனியா போயி உனக்கு மட்டும் டிரஸ் வாங்கிண்டாலும்,
*புது செல் போன் வாங்கின புதுசுல யாருமே போன் பண்ணலடின்னு சொல்லி பூத் போயி உனக்கே நீ மிஸ்டு கால் கொடுத்திருந்தாலும்,

*இந்த உடம்பு குறைய ஜிம்மும், வாக்கிங்கும் போயி, "நான் வாக்கிங் போறப்ப எல்லாம் வேப்பந்தளிர் சாப்புடுறேண்டி... அது உடம்புக்கு ரொம்ப நல்லது"-ன்னு நீ சொன்னத நம்பி நானும் உன்கூட வந்து, நீ சாப்ட்டது முருங்க தழை தான்னு நான் இருட்டுல கண்டுப்பிடிச்சாலும்,

* வாங்கின ரேங்க் ஷீட்ல எல்லாம் நானே உனக்கு அம்மா சைன் போட்டு தந்திருந்தாலும்,

* "நான் பாடி செகண்ட் ப்ரைஸ் வாங்கினேன் காலேஜ்ல" அப்படின்னு நீ சொல்லிக்கிட்டு திரியற அந்த போட்டில மொத்தமே ரெண்டு பேர் தான் கலந்துக்கிட்டாங்க என்ற உண்மை எனக்கு தெரிஞ்சாலும்,

*எப்போதும் உன் பேங்க் பேலன்ஸ் மட்டும் 0.00-ல இருந்தாலும்,

*நைட்டு 12 மணிக்கு உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கடமை உணர்ச்சியோட கால் பண்ணி என் தூக்கத்த கெடுத்திருந்தாலும்,

**நான் சொல்றது ஒன்னே ஒன்னு தான்....,

Happy Birthday to you.....
Happy Birthday to you.....
Happy Birthday to Madhavan.....
Happy Birthday to you.....

உனக்கு இது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம்... எப்பவும் உன் பிறந்தநாள் முடிஞ்ச மூணாவது நாள் மறக்காம போன் பண்ணி சாரி சொல்லி, வழிஞ்சு, அப்பறம் வாழ்த்து சொன்ன நீயா இப்படி பிறந்தநாள் அன்னைக்கே வாழ்த்து சொல்றதுன்னு... ஆனா, வாழ்க்கைல சில விஷயங்கள ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்காம நம்பிதான் ஆகணும்..

உனக்காக கவிதை எதுவும் எழுதிடக்கூடாதுன்னு நீ என்கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டதால பாடலாம்ன்னு நினைச்சேன்... ஆனா, "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி"-ங்கற பாடல் தேவை இல்லாம நினைவுக்கு வரதுனால... உனக்கு பிடிச்ச "என்னவளே அடி என்னவளே" பாடல உனக்கு டெடிக்கேட் பண்றேன்.... எனக்கு தெரியும் அது உன் செல் போன்லையே இருக்கு... என் சார்பா அத இன்னொரு முறை கேட்டுக்கோ...

அடுத்த பிறந்தநாளுக்காவது எனக்கும் டிரஸ் வாங்கித்தருவ என்ற ஆவலுடன்....

-அன்பு தங்கை,
ஸ்ரீமதி.

காதலர் தினமென...
உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...
நிறைய நீ;
கொஞ்சம் நானென
இன்னும் வாழ்கின்றன
காதலர் தினங்கள்..உன் தொலைப்பேசி
முத்தங்களுக்கெல்லாம்
மௌனமே காக்கிறேன்
பரிசுகளாக திருப்பித்தர
காதலர் தினத்தை
எதிர்பார்த்து...


வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...


இந்தக் காதலர் தினத்திலாவது
தந்துவிடுவாய்
என ஏக்கத்துடன் நான்...
பிரிவிற்கு பின்னும்
உன்னுடையதாகவே இருக்கும்
என்னிதயம்...


கடற்கரைக் காணும் போதும்,
கைக்கோர்த்த காதலர்கள்
கடக்கும் போதும்,
காதலர் தினப் பரிசுகளை
தோழி வரிசைப்படுத்தும்போதும்,
முள்ளென முளைத்து நிற்கும்
தனிமையை என்ன செய்ய??சிவப்பெழுத்துல இருக்கறவங்கல்லாம் சீக்கிரம் பச்சைக்கு மாற வாழ்த்துக்கள்... பச்சைல இருக்கறவங்கல்லாம் ஸ்ரீராம் சேனா கைல மாட்டியோ, இல்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லியோ சீக்கிரம் டும் டும் டும் ஆக வாழ்த்துகள்.... மொத்தத்துல....

எல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்...:-))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

அப்பாவும், நானும் அப்பறம் என் தமிழும்...

ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும்?? இது என்னோட முந்தைய மொக்க போஸ்ட் தலைப்பு... ஆனா, இப்ப நிஜமும் அதுதான்.. ஏற்கனவே சொன்னா மாதிரி இப்பல்லாம் பதிவு எழுதவே வரதில்ல... அட்லீஸ்ட் படிச்சு பின்னூட்டலாம்னாலும் அதுக்கும் டைம் கிடைக்கறதில்ல... வாட் டு டூ?? பார்த்தீங்களா நான் எழுதினது நாலு வரி கூட இல்ல.. ஆனா, அதுக்குள்ள எவ்ளோ ஆங்கில கலப்பு இப்படி தான் பேசிட்டு திரிஞ்சிட்டு இருக்கோம்.. (நானும் தான்)... ஆனா, முடிஞ்ச வரைக்கும் தமிழ்ல பேசி அத வளத்துட்டு (கொன்னுகிட்டு) இருக்கேன்... நான் பேசறதெல்லாம் தமிழே இல்லன்னு மாதவன் சொல்வான்... அவ்ளோ அழகு தமிழ் என்னோடது... இத நான் பெருமையா சொல்லல... என் தமிழையே இவ்ளோ கிண்டல் பண்றானே அப்போ மத்தவங்க பேசறத எவ்ளோ கிண்டல் பண்ணுவான்னு நினைச்சு சிரிச்சிக்கிறேன்... ;-))

அதோட என் தமிழ் அறிவு பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே... காணாகாக்குன்னு எழுதின மேதாவி நான்... இந்த புலம்பல்ஸ் எல்லாம் இப்ப எதுக்குன்னு கேட்கறீங்களா?? வேற ஒன்னும் இல்ல, நான் பாட்டுக்கு நானுண்டு, என் ஆணி உண்டுன்னு இருந்தேன்... அப்போ சும்மா இல்லாம ஜி அண்ணா போஸ்ட்ல போயி கும்மி அடிச்சேன்... நீ வேலையில்லாமதான் சுத்திகிட்டு இருக்கியான்னு சொல்லி அண்ணா தமிழ வளக்க நீதான் சரியான ஆள்ன்னு எனக்கு இந்த பொறுப்பக் கொடுத்துட்டார்... (சரி மேட்டர்க்குவான்னு சொல்றீங்களா?? அது தெரிஞ்சா நான் ஏன் இவ்ளோ எழுதப்போறேன்??;-))

நான் சின்னப் பொண்ணா இருக்கும் போதெல்லாம் (இப்பவும் தான்..;-)) சன் டிவில, இது ஆக்ஷன் வாரம்... இது அந்த வாரம்... இது இந்த வாரம்... (வாரம்.. வானரம் இல்ல... ஓகே??)... இப்படி ஏதாவது வரிசைல படத்த வாரா வாரம் (அப்பா எவ்ளோ வாரம்?? :O) போடுவாங்க... அது மாதிரி இது காதல் வாரம்.. எல்லாரும் காதல் பத்தி காதலர் தினத்த ஒட்டி எழுதிட்டாங்க... நானும் அது மாதிரி கவுஜ எழுதலாம்ன்னு நினைச்சேன்... (தப்பிச்சீங்க.. ;-))... ஆனா அண்ணா கூப்ட்டு இந்த பொறுப்ப தந்ததால, இத எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.... (நீ திருந்தவே மாட்ட... அதானே சொல்லப் போறீங்க??) ஆனாலும், உங்கள விடறதா இல்ல...

சரி நான் என்னதான் எழுதப்போறேன்னு சொல்லிடறேன்... வேற ஒன்னும் இல்லங்க புழக்கத்தில் இருந்து.. ஆனா, இப்ப அதிகம் உபயோகிக்கப்படாமல் இருக்கிற தமிழ் சொற்களா எழுதப்போறேன்....

நித்தம்- நிதம்- நிதந்தோறும்-தினந்தோறும்- அர்த்தம் புரிஞ்சிருக்கும்... நான் சின்ன வயசுல நித்தம்-ன்னு சொன்னதா ஞாபகம்... ஆனா, இப்ப எல்லாம் டெய்லி தான்... ;-))

முடிதல்- "எண்ணிய முடிதல் வேண்டும்".... அதே முடிதல் தான்.. இருந்தாலும் இத அதிகம் யூஸ் பண்றது 'தலைய முடிஞ்சிக்கோன்னு' தான்... இப்ப இத யாரும் உபயோகிக்கறதில்லன்னு நினைக்கிறேன்... பாஞ்சாலி சபதத்துலையும் "நறுநெய் பூசி முடியேன் யான்" அப்படின்னு திரௌபதி சொன்னதா வரும்.. பாரதியார் பாஞ்சாலி சபதம்...

இட்டு- 'மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்' , இது தமிழ் வார்த்தை தான்னு நினைக்கிறேன்... ஏன் இப்படி ஒரு சந்தேகம்னா, நான் எங்கயாவது இந்த வார்த்தைய யூஸ் பண்ணா 'அப்படின்னா என்ன?' அப்படின்னு கேட்கறவங்க அதிகம்... அதான், யோசிக்கிறேன்... இந்த வார்த்தைய அதிகம் யாரும் உபயோகிச்சு நான் பார்த்ததில்ல... நக்கீரர் யாராவது இருந்து, நெற்றிக்கண்ண தொறந்துடாதீங்க... ;-))

மாடம்- 'தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய'-ன்னு ஆண்டாளோட திருப்பாவை பாடல் ஒன்னு இருக்கு... தவிர மாடப்புறா... இதெல்லாம் குறிக்கறது இந்த மாடம் தான்... எங்க பாட்டி வீட்ல எல்லாம் திண்ணைக்கு மேல சுவர்ல சின்னதா ஒரு ஜன்னல் அல்லது இடம் மாதிரி இருக்கும்... குறைந்தபட்சம் அதுல ஒரு அகல் விளக்கு வைக்கலாம்... அதுக்கு தான் அத உபயோகிப்பாங்கன்னு நினைக்கிறேன்... இப்பவும் இத இப்படி தான் கூப்பிடுறாங்களா? இல்ல வேற ஏதும் சொல் வழக்கத்துல இருக்கான்னு தெரியல... மாடம் இல்லாத வீடுகள் தான் நான் இப்ப பார்க்கிறேன்.... :-((

அவ்ளோதாங்க என் அறிவுக்கு(?!) எட்டினது... :-(( இதுபோல இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கு.... அவற்றோட பின் நவீனத்துவத்தையும் பிசைந்து ஊட்ட நம்ம சரவணன அழைக்கிறேன்... நன்றி...!! வணக்கம்...!! :-))


பி.கு_1:சரி இவ்ளோ சொல்லிட்டு தலைப்புக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு சொல்லாம போனா என்ன அர்த்தம்ன்னு கேட்கறீங்களா?? என் அப்பாவுக்கு தமிழ் தெரியாது... (இப்போ தெரியும்)... நான் பிறந்து 5 வயசு வரைக்கும் சுந்தர தெலுங்க கேட்டு வளர்ந்தவ... அதனால், தவறிருப்பின் ஷமிக்கணும்... :-))

பி.கு_2: ம்ம் அப்பறம் இன்னுமொரு முக்கியமான விஷயம்... "இந்த வார்த்தையா?? இது எனக்கு நல்லாத் தெரியுமே....!!", "ஹை... இது எனக்கு ரொம்ப தெரிஞ்ச வார்த்தை...", "இதெல்லாம் புது வார்த்தைகளா??" இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் போடுவதை எதிர்க்கிறேன்... "அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!!" என்ற பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.. ;-))))))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-கவிதைகள்

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்

எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்

வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!

வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது

உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...

மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!

கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...

உன் பெயர் சுமந்த
பலகைக் கூட
காதல்
சின்னம் தான்

கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
காதலா??

பசுமரமாய் இருந்த
கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
காதலின் பிரிவால்...

உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி

உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

அதனால......


விரைந்தோடிய வேர்கள் மண்ணைப்பிளந்து, வரம்புமீறி, வான் பார்க்க மண்ணில் பரவியிருந்தது. தன் வளர்ச்சிக்காக நீரை யாசிக்கும் இந்த வேர்களில் அமர்ந்துதான், எனக்கான உயிராக நினைத்திருந்த அவள் பார்வைகளின் வருடல்களை யாசித்திருந்தேன். விழுந்திருந்த விழுதுகளில் ஒன்றென அவள் என்னை எண்ணியிருக்கக்கூடுமென்பது, ஏனோ அவள் என்னை உதாசீனப்படுத்தும் வரை அறிந்திருக்கவில்லை.

காலங்கள் கரைந்து காத்திருப்புகளின் கணக்குகளில் என்னின் பகல் பொழுதுகளும், இராப்பொழுதுகளும் என்னைக் கேளாமல் ஏறி அமர்ந்து பயணிக்கத்தொடங்கின. நீலம் தோய்ந்த மேகங்களுக்கு மத்தியில் நிலவின் தேய்பிறை மட்டுமே எனக்குக் காணக்கிடைத்த வினாடிகளிலெல்லாம் அவள் மீதான எல்லையற்ற காதலின் உச்சி மேலேறி நிற்கும் இன்றைய வெறுப்புகள் மட்டுமே மிஞ்சும்.

ஒவ்வொருநாளும் ஏடுகளில் நிரம்பும் வார்த்தைக்கூடுகளில் உன்னையோ, என்னையோ அல்லது நம்மில் நீ அற்ற என் காதலையோ, தேடும் முயற்சி அதனோடு சதையின் எச்சமென ஒட்டியிருக்கும். காற்புள்ளிகளை எல்லாம் தாண்டி, முற்றுப்புள்ளியினருகே செல்ல பயந்து, மீண்டும் காற்புள்ளியோடு நிறுத்தி மூடிவைக்கிறேன் என் ஏடுகளையும், உன்னுடையதாகிவிட்ட என் எண்ணங்களையும்.

என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவேன். காற்றும் என்னைச் சுமக்க மறுப்பெழுதி, புழுதி வாரியிறைத்துக் கொண்டிருந்தது. மாலைப்பொழுதுகளெல்லாம் மரத்தை முறிக்கும் கோடாளிகளென மனதில் வலியோடு இறங்கி...

"அய்யோ போதும்.... இங்க ஒருத்தியும் என்ன பார்க்கறதே இல்ல... அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்".

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ம்ம்மாகண்விழிக்குமுன்னே
காதுகளில் ஸ்பரிசிக்கும்
நேற்றிரவு உரையாடலின் எச்சம்,
கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்
கன்னத்து முத்தம்,
கண்ணுக்கு மை
இன்னும் தீட்டியிருக்கலாமோ?
எனத்தோன்றிய எண்ணம்,
காற்றுக்கு கொஞ்சம்
இடைவெளி தந்து
கணுக்கால்களை வருடும்
முதல் புடவை...,
நெரிசலில் நசுங்கிவிடாமல்
பாதுகாத்த
அவசர காலை தொடர்வண்டியின்
கூந்தற்பூ பயணம்...
என எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....

  • இன்று பிறந்தநாள் கொண்டாடும் இனியவள் புனிதா அக்காவிற்காக இந்த கவிதை. அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :-))

பி.கு.1: அவங்க பிறந்த நாளுக்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு யாராவது கேட்டா, கேட்டவங்க பிறந்தநாளுக்கு இதவிட கொடுமையான கவிதை ஒன்னு எழுதித்தரப்படும்... ;-))

பி.கு.2:இங்க வந்து வெறும 'பிறந்தநாள் வாழ்த்துகள்'ன்னு மட்டும் பின்னூட்டம் போட்டாலும், மேலே சொன்ன அதே தண்டனைதான்.. முக்கியமா 'கோபிநாத்' அவர்களுக்கு.... ;-))-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது