காதலும் கற்று மற(?!)-4

காதலும் கற்று மற(?!)- 1 , 2 , 3 .

"எங்க மேடம் காலங்கார்தால, அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம, எங்க கிளம்பிட்ட?"

"போயிட்டு வந்து சொல்லவா?"

"ஏன் இப்ப சொல்லக்கூடாதா?"

"ம்ஹீம்"

"ஏதோ பண்ணு", சிரித்துக்கொண்டே விடைபெற்றாள் சத்யா.


-o0O0o-

காலை மணி 7:30. மிக அமைதியான கல்லூரி மைதானம். இதுவரைப் பார்த்திராத வானம். 'ம்ம்ம் ஹாஸ்டல் வந்ததில இருந்து நல்லா தூங்க கத்துக்கிட்டேன். எவ்ளோ நல்லா இருக்கு இன்னைக்கு க்ளைமேட்? சொன்னபடி வருவானா?', நினைவுகளில் ஆழ்ந்தாள். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என முடிவு செய்து, சத்யாவை சந்திக்க தினேஷிடம் சொல்லி அனுப்பியிருந்தாள். அவன் சொல்லியிருப்பானா? அப்படியே சொல்லியிருந்தாளலும் சத்யா வர சம்மதிப்பானா? என பலக்கேள்விகள் அவளுள், சத்யா வருகையை காணும் வரை.

"ஹாய்"

"ஹாய்"

"சத்யா"

"சொல்லுங்க"

"பாக்கனும்னு சொன்னீங்கன்னு தினேஷ் சொன்னான். எனக்கு முதல்ல நம்பிக்கையே இல்ல. சும்மா கலாய்க்கிறான்னு நினைச்சேன். பட் இங்கவந்து பார்த்தா. வாட் எ சர்ப்ரைஸ்?"

"ம்ம்ம் நாந்தான் வர சொன்னேன். தேங்க்ஸ் வந்ததுக்கு. சாரி டிஸ்ட்ரப் பண்றதுக்கு"

"Thats ok. சொல்லுங்க என்ன விஷயம்?"

"உங்களுக்கு தெரியாததில்ல. நீங்க யார்? என்ன? எப்படிப்பட்டவர்? இப்படி எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உங்க பேர் மட்டும் தான். உங்களுக்கும் அப்படிதான்னு நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் எனக்கு இந்த காதல், கத்தரிக்காயில் எல்லாம் இஷ்டம் இல்ல. அப்படி ஒரு எண்ணம் இருந்தா தயவு செய்து மாத்திக்கோங்க. இத சொல்லத்தான் நான் கூப்பிட்டேன். வந்ததுக்கு தேங்க்ஸ்".

"நல்லா பேசறீங்க"

"சத்யா... நான்...."

"நான் இன்னும் முடிக்கல. நான் உங்கள லவ் பண்றேன்னு என்னைக்காவது உங்கக்கிட்ட வந்து சொன்னேனா? சொல்லுங்க."

"இல்ல"

"அப்பறம் எப்படி இப்படி என்ன பத்தி ஒரு முடிவுக்கு வந்தீங்க?"

"ஆனா, உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம்.."

"அவங்க ஆயிரம் சொல்வாங்க. அதுக்கெல்லாம் நான் என்ன பண்ண முடியும்?"

-o0O0o-

"என்னடா சொல்ற? அந்த பொண்ணதான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னமோ உயிருக்குயிரா காதலிக்கிறேன்னு எங்ககிட்ட சொல்லிட்டு அவகிட்ட அப்படியே உல்டாவா சொல்லிட்டு வந்துருக்கியே, ஏண்டா? இல்ல நீ சும்மா விளையாடுறியா?"

"ம்ம்ம் நிஜமாவே காதலிக்கிறேன். ஆனா, அவ கோவமா கேட்ட அந்த சமயத்துல சொல்லிருந்தேன்னா அவளுக்கு என் மேல நிச்சயம் வெறுப்பு வந்திருக்கும். அதோட இல்லாம காதலே பிடிக்காதுன்னு சொல்றவகிட்ட போய் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு சொல்லக்கூடாது மச்சி. அதெல்லாம் டைம் பாத்துதான் சொல்லனும்."

"எங்கேயிருந்துடா வருது? காதல்னா மட்டும் இவ்ளோ யோசனைகள்? இத கொஞ்சம் படிப்பிலையும் காட்டினா நல்லா தான் இருக்கும்..ம்ஹீம்ம்ம்"

-o0O0o-

"நிஜமாவா சொல்ற? அவன் அப்படியா சொன்னான்?"

"ஆமா மிருது... கடைசி வரைக்கும் அவன் என்ன காதலிக்கறதாகவோ, குறைந்தபட்சம் சைட்டடிக்கறதாகவோ கூட ஒத்துக்கல. எனக்கு ஒன்னுமே புரியல"

"எனக்கெல்லாம் புரிஞ்சிடிச்சி. படத்துல எல்லாம் ஹீரோயின லவ் பண்ண முதல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ கரெக்ட் பண்ணுவாங்கல்ல? அதுமாதிரி தான் அவன் உன்ன அப்ரோச் பண்ணிருக்கான்"

"அப்படியா சொல்ற? சரி அப்போ அந்த ஹீரோயின் யாரு?"

"உனக்கு ரொம்ப வேண்டியவங்க தான்"

"யாரு அந்த வனிதாவா?"

"இல்ல"

"ம்ம்ம் கண்கொட்டாம அவனையே பாத்துட்டு இருப்பாளே அந்த ரூபா. அவளா?"

"இல்ல"

"வேற... ம்ம்ம்ம்"

"பிசாசே. உங்கூடவே சுத்துறேனே என் பேர சொல்லமாட்ட?"

"ச்சீ ச்சீ. அவனுக்கு ரசனை இல்லயா என்ன? உன்ன போயா சுத்துவான்?", கேட்டுவிட்டு கலகலவென சிரித்தவளை முறைத்தாள் மிருதுளா. எது எப்படியோ அவன் தன்னை விட்டுவிட்டான் என நிம்மதி அடைந்ததில் நாட்கள் சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் சென்றன.

-o0O0o-

"நீ ஏன் சத்யா கல்சுரல்ஸ் ஒன்னுத்துலையும் பார்ட்டிசிப்பேட் பண்ணல?"

"ம்ம் போ. க்ளாஸ் கட்டாகும்"

"அடிப்பாவி. அதுக்காகத்தான் இங்க பாதி பேர் அதுல கலந்ததே"

"ம்ம்ம் பாக்கலாம்"

"நீ என்னத்த பாக்குறது? சீக்கிரம் எதுல சேரரன்னு பேர் குடு. டேட் முடிய போகுது. இல்லேன்னா உன் பேர நானே எதுலயாவது சேத்துடுவேன்"

"ஹே அப்படியெல்லாம் ஒன்னும் செஞ்சிடாத. நானே பேர் தரேன் ஓகே."

"ம்ம்ம்"
-o0O0o-
"நீங்க எதுல பார்ட்டிசிப்பேட் பண்ணீருக்கீங்க?", வெகு அருகில் அவன் குரல். அன்று பேசிய பிறகு அவன் இவள் கண்ணில்படவே இல்லை. நிம்மதியாகவே உணர்ந்தாள். இன்று அவனே வந்து பேசியது ஆச்சரியமாக இருந்தது. வெகு நாள் கழித்து பேசுவதால் வெறுப்பை உமிழத்தோன்றவில்லை. வெறுப்பின் நெருப்பும் கொஞ்சம் தணிந்திருந்தது அவளுள் என்பதே உண்மை.

"இல்ல நான் எதுலையும் பார்ட்டிசிப்பேட் பண்ணல"

"எப்படி விட்டாங்க உங்க டிபார்ட்மெண்ட்ல?"

"மெஹந்தில..."

"ஓ போடறீங்களா?"

"இல்ல. என் கைல போடறாங்க"

"ஹா ஹா ஹா", அவன் பெரிதாக சிரித்தது, அவளுள் கோவத்தைத் தூண்டியது. அவள் முக மாற்றம் கண்டவன் சிரிப்பதை நிறுத்தினான்.

"சாரி சத்யா"

"ம்ம்ம் பரவால்ல"

"ம்ம் உங்க கைக்கு மெஹந்தி நல்லாவே இருக்கும். All the best"

"Thanks"

அவன் எதிலும் பங்கு கொண்டானா எனக்கேட்க மறந்த தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். எனினும் அவன் சிரித்ததை நினைத்து தான் இப்போது தனிமையில் சிரிக்கிறோம் என்பதை எப்படியோ மறந்துவிட்டிருந்தாள்.

"ஏய் என்ன தனியா சிரிக்கற?"

"ஒன்னுமில்ல சத்யா கிண்டல் பண்ணான். அத நினைச்சுதான் சிரிக்கிறேன்."

"சாதாரணமா அவன் கிண்டல் பண்ணா, திமிர் பிடிச்சவன்னு திட்டுவ. இன்னைக்கென்ன அதிசயமா சிரிக்கிற? சம்திங்க் ராங்க்"

"லூஸ் அதெல்லாம் ஒன்னுமில்ல. போய் வேலைய பாரு"

"சரிங்க மேடம்"

மிருதுளா சொன்னது சரியென்றே தோன்றினாலும். அவன் தன்னை காதலிக்கவில்லை எனத்தெரிந்ததால் தான், தான் இவ்வாறிருப்பதாக சொல்லிக்கொண்டாள். அதுவும் நிலைக்கப்போவதில்லை என பாவம் அவள் முன்னமே அறிந்திருக்கவாய்ப்பில்லை..

-தொடரும்..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

சுயம் இழந்த பின்..


கைக்கட்டி வேடிக்கைப்பார்க்கும்
வார்த்தைகள்..
வெள்ளை ஒயினென
தண்ணீர் பருகும்
தாகங்கள்...
புழங்கிய வீட்டின்
பாதச்சுவடுகளென
நினைவுகள்,
நரம்புகள் பிய்த்தெறிந்த
கிடாரையொத்த இதயம்
திருப்பித் தந்ததில்...
இன்னும் இழந்ததும்
வந்து ஒட்டிக்கொள்(ல்)கிறது
காதலும் பின்
சுயம் பற்றிய பயமும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதலும் கற்று மற(?!)-3

காதலும் கற்று மற(?!)- 1 , 2 .

சத்யாவை கவரும் விதமாக அவன் அதீதமாக எதுவும் செய்யவில்லை என்றாலும், அவன் அவளை தொடர்வதும், சீண்டுவதும், அவளின் கோபங்களையும், செய்கைகளையும் அவளின் சிறுசிறு முகச்சுழிப்புகளையும் தன் நண்பர்காளுடன் சிலாகிக்கத் தவறுவதே இல்லை. அன்றும் அவளின் குறும்புத்தனமான செய்கை இவனை கவருவதாக இருந்தது. அது கல்லூரியின் கலையரங்கம் என்பதையும் மறந்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் அது நடந்தது,....

சுனில், சத்யாவுடன் படிப்பவன் இவளின் குறும்புகளை ரசிப்பவன். அன்று கேட்டேவிட்டான்.

"Hey Sathya, Can you plz gimme ur mom's mobile number?"

"What for?"

"ம்ம்ம் எப்படியும் நீ இந்த நாலு வருஷம் படிப்ப முடிச்சதும் உங்க வீட்ல கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணுவானங்க, அப்போ எதுக்கு உங்க அம்மா கஷ்டப்பட்டு மாப்பிள்ளைத் தேடனும்? இப்போவே நான் சொல்லி வெச்சிட்டா, அப்போ அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்குமே அதான்..", சொல்லிவிட்டு கண்ணடித்து சிரித்தான். அவன் சொன்னது உண்மையில்லை என சத்யாவிற்கும் தெரியும், எனவே எதுவும் பேசாது மௌனம் காத்தாள். ஆனால், அங்கு நடந்ததோ வேறு, தானிருந்த இருக்கையிலிருந்து வேகமாக எழுந்த சத்யா, கொத்தாக சுனிலின் சட்டையைப் பிடித்தான். நிலைமையின் தீவிரம் உணர்ந்த தினேஷ் அவனைத் தடுத்தான். எனினும் கோபம் குறையாத சத்யா, அவனை எரித்துவிடுவது போல் பார்த்து, அவனைத் தன் கைப்பிடியிலிருந்து விடுவித்தான். இது எதையும் எதிர்ப்பாரா சத்யா அச்சடித்த பதுமைப் போல் நின்றாள். அதனால் இது நேரம் வரை தன்னுடன் நின்ற மிருதுளா, அவளை அகன்று சென்றதையும் அவள் கவனித்தாளில்லை.

-o0O0o-

"கொஞ்சமாவது அறிவு இருக்கறவன் எவனும் இப்படி ஒரு காரியம் பண்ணமாட்டான்", தினேஷ் கொதித்துக்கொண்டிருந்தான்.

"என்னமோ தெரியலடா. அவ எனக்கே சொந்தம்ன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். இதுக்கு நடுவில யார் வந்தாலும் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது", சத்யாவிடமிருந்து வந்த வார்த்தைகள் அனைவரையும் கொஞ்சம் அதிர வைத்தது.

"இவன் என்னடா சொல்றான்?", கேட்டுக்கொண்டே கணேஷ், தினேஷிடம் திரும்பினான்.

"என்ன நொன்னடா சொல்றான்? அன்னைக்கு சொல்ல சொல்ல கேட்காம அவன ஏத்திவிட்டுட்டு இப்போ கேள்வி கேட்கறியா?"

"டேய் அவன் ஏதோ சும்மா சைட் அடிக்கறன்னு நாங்க எல்லாம் நினைச்சோம் டா. ஆனா அவன் இவ்ளோ சீரியஸா இருப்பான்னு நினைக்கவே இல்ல."

"ஏண்டா அந்த பொண்ணு என்ன நினைக்கும்ன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியாடா நீ?"

-o0O0o-

"மிருதுளாவ பாத்தீங்களா?", கிட்டத்தட்ட எதிர்ப்படும் எல்லோரிடமும் விசாரித்துவிட்டிருந்தாள். 'இல்லை' என்ற பதில் பழகிவிட்டிருந்தது.

'எங்க போயிருப்பா?', யோசித்தவாறு நடந்தவளுக்கு அவர்கள் அடிக்கடி உட்கார்ந்து பேசும் விளையாட்டு மைதானத்தின் வேப்பமரம் மறந்து போனது ஆச்சர்யம் தான்.

"ஹே மிருதுளா தானே தேடற? அவ அங்க உக்காந்துருக்கா பாரு", தோழி காட்டிய இடத்தில் கன்னத்தில் கைவைத்து, பாதி முகம் மறைத்தபடி உட்கார்ந்திருந்தவள் மிருதுளா என இவள் அருகில் சென்று தான் தெரிந்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது.

"என்ன ஆச்சு மிருது? நான் உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்க? அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம?"

"ஒன்னுமில்ல.. வா சாப்ட போலாம். லேட் ஆகிடிச்சு"

"இல்ல நீ ஏதோ சோகமா இருக்க, ஆனா சொல்லமாட்டேங்கிற"

"அதெல்லாம் இல்ல வா"

"சொல்லு ப்ளீஸ்"

"ஒன்னுமில்லடி ஒரு சின்ன வருத்தம் அவ்ளோ தான்."

"என்னன்னு சொல்லு"

"நான் தான் அந்த சத்யாவ முதல்ல பார்த்தேன். அவன் எனக்கில்லன்னு ஆச்சு.. சரி சுனிலாவது கிடைப்பான்னு நினைச்சேன். அதுவும் இல்ல. அதான் சோகம்."

நிஜமாகவே மிருதுளா சொன்ன காரணத்திற்கு சிரிப்பதா, அழுவதா எனக் குழம்பினாள் சத்யா.

-o0O0o-

"நல்லா யோசிச்சுட்டேண்டா.. அவ இத பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல. நான் அவள லவ் பண்றேன். அவளும் என்ன லவ் பண்ணனும்ன்னு நான் ஒன்னும் கட்டாயப்படுத்தலையே.. "

"ஆனா, நீ அவள டிஸ்ட்ரப் பண்றடா"

"அதுக்கு நான் பொறுப்பில்ல"

"அதுக்கு மட்டுமில்ல. நீ மொத்தமாவே பொறுப்பில்லாம தான் நடந்துக்கற", கோபமாக கத்திவிட்டு சென்றான் தினேஷ்.

தான் செய்வது சரி என்றே நம்பிக்கொண்டிருந்தான் சத்யா. அது போன்று ஒரு சம்பவத்தை அவன் எதிர்க்கொள்ளும் வரை...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதலும் கற்று மற(?!)-2

காதலும் கற்று மற(?!)-1

"ரொம்ப திமிர் பிடிச்சவண்டி"

"ஹேய் இந்த சப்பாத்திய பாரேன் கீழ போட்டதும் உடைஞ்சிடிச்சு..."

"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்க?"

"ஆமாண்டி யாருன்னே சொல்லாம காலைல இருந்து திட்டிட்டு இருக்க. யார்ன்னு கேட்டாலும் சொல்லமாட்ட.. இதுல நான் வந்து என்னத்த சொல்றது?"

"அவன் தான் அந்த சீனியர்.."

"அவன் என்ன சொன்னான்?"

"பிசாசே... பக்கத்துல தானே இருந்த? என்னமோ தெரியாதவ மாதிரி கேட்கற?"

"நிஜமாவே கவனிக்கல... சாரி டி... அவன் எவ்ளோ நல்லா இருந்தான்? ம்ம்ம் என்னை தான் பாக்கவேமாட்டேங்கறான்"

"ச்சீ ஜொள்ளு.."

"சரி சொல்லு.. அவன் அப்படி என்ன சொன்னான்?"

"அடுத்து நடக்க போற Thanks Giving Party-க்கு நான் புடவை கட்டிக்கிட்டு வரணுமாம்... நான் என்ன ட்ரெஸ் போடனும்னு முடிவு பண்ண இவன் யாரு... ரொம்ப திமிர் அவனுக்கு... எனக்கு கொஞ்சம் கூட அவன பிடிக்கல..."

"அப்ப சரி"

"என்னடி?"

"கூடிய சீக்கிரம் உனக்கு அவன பிடிச்சிடும்..."

"Will you plz stop this non-sense?"

"Calm down... சாதாரணமா சொல்ற மாதிரி தானே அவன் சொன்னான்? கட்றதா இருந்தா கட்டிக்கோ இல்லேன்னா விட்டடுடு.. என்ன சொல்ற?"

முறைத்துவிட்டு வேகமாக நடந்துசென்றுவிட்டாள்.

-oO0Oo-

"டேய் அந்த ஜீனியர் பொண்ணுக்கிட்ட அவ்ளோ நேரம் என்னடா பேசிட்டு இருந்த?", காலையிலிருந்து ஏதோ ஒரு நகைப்புடன் இருந்தவனை சீண்டிப்பார்த்தான் கணேஷ்.

"நீ சும்மா இருக்கமாட்டியா?"

"இந்த தினேஷ் எப்பவும் இப்படிதான் இவனும் பேசமாட்டான், நம்மளையும் பேசவிடமாட்டான். இவனும் பார்க்கமாட்டான், நம்மளையும் பார்க்கவிடமாட்டான்... நீ சொல்லு சத்யா"

"ம்ம்ம் அவள புடவை கட்டிட்டு வர சொன்னேன்... பார்ட்டி அன்னைக்கு"

"டேய் ஏன்டா?", கிட்டத்தட்ட அதிர்ந்த குரலில் வழியில் செல்லும் இருவர் திரும்பிப்பார்க்க போதுமான அளவு கத்தினான் தினேஷ்.

"ம்ம்ம் சும்மா தோனிச்சு... புடவ கட்டினா அவ இன்னும் அழகா இருப்பான்னு நினைச்சேன்... சொன்னேன்"

"அந்த பொண்ணு தப்பா நினைச்சிக்கிட்டா?"

"அது அவ இஷ்டம்... பிடிக்கலைன்னா கட்டிட்டு வரமாட்டா, பிடிச்சா கட்டிட்டு வருவா"

"எதடா?", என கணேஷ் கேட்பதை விசிலடித்தே ரசித்தவாறு பல்சரிடம் ஓடினான்.

-oO0Oo-

"ம்ம்ம் நல்லாதான் இருக்க", காலையிலிருந்து தன் முதல் புடவை அனுபத்துடன் கண்ணாடியிடம் தஞ்சம் புகுந்தவளை தன் பங்கிற்கு வம்பிழுத்தாள் மிருதுளா.

"ம்ம்ம் போதும் போதும்.. என்ன கிண்டல் பண்ணது.. நீ போய் ரெடியாகு..", கோவம் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவள் பேச்சை ரசிக்கவே செய்தாள்.

-oO0Oo-

"இன்னைக்கு எல்லார் பார்வையும் உன் மேல தான்..."

"கேட்டேனா?"

"சொல்ல வேண்டியது என் கடமை இல்லயா? முக்கியமா அந்த சீனியர் உன்னையே தான் பாக்கறான்"

"மிருதுளா..."

"ஓகே.. ஓகே"

-oO0Oo-

"எங்க போன இவ்ளோ நேரம்?"

"கோவிச்சிக்காதமா.. இன்னைக்கு சீனியர்ஸ்க்கு நாம தானே எல்லா Food items சர்வ் பண்ணனும் அதான் அந்த பக்கம் போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வந்தேன்"

"பொய் சொல்லாத"

"சரி விடு... சாப்டு பார்த்துட்டு வந்தேன் போதுமா? அப்பறம் இன்னொரு விஷயம்"

"என்னது?"

"அவன் பேரு எனக்கு தெரியுமே"

"எவன் பேரு?"

"ம்ம்ம் உன்ன ரொம்ப உரிமையா புடவ கட்டிட்டு வர சொன்னானே அவன் பேரு... கேட்டா நீ ரொம்ப ஆச்சரியபடுவ"

"என்ன பேரு?"

"சத்யா"

"சொல்லு"

"இல்லடி.. அவன் பேரும் சத்யா தான்."

"என்னது? நிஜமாவா சொல்ற?"

"நிஜமா தான். பட் முழு பேரு தெரியாது."

-oO0Oo-

"ம்ம்ம் தேங்க்ஸ்"

"எதுக்கு?"

"நான் சொன்னதும் புடவ கட்டிட்டு வந்ததுக்கு"

"சீனியர்ங்கறதுனால செஞ்சேன். மத்தபடி இத அட்வான்டேஜா எடுத்துக்க வேண்டாம்"

"ம்ம்ம்ம் அப்படின்னா?"

"அப்படின்னா... இனிமே நீங்க சொல்றதெல்லாம் செய்வேன்னோ, அல்லது வேற எப்படியுமோ நினைச்சிக்க வேண்டாம்"

"வேற எப்படி?"

"இப்படி கேள்வி கேட்கறத முதல்ல நிறுத்துங்க"

"அதெப்படிங்க முடியும்? நீங்க ஏதோ சொல்லவரீங்க, அது எனக்கு புரியல. புரிஞ்சிக்க கேள்வி கேட்கத்தானே வேணும்?"

"ம்ம்ம் உங்க ஃப்ரெண்ட்ஸ் இத சாக்கா வெச்சு, நீங்களோ, நானோ போகும் போதெல்லாம் "சத்யா, சத்யா"ன்னு கத்தறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல"

"உங்க பேர் என்ன?"

"சத்யா"

"வாட்?"

"ஏன்?"

"Nice to meet you"

"What?"

"என் பேரும் சத்யா'ங்க"

-oO0Oo-

"நான் ஏதோ இருக்கும்னு நினைச்சேன்டா.. பட் இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்ல"

"கொஞ்சம் புரியற மாதிரி பேசறியா?"

"அதில்ல மச்சி.. அந்த பொண்ண பாத்ததுமே எனக்குள்ள ஏதோ ஆச்சு.. ஆனா, இப்போ அந்த பொண்ணு பேரும் என் பேரும் ஒன்னுன்னு தெரிஞ்சதும்... எனக்கு அது கன்ஃபார்ம் ஆகிடிச்சு"

"எது?"

"அதாண்டா L..O..V..E" , அவன் நிறுத்தி சொன்னவிதம் அழகாக இருந்தாலும் அந்த வார்த்தை தினேஷுக்கு பிடிக்காததால் முகம் சுழித்தான்.

"நீயெல்லாம் படிச்சவன் தானே? எங்கேயாவது பேர் ஒன்னா இருந்தா உடனே காதல்ன்னு யாராவது பேத்துவாங்களா?", சூடாக வந்துவிழுந்த வார்த்தையில் கொஞ்சம் தடுமாறிதான் போனான் சத்யா. அதன் பிறகு அவளைப்பற்றி அவனிடம் பேசாது தவிர்த்தாலும், அவளுக்காக இவனெடுக்கும் பிரயத்தனங்கள் தினேஷிற்கு தெரியாமலில்லை.

அன்றும் அப்படித்தான்.....

-தொடரும்..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதலும் கற்று மற(?!)-1

"All Girls are My Sisters, Except 'U' ".

படித்துக்கொண்டே வந்த தினேஷ் மோதிக்கொண்டான் அவன் மீது.

"டேய் என்னடா இது? என் மேல வந்து மோதற அதுக்கு..."

"ம்ம்ம் சொல்வ டா... என்னதிது? காலேஜ்க்கு வர லட்சணமா இது? ஒரு ஃபார்மல் போட்டுட்டு வரமாட்ட?"

"ஃபார்மலா? அப்படின்னா?", தினேஷ் சூடானான்.

"ஓகே.. ஓகே கோவிச்சுக்காதடா... இன்னைக்கு Freshers Day function தானே? ப்ரபோஸர்ஸ் யாரும் நம்மல கண்டுக்கமாட்டாங்கடா... அதோட இல்லாம நிறைய கேர்ள்ஸ் வருவாங்க.. அவங்க முன்னாடி போய் டை எல்லாம் கட்டிக்கிட்டு சேல்ஸ்மேன் மாதிரி நிக்க சொல்றியா? இப்படி ரகளையா ட்ரெஸ் பண்ணாதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்.. அதான் இப்படி.... எப்புடி?"

"எதாவது பண்ணித்தொலை", இடத்தை விட்டகன்றான் தினேஷ். விசிலடித்தபடியே புது மாணவர்களை வரவேற்க வாசல் நோக்கிச்சென்றான் சத்யா.

-o0O0o-

"ஹாய்! அம் மிருதுளா. நீங்க?"

"ஹாய்! அம் சத்யா."

"முழு பேரே சத்யா தானா?"

"ஏன்?"

"இல்ல. சாதாரணமா பசங்களுக்கு தான் சத்யான்னு வெப்பாங்க அதான் கேட்டேன்".

"ம்ம்ம்... சத்ய நாராயணி.. தான் முழு பேர்..."

"அப்பா... ரொம்ப பெரிசா இருக்கு. நான் சத்யான்னே கூப்பிடுறேன்".

-o0O0o-

"அந்த 'U' யாருங்கறது தான் அங்க பிரச்சனை".

"என்ன சொல்ற?"

"நீ பாக்கவே இல்லயா??"

"எத?"

"அப்போ நீ காலைல இருந்து அந்த ஸ்டேஜ தவிர வேற எதையுமே பாக்கலையா?"

"நீ என்ன பேசறன்னே புரியல".

"நம்ம சீனியர் ஒருத்தன் காலைல இருந்து இங்கயும், அங்கயும் அலைஞ்சிட்டு இருக்கான். அவன் T-shirt-ல "All girls are my sisters except 'U' "-ன்னு போட்டிருக்கு. அதுல தான் அந்த 'U' யாருங்கறது தான் பிரச்சனைன்னு சொன்னேன். ஏன்னா நான் படிச்சா என்னையும், நீ படிச்சா உன்னையுமில்ல பாயிண்ட் பண்ணும்?"

"ரொம்ப முக்கியமா இப்ப?"

"அப்போ நீ அவன கவனிக்கலன்னு கவலப்படற"

"ச்சே ச்சே இல்ல...."

"அப்போ நீ அவன் உன்ன கவனிக்கனும்ன்னு ஆசைப்படற"

"கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?"

-o0O0o-

இதுவரை குடும்பம் பிரிந்து வந்திராத நிலையும், தனிமையும் முதல் முதலாக சத்யா உணர்ந்தாள். ஹாஸ்டலில் அவளை விட்டு கிளம்பும்போது, இவள் கையில் விழுந்த அம்மாவின் கண்ணீர்த்துளி இன்னும் பிசுபிசுத்தது.

"ஏய்! என்ன சோகமா உட்கார்ந்திருக்க? அங்க பாரு, எங்க வீட்டுல என்ன கொண்டுவந்து இங்க தள்ளினத ஒரு விழாவா கொண்டாடிட்டு போறாங்க... ம்ம்ம்"

-o0O0o-

"ஹேய் இன்னைக்கு சீனியர்ஸ் நம்ம கிளாஸ்க்கு வராங்க", கிட்டத்தட்ட குதித்தபடி ஓடிவந்தாள் மிருதுளா. பொறியியல் படிப்பிற்கென்று இந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்து அதற்குள் நான்கு வாரங்கள் ஓடியிருந்தன. விடுதியின் சமையலும் பழகி போயிருந்தது. சீனியர்கள் பற்றி மட்டும் புரியாத புதிராயிருந்தது. காரணம் அவர்கள் யாரும் இவர்களைத் தேடி இதுவரை வரவில்லை. முதல்நாள் விழாவின் போது பார்த்தது. இன்று எதற்கு இங்கு வரவேண்டுமென நினைத்தாள்.

"அவனும் வராண்டி..."

"எவன்?"

"சீனியர மரியாதை இல்லாம பேசாத".

"யாரு?"

"ம்ம்ம் Except 'U' பார்ட்டி..."

நிஜமாகவே மறந்திருந்தாள். ஆனால் வாழ் நாள் முழுவதும் அவனை மறக்காதபடி செய்வானென அவள் எதிர்ப்பார்க்கவில்லை....

-தொடரும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

சம்பவங்கள்

"கொஞ்சம் நகந்துக்கோங்களேன்", சிரித்துக்கொண்டே என்னருகில் வந்து நின்றார். "ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் உள்ள வந்துடுங்க", என்றேன். ஒரு கையில் குழந்தையை இறுகிப்பிடித்தவாறு, இன்னொரு குழந்தையை என்னருகில் நிற்கவைத்தார்.

மாலை கல்லூரி, பள்ளி, அலுவலகம் முடியும் சமயங்களில் பேருந்தின் நெரிசல் அந்த நாளையே கசப்பாக உணரச்செய்யும். எப்படி இவர் இவ்வளவு தூரம் இந்த குழந்தைகளோடு செல்லப்போகிறார் என வருத்தமாக இருந்தது. என் கையில் இருக்கும் லஞ்ச் பாக்ஸ் பல நேரங்களில் பிறர் மடியில் தஞ்சம் புகுந்திருக்கும். வாங்குபவரின் முகங்களில் தான் எத்தனை எத்தனை பாவங்கள்? சிலர் சிரிப்புடனும், சிலர் சலிப்புடனும், சிலர் கவனிக்காதது போலவும், சிலர் கோவத்துடனும் பெற்றுக்கொள்வர். அவர்களின் கவலை அவர்களுக்கு. இதில் குழந்தையுடன் போவோரை யார் கவனிக்கப்போகிறார்கள்?

நான் நின்ற கம்பிக்கருகில் உட்கார்ந்திருந்தவர், நின்றிருந்தவரின் குழந்தையை வாங்கிக்கொண்டார். எனினும் கைக்குழந்தையுடன் நிற்பது சிரமம் தான்.

"Excuse me", என நினைவுகளைக் கலைத்தது பின்னிருக்கைக்குரல்.

"அவங்கள இங்க வந்து உக்காந்துக்க சொல்லுங்க", சிரித்துக்கொண்டே எழுந்துக்கொண்டார். ஏனோ மனதுக்கு நிம்மதியாக இருந்தது. என் கால்களில் ஏறி பின்னிருக்கை சென்று நன்றியையும், சாரியையும் முறையே அவரிடமும், என்னிடமும், பின் ஆளுக்கொரு புன்னகையும் பரிசாக அளித்தார். அடுத்து வந்த நிறுத்தங்களில் பலர் என் காலிலும், என்னருகே நின்ற பெண்ணின் காலிலும் ஏறி பயணம் செய்து, இனிதே அவரவர் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டனர். எனினும், பயணத்தில் ஏதோ ஓர் இறுக்கம் கலைந்தது போலிருந்தது. அனைவரும் அவ்விரு குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தோம். பல மணி நேர ரயில் பயணங்களைப் போலவே, சில நேர டவுன் பஸ் பயணங்களும் சில சமயங்களில் சிறப்பாக அமைந்து ஆச்சரியப்படுத்துகின்றன.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

"Early முகூர்த்தம் வேற சீக்கிரம் போகனும்", வேகமாக நடந்தபடி பேசியதில் கொஞ்சம் மூச்சு வாங்கியது. எனினும் இதை அடிக்கடி என்னிடம் சொல்வதனால் என்னைக் கொஞ்சம் துரிதப்படுத்தலாம் என்று நினைத்ததாலோ என்னவோ அம்மா இதை அறுபதாவது முறையாகக் கூறினார்.

"பஸ் நம்பர் கரெக்டா கேட்டுண்டியா? என்னவோ இங்க வந்தா உன்ன நம்ப வேண்டியதா இருக்கு. ஊர்லயே கல்யாணத்த வெச்சிருக்கலாம். எங்க சொன்னா கேட்டாதானே? பஸ் நம்பர் என்ன?"

"266, 166, PP66"

"என்ன இவ்ளோ நம்பர் சொல்ற? இத்தன நம்பரா வெப்பா ஒரு பஸ்க்கு? இல்ல இத்தன பஸ் ஏறி இறங்கி போகனுமா?? இதெல்லாம் அவங்க சொல்லவே இல்லயே? பத்திரிக்கையிலேயும் வேற பஸ் ஸ்டாப் பத்தி தெளிவா போடல"

"இல்லம்மா. இந்த நம்பர் உள்ள பஸ் எல்லாம் போகும். எது கிடைச்சாலும் போகலாம்"

அதை அதிஷ்டம் என்பதா? துரதிஷ்டம் என்பதா எனத்தெரியவில்லை. 266 நின்றிருந்தது. கும்பல் கொஞ்சமல்ல அதிகமாகவே இருந்தது. முகூர்த்த நாள் என தனக்குத் தானே காரணம் சொல்லிக்கொண்டாள் அம்மா. அடுத்த பஸ்ஸில் போகலாமா என கேட்க நினைத்து அறுபத்து ஓராவது முறையாக அவள் அந்த புகழ்வாய்ந்த வசனத்தை சொல்வதோ, நான் கேட்பதோ கூடாது என நினைத்ததால் வார்த்தைகளை விழுங்கினேன்.

எல்லா Speed breakers மற்றும் ஒவ்வொரு ப்ரேக்கிற்கும் என் மீது சாய்ந்த உயரம் குறைவான, சற்று என்னைவிட வலுவான அந்த பெண்ணை மானசீகமாக மன்னித்தேன். எனினும், இதனால் செருப்பறுந்து போகுமென சிறிதும் நான் நினைக்கவில்லை.

"ஏன் ஒரு மாதிரி நடக்கற?"

"செருப்பு அறுந்து போச்சு", அழுகை வந்தது எனக்கு.

"இப்போ தானே ரெண்டு வாரத்துக்கு முன்னே வாங்கின? அதுக்குள்ள பிச்சிட்டியா? ஒரு பொருளையும் உருப்படியா வெச்சிக்காதே. கல்யாண வீட்டுக்கு போகும் போது இப்படி தான் வருவியா?"

அறுந்து போனாலும் அதை இழுத்துக்கொண்டே நடந்துவிடலாம் என்ற என் நம்பிக்கை அம்மா வார்த்தைகளின் முன் தோற்று போனது.

"உன் பொண்ணா? என்ன படிக்கறா? நல்லா இருக்கா. கால் சரியில்லையோ? அவ தாத்தா மாதிரி? கஷ்டம் தான். பாத்து இருந்துக்கோ. இந்த காலத்துல நல்லா இருக்கற பொண்ணுங்களுக்கே...."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மதினி. பஸ்ல வரும்போது அவ செருப்பு பிஞ்சு போச்சு அதான்".

அம்மா இந்த கதையை இன்னும் நான்கு பேரிடம் சொல்லியிருந்தால் சென்சுரி அடித்திருப்பாள். எல்லாருக்கும் ஒரு அவஸ்தையான புன்னகை பரிசளித்து கடைகளோ, அல்லது தைய்ப்பவரையோ தேடினேன். தேவையில்லாமல் செருப்புடன் நடப்பவர்கள் மீதும், புது செருப்பைக் காட்ட வந்த தங்கையின் மீதும் கோபம் வந்தது. வரும் வழி எல்லாம் சாப்பாட்டின் பெருமை சொன்னாள் அம்மா.

"நீ தான் எவ்ளோ கூப்பிட்டும் வரல, ஏன் உம்முன்னு இருக்க?"

செருப்புத்தைப்பவர் கண்களில் பட வேண்டும் வீடு சேர்வதற்குள் என வேண்டினேன். பசித்தது.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

இருத்தலின் விதி


கீச்சுக்குரலென ஆரம்பித்து
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கியிருந்தது,
மழை...
எங்கோ உள்ளங்கையில்...
சிறிது வானம்
சேகரித்திருக்கும் குழந்தை..
நீலக்குடையின் வெளியில் கை நீட்டி...
இங்கு இனி,
வாகன ஓட்டிகளின்
மனிதாபிமானங்கள் கேள்விக்குள்ளாகும்
சேறடித்தது செல்லும்போது...
விழும் துளிகளை கொஞ்சம் ஏந்தி
சொட்டு நீர் பாசனம் செய்யும்...
மண்ணுக்கு மரம்...
காக்கைக்கும், நரிக்கும்
கல்யாணம் செய்விக்க
கிழக்கில் உதிக்கும்...
துளியோடு கதிரவன்...
முகவரிகள் மாறிப்போகும்
தெருக்களுக்கு...
குடையோடு நடப்பவர்கள்
கனவான்களாவார்கள்...
சூடான பாப்கார்ன்களுடன்
மாலைப்பொழுதுகள் கழியும்..
மழையை சபித்தபடி....
இருத்தலின் இருப்பை உறுதிப்படுத்தும்
வேகம் இங்கெப்போதும்...
ஒவ்வொரு கண்களிலும்....
வெறும் மானுட இனம்....
திட்டிக்கொண்டே திரும்பிக்கொண்டேன்...
எனது திருப்பம் வந்ததும்
சரியாக,
மழையில் நனைந்துவிடாதபடி....
உலகை உய்விக்க
மழை வேண்டுமாம்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தலைப்பு யோசிச்சு நொந்துட்டேன்...

ஏற்கனவே தீபாவளி வாழ்த்துகள் பதிவு போட்டதுக்கே இது ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்துருக்க வேண்டிய பதிவுன்னு பல்ப் வாங்கியாச்சு.. இப்ப மறுபடியும் அதேதான்... கூடவே ஒரு விருதும்... அழைத்த ஆதவன் அண்ணாவுக்கு நன்றிகள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள். :-))

1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

"தன் பெருமை தானறியாதவள்.." இதத்தவிர சொல்ல 1ம் இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-))

2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எல்லா தீபாவளியுமே எனக்கு மறக்கமுடியாதது தான். தனியா எதுவும் இல்ல.

3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

என் அம்மா, அப்பா இருந்த ஊர்ல.. ;-))

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

இரவு பத்து மணி வரைக்கும் எவ்ளோ நேரம்(?!) வேணும்னாலும் இங்க தீபாவளி கொண்டாடலாம்....

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

வாங்கினது சரவணால, தச்சது வீட்டு பக்கத்துல இருந்த டைலர்கிட்ட...

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

நிறைய செஞ்சாங்க அதெல்லாம் சொன்னா பதிவு பத்தாது.. அப்பறம் கண்ணுப்பட்டுடும்... ;-))

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

ஃபோன்தான் இப்போல்லாம்..

8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

ரெண்டும் இல்ல.. வெடி வெடிப்பேன்...

9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த தொடர்பதிவோட நோக்கமே இதுதான்னு நினைக்கிறேன்... இதுவரைக்கும் உருப்படியா எதுவும் செய்யாத எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. :-((

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

கார்க்கி- http://www.karkibava.com/
கார்த்திக்- http://rainbowstreet-karthik.blogspot.com/
ஆதி அண்ணா- http://www.aathi-thamira.com/
நர்சிம் அண்ணா- http://www.narsim.in/

அடுத்து விருது வழங்கும் விழா.. ;-))

எனக்கு விருது கொடுத்த நான் ஆதவன் அண்ணாவுக்கு நன்றிகளும், நான் விருதை பகிரப்போகிற நால்வரும்...


கார்க்கி.
கார்த்திக்.
ஆதி அண்ணா.
நர்சிம் அண்ணா. (இவருக்கு முதல் முதல்ல விருது குடுக்கறது நான் தான்னு நினைக்கிறேன்.. பெருமையும் கூட...)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

பட்டாம்பூச்சி நாட்கள்...


பட்டாம்பூச்சிகள் பிடிக்கும் கனவை
பாதியில் கலைத்து
லட்சம் பட்டாம்பூச்சிகளை என்னுள்
பறக்கவிட்டவள்...
வெள்ளை உடையணியா
காலெனும் இறக்கை
முளைத்த தேவதை,
நடைப்பழகும் நர்த்தனம்...
கள்ளச் சிரிப்பினில்
கவனம் சிதைத்திடுவாள்...
வார்த்தைகளற்ற மொழியில்
கோடிக்கவிதை அவளுள்,
அவளால் என்னுள்....
வானம் தூவும்
முதல் துளி அவள்
மழலை மொழி....
கைக்கடங்கும் உலகம்...
எனினும் தினம்
நான் அவளைச் சுற்றும்
அதிசயம் நிகழ்த்துபவள்...
காற்றுக்குமிழிக்கும் மூச்சுவாங்க வைக்கும்
சிரிப்புக்கு சொந்தக்காரி...
இரவும், பகலும் என்னுடன்
இமை போல் இருப்பாள்..
எனினும், இடையில் பிரிந்து
கொஞ்சம் வருத்துவாள்...
வந்துவிடுவாள் என அறிவேன்,
இருந்தும் காத்திருக்கிறேன்
குழந்தைப்பருவமும்,
குதிரை விளையாட்டும்
அவளால் மீண்டும் பெற....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.....

வாழ்த்து சொல்வதுன்னு முடிவு பண்ணியாச்சு.. தீபாவளி முடிஞ்சாலும் விட்டுடுவோமா?? அதான் வந்துட்டேன்... எல்லோருக்கும் என் தாமதமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். :-))

என்னதான் பொங்கலுக்கும் புது ட்ரெஸ் எடுத்துக்கிட்டாலும், கரும்பு சாப்பிட்டாலும் இந்த தீபாவளிக்கு மட்டும் ஏதோ ஒரு சிறப்பு இருக்குங்கறது உண்மை தான். தீபாவளி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியும், அந்தந்த இடங்களுக்கு தனித்தனி தாத்பரியங்களும், அததுக்கு தனித்தனி கதைகள் சொல்லப்பட்டாலும் தீபாவளின்னாலே நமக்கு பலகாரம் தான்.. ஹி ஹி ஹி ;-)). இதை கொண்டாடும் விதங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமில்ல, வயதுக்கு வயதும் மாறுபடுது....

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அதைப் பத்தின பேச்சுகள் தொடங்கிடும் பள்ளிப்பருவங்களில்... கூடவே ஒரு நாள் லீவ் என்பதும் சந்தோஷத்த இரட்டிப்பாக்கும்... மாம்பழ கலர் பட்டுப்பாவாடையும், பச்சையோ அரக்குக் கலரோ பார்டரோடு, அந்த பார்டருக்கு மேட்சான சட்டை, அதுக்கு கைல பஃப் வெச்சு தச்சி, ஓரங்கள்ல மஞ்சள் கொஞ்சம் வெச்சு, நாம போட்டுக்கறதுக்காக ரெடியா இருக்கற அந்த பட்டுப்பாவாடைய, நாளுக்கு மூனு முறையாவது பீரோவ திறந்து பார்த்து, கசங்காம மடிச்சு வெச்சு, தொட்டு தொட்டு பார்த்துக்கறது ஒரு சுகம்னா, முதல் நாள் முழுவதும் ஊரெல்லாம் அலைஞ்சு மருதாணி இலைத்தேடி, சாயங்காலம் வாசல் உரல்ல கை சிவக்க, உரல் மணக்க, புளி, கொட்டைப்பாக்கு வெச்சு அம்மா அரைக்க, தண்ணி நிறைய ஊத்தினா நிறைய மருதாணி வரும்ன்னு நினைப்போட பக்கத்துல உட்கார்ந்து பாத்துக்கிட்டே இராத்திரி எப்போ வரும், நம்ம கை எப்போ சிவக்கும்ன்னு காத்திருக்கறதும் ஒரு சுகம்...

மருதாணி வெச்சு கையெல்லாம் குளிர்ல விறைத்தாலும் பிடிவாதமா இரவு முழுக்க வெச்சிருந்து காலைல யார் கை அதிகம் சிவந்திருக்குன்னு சண்டைப்போட்டுக்கிறதும் சுகம் தான்.. :-))

தீபாவளியும் அமாவாசையும் ஏன் தான் சேர்ந்து வருதோன்னு திட்டிக்கிட்டே, விடியகாலை அம்மா எழுப்ப "அம்மா ப்ளீஸ் ஃபைவ் மினிட்ஸ் மா" என்பதற்குள் அண்ணன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்திருப்பான். நம் பங்கு போய்விடும் என பாதித் தூக்கம் போயிருக்கும். மஞ்சள், மிளகு, வத்தல் மிளகாய் போட்டு காய்ச்சிய சூடான எண்ணெய் தலையில் சுர்ர்ர்ர்ர்ரெனும் போது மீதி தூக்கமும் பறந்திருக்கும்...

குளித்து புது ட்ரெஸ் போட போகிறோம் என்கிற ஆவல் கண்ணில் விழும் சீகைக்காயையும் பொருட்ப்படுத்தாது... வெடிவெடித்து, சாமிகும்பிட்டு, வெடிவெடித்து
கோவிலுக்கு சென்று , வெடிவெடித்து, பலகாரம் கொஞ்சம் சாப்பிட்டு (அது என்னவோ தீபாவளி அன்னைக்கு பலகாரம் சாப்பிடவே பிடிக்காது.), பாவாடையில் கொஞ்சம் பட்டாசால் ஓட்டை போட்டு, அது தெரியாமல் மறைத்து, தெரிந்த பின் முழித்து... அடுத்த நாள் திரும்ப ஸ்கூல் எனும் போது காய்ச்சலில் இரவு கழிந்து... அப்பப்பா...

இப்படி கொண்டாட ஆரம்பித்த தீபாவளி தான் வளர, வளர நமக்கு நாமே திட்டம் போல "அம்மா நானே ட்ரெஸ் செலெக்ட் பண்றேன்"-ல தொடங்கி, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ அந்த சுடிதாரை போட்டிருந்து, உடனே நைட்டியோ அல்லது நைட் ட்ரெஸ்கோ மாறி "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" பார்த்து, கொஞ்சம் வெடித்து என மாறி...

அடுத்த ஓரிரு வருடங்களில் ஹைதையிலோ, மைசூரிலோ அல்லது பெங்களூரிலோ ட்ரைனிங்க் அல்லது வேலைகளுக்கு இடையில் 10 மணிவரைத் தூங்கி, " அம்மா ஹாப்பி தீவாளி மா, பட்டாசு வாங்கியாச்சா, ம்ம் முறுக்கு எனக்கும் கொஞ்சம் எடுத்து வை.. வந்து சாப்பிடுவேன்.. ஓகே பை மா" என்பதோடு முடியும்...

"புது ட்ரெஸ் எடுத்துக்கோயேன்"

"போ மா போன வாரம் தானே வாங்கினேன்."

"அத தான் சொல்ல சொல்ல கேட்காம போட்டுட்டியே.. இப்போ வாங்கிக்கோ".

"அம்மா இந்த சுடிதார் பாரேன் குந்தன் வொர்க்கோட, அழகா இருக்கு, ஜஸ்ட் 5000 தான், ப்ளீஸ் மா வாங்கிக்கிறேன்... " என போத்தீஸின் வாசலில் முடியும் தீபாவளிகளும்,

"இது தான் உன் தீபாவளி புடவை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சு, சாஸ்த்திரத்துக்கு வெடிச்சிட்டு வா" வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமே முடியும் தீபாவளிகளும் உண்டு.. :-)))

எப்படி இருப்பினும் தீபாவளி தீபாவளி தான்... ஒவ்வொரு முறை கேட்கும், சொல்லப்படும் நரகாசுரன் கதை அழகு தான்... :-)))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

விளையும் பயிர்...

வற்றிப்போன ஆறுகளின்
மேல் புதிய பாலம்
நம்பிக்கை!


கவிதை சத்தியமா என்னோடதில்ல... பின்ன யாரோடது? கண்டுபிடிங்க... பதிவோட கடைசில சொல்றேன். ;-))


'என் புருஷனும்(sorry for the language :-( ) கச்சேரிக்கு போறான்'னு நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் நாலு மாசம் ஆச்சு. இதுவரைக்கும் உருப்படியா எதாவது எழுதினேனா தெரியல... இதுல நிறைய எழுதனும்ன்னு நினைச்சு பாதியோட நின்ற பதிவுகள் இன்னும் ட்ராஃப்ட்ல தூங்குது... அதுக்கு எப்போ மோட்சம்ன்னு தெரியல...

சிறுகதை பட்டறைக்கு போலைன்னாலும் நர்சிம் அண்ணாவோட இந்த பதிவ படிச்சதுனால புனைவு எழுதவும் பயமா இருக்கு... நாம எதாவது எழுதி நக்கீரர்கள் நெற்றிக்கண்ண தொறந்துட்டா என்ன பண்றது?? ;-))

சரி கவிதைங்கற பேர்ல வழக்கம் போல மொக்கை போடலாம்னா, 'மறுபடியும் போஸ்ட் மார்டனிஸமா?? அவ்வ்வ்வ்வ்'-ன்னு கார்த்திக் அழறான்.

பதிவே போட வேண்டாம்ன்னு முடிவு பண்ணா கார்க்கி இப்படி போட்டு கொல்றாரு.

ஹ்ம்ம்ம் தீபாவளி வாழ்த்து பதிவு மட்டும் போட்டுட்டு, அத ஷெட்யூல் பண்ணி வெச்சிட்டு எஸ் ஆகலாம்ன்னு கணினி முன்னாடி உட்கார்ந்தா ஃபோன்...

"ம்... சொல்லு" (தெரிஞ்சவங்களா இருந்தா, ஹலோ கிடையாது..)

"எப்படி இருக்க?"

"என்ன திடீர்ன்னு?"

"ஹி ஹி ஹி... சும்மா தான்"

"ம் இருக்கேன்..."

"உன் ப்ளாக் எல்லாம் எப்படி போகுது?" இந்த கேள்விக்கப்பறம் தான் எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்தது. ஏன்னா இவங்க சாதாரணமா என் ப்ளாக் பத்தி கவலைப்படாதவர், அதுவும் இல்லாம நான் இதுல நேரம் ரொம்ப செலவழிக்கறதா என் அம்மாகிட்ட போட்டுக்கொடுத்த புண்ணியவான்.

"என்ன விஷயம் சொல்லு?"

"எனக்கு ஒரு கவிதை தோணிச்சு, நீதான் ப்ளாக் வெச்சிருக்கியே? அதுல போடேன் ப்ளீஸ்...."

"என்ன???????"

"சொல்லவா?"

"இத போட்டேதான் ஆகனுமா?"

"நான் ஈவினிக் வந்து பார்ப்பேன். அது உன் ப்ளாக்ல இருக்கனும். எழுதிக்கிட்டியா?"

"டேய் நிஜமாவே போடனுமா?"

"ஆமாம். Bye".

பிசாசு... எவ்ளோவோ சொன்னேன் கேட்கல.. அதான் இங்க போட்டுட்டேன். வர்ட்டா? அது யார்ன்னு இன்னும் சொல்லனுமா?? வேற யார்? என் கூட பொறந்த பாசமலர் 'மாதவன்' தான் அது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இன்னும் வேற நிறைய கவிதை இருக்கு... அப்பப்ப சொல்றேன்னு சொல்லிருக்கான். நான் ப்ளாக மூடிடலாம்ன்னு ப்ளான்ல இருக்கேன்.. ;-)))))

டிஸ்கி: நான் இத போடலேன்னா அவனே ப்ளாக் ஆரம்பிக்கும் அபாயம் இருக்கு.

டிஸ்கி1: பாரேன் அவனும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டான். க்ரேட்!!( நான் எனக்கு சொன்னேன்.)

டிஸ்கி2: தலைப்பு இன்னுமா புரியல?

டிஸ்கி3: டிஸ்கி 2 இருக்கறதால இது டிஸ்கி 3-ஆ போச்சு... ஹி ஹி ஹி :-D.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஏழ் பிறவிக்கும்....


தாவணிகளை எட்டித்தொட்ட
நாட்களில் துவங்கியது...
குழந்தைப் பருவம் முழுவதும்
உதிர்ந்திராத காலம்...
மனதில் கிளந்தெழுந்த
ஆவலுடன் முதல் நாள்
எனத் தொடங்கி,
திருநீற்றுத் தீற்றலுடன்,
கொஞ்சம் குங்குமமும்
எனக்கான பிராத்தனைகளும்
என வளர்ந்து...
தேர்வுகளும், சில நமக்கான
பரிட்சைகளும் என
முற்றுப்பெற்றன மூன்றாண்டுகளும்...
இனியும் தொடரும் என
உறுதியளித்தாய்...
பணி நிமித்தம் பிரியமாட்டோம்
என சூளுரைத்தாய்...
ஆயிற்று வருடங்கள் மூன்று...
ஏதோ ஒரு நிறுவனத்தின்
பொருளாதாரத்தை
உயர்த்த நானும்,
குடும்பத்தின் வாழ்க்கைத்தரம்
உயர்த்த நீயும் என
சராசரிகளாகிக் கொண்டிருந்தோம்....
தகவல் தொழில் நுட்பங்கள் எதுவும்
கைக்கொடுக்கவில்லை நமக்கு,
உன்னிடம் பகிரவும்,
என்னிடம் பகர்க்கவும்
பலவுண்டு நம்மிடம்....
சந்திப்புகள் கைக்கூடிய நேரத்தில்...
கணத்தில் பார்வைகளில்
பெற்றுக்கொண்டாய் உனக்கான
என் வார்த்தைகளை...
அப்படியே நானும்...
பெண்களின் நட்பு
பிறந்தகம் வரைக்கும்தானாம்..
தூற்றுபவர்கள் தூற்றட்டும்...
இருந்துவிட்டு போகட்டும்,
ஏழ் பிறவிக்கும் நம் நட்பு....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

சினிமாவும், நானும்...


பதிவுக்கு தலைப்பு 'சினிமாவும், நானும்'-ஐ விட 'தியேட்டரும், நானும்' பொருத்தமா இருக்கும்... ஏன்னா வீட்ல சினிமா பார்க்கிற பழக்கம் இல்ல.. "யாரு பாப்பா மூனு மணி நேரத்த இதுக்காக வேஸ்ட் பண்ணுவா?"-ன்னு அப்பா பார்க்கமாட்டார். முறையே, அம்மாவுக்கு சமையல்கட்டு, அண்ணாவுக்கு கிரிக்கெட்டு, எனக்கு ரேடியோவில் பாட்டு. சினிமாங்கறதுக்கும் எங்களுக்கும் அப்போ ரொம்ப தூரம், இப்பவும் தான். சினிமா பிடிக்காது என்பதாலோ என்னவோ அதோடு தொடர்புடைய பாப்கார்ன்னும் பிடிக்காது.. ;-)))

டிவி ரொம்பவே பரிச்சயமாகாத பால்யத்தில், என் பாட்டி வீட்ல BPL Black & White டிவி இருந்தது. ஒரு விடுமுறைக்கு ஊருக்கு போன போது அதுல 'படகோட்டி' படம் பார்த்ததா ஞாபகம். படம் பார்க்கும் போது நிறைய கேள்வி கேட்டதால என் தாத்தா "இனி கேள்வி கேட்கமாட்டேன், பேசாம படம் பார்ப்பேன்னு சொல்லு படம் போடறேன்"-னு டிவிய ஆஃப் பண்ணிட்டார். அதோட சரி நிறுத்திட்டேன்... படம் பார்க்கறத இல்ல... கேள்வி கேட்கறத.. அப்பறம் சுதந்திர தினத்துக்கு ஒவ்வொரு வருஷமும் மறக்காம போடற 'ரோஜா' படம் பார்ப்பேன். ரொம்ப நாள் அது எதுக்கு போடறாங்கன்னே தெரியாது. எல்லாரும் பார்க்கிறாங்க சரி நாமலும் பார்க்கலாம்ன்னு தான் பார்த்தேன்.

முதல் முதல்ல எங்க வீட்டுக்கு டிவி வந்த போது நான் 9வது படிச்சிட்டு இருந்தேன். அம்மா பயங்கர எதிர்ப்பு, ஏன்னா அண்ணா அப்போ பத்தாவது, அடுத்த வருஷம் அவளும் பப்ளிக் எக்ஸாம் எழுதனும் வேண்டாம்னாங்க... நாங்க தான் நிறைய பொய் சொல்லி சமாளிச்சு டிவி வாங்கினோம்... வாங்கிட்டோமே ஒழிய அத பார்க்க யாருக்கும் நேரம் இல்ல. ஏன்னா அப்பா அலோவ் பண்ண டைம் எங்களுக்கு ஒத்து வரல... நாங்க கேட்ட டைம் அப்பா ஒத்துக்கல... இப்படியே போச்சு.. புது டிவிய தொடைக்கறது மட்டுமே என் வேலையா இருந்தது அப்போ... :-(( (என்னடா இது சினிமா, தியேட்டர்ன்னு சொல்லிட்டு அத பத்தி ஒன்னும் சொல்லாம இருக்கேனேன்னு பார்க்கறீங்களா? இனிதான் சப்ஜெக்டே வருது.)

இப்படியே வளர்ந்ததுனால சினிமா மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்ல. ஆனா அதுக்கப்பறம் நான் வந்த இடம் காலேஜ்... அதுவும் முதல் நாளே எனக்கு ஏழரை ஆரம்பிச்சாச்சு என் சீனியர் ரூபத்துல... வழக்கமான பேர் என்ன?, ஊர் என்ன? கேள்விகளுக்கு பிறகு பொழுதுபோக்கென்ன கேள்விக்கான என்னுடைய புத்தகம் என்ற பதில் அந்த அக்காவுக்கு பிடிக்கல... "ஹே!! இங்க பாருங்கடி படிப்ஸ... நான் கேட்டது பொழுது போக என்ன செய்வ?".. 'போக்குவதற்கல்ல பொழுது; ஆக்குவதற்கே பொழுது'-ன்னு தேவையில்லாம வைரமுத்து கவிதை எல்லாம் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைஞ்சது... அவங்களே நாலு சாய்ஸ் குடுத்து இதுல ஒன்னு சொல்லுன்னாங்க அதில் சினிமா மட்டும்தான் சொல்ற மாதிரி இருந்தது... :-( சரின்னு நானும் கஷ்ட்ட்ட்ட்டப்பட்டு சினிமான்னேன்... ஏன் இத மொதல்லயே சொல்லலன்னு அவங்க கோவமாகி, நான் பார்க்கறதில்லன்னு கத சொல்ல வேண்டியதாகி... அப்பறம் வந்த பல மொக்கைப்படங்களுக்கு என்னையும் அவங்க கம்பெல் பண்ணி கூட்டிக்கிட்டு போனது தனிக்கதை...

அது தவிர ஃப்ரெண்ட்ஸோட போயி எங்க காலேஜ் செகரட்டரிக்கிட்டயே மாட்டிக்கிட்டது, இன்டர்வியூன்னு பொய் சொல்லி படத்துக்கு போயிட்டு வந்தது, யுனிவர்சிட்டி எக்ஸாம்க்கு முதல் நாள் படம் பார்த்தது, கிளாஸ் ஃபுல்லா கட்டடிச்சிட்டு 'மொழி' படத்துக்கு போயிட்டு 100 ரூபா ஃபைன் கட்டினது (டிக்கெட் 50 ரூபா), அழுது அடம்பிடிச்சி அம்மாவ 'குஷி' படத்துக்கு கூட்டிட்டு போகச் சொல்லி, அதுல வந்த ஒரு பாட்டுக்காக அம்மா என்ன இன்னமும் திட்டினது, கடைசியா எங்கூட வேலை செய்த பெண், வேலைவிட்டு போனதுக்கு ட்ரீட் குடுத்து படத்துக்கும் கூட்டிட்டு போனபோது நான் என் ஐடி கார்ட் காமிச்சிட்டு உள்ள போக ட்ரை பண்ண எல்லாரும் சிரிச்சி, நான் வழிஞ்சி என என் தியேட்டர் அனுபவங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு இருந்தாலும் ரொம்பவே சுவாரஸ்யமானவை.


டிஸ்கி: ஏனோ தெரியல எனக்கு கொஞ்சநாளா கொசுவத்தி பதிவு போடனும்ன்னு ஆசையா இருந்தது. அதான் இப்படி கொஞ்சம் பொருத்தருள்க. எனினும் இது போன்ற பதிவு இனித் தொடராது எனக்கூறிக்கொ(ல்)ள்கிறேன். ;-)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

விடுபட்டவை...


கற்கள் பொதிந்த
என் காட்டுப் பயணத்தின்
பாதை நெடுகிலும்
ஆவாரம்பூக்கள்...
கிளைத்தெழுந்து நிற்கும்
அவற்றின் வேர்களுக்கப்பால்
மறைத்துவைத்துள்ளேன்
உயிர்த்தெழுந்த
உனக்கான
என் காதலை...
என்றேனும் உறக்கத்தின் விழிப்பில்
என்னினைவிருந்தால்
குருதிகள் தோய்ந்த
அந்நிலத்தின் தீக்கங்குகளுக்கிடையில்
தேடிப்பார்....
விழிப்புற்ற மிருகத்தின்
பெருமூச்சுகளுக்கிடையில்
அதன் நாக்கின் அடியில்
நான்காக மடிந்திருக்கும்
என்னுலகத்தை...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

பிரிவெல்லாம் பிரிவல்ல

பிரிந்துவிட்டோம்
பிரிந்து விட்ட பிரிவு
நம்மை வந்து
கட்டிக்கொண்டப்பின்...
உன்னுடனான
பேருந்து பயணங்கள்
பிடிப்பதில்லை
நிறுத்தங்கள் பிரிப்பதால்...
ரயில் நிலைய
சந்திப்புகள் வேண்டாம்
தண்டவளங்கள் உணர்த்தும்
நம்மின் பிரிவை

பிரிவென்னை
கொல்லவில்லை
பார்த்தும் பார்க்காமல் சென்ற
உன் கண்களை
நேற்று சந்திக்கும் வரை

வெளிச்ச நாற்றுகளிலும்
இருளின் சுருள்
பிரித்தறிந்தேன்
நம் பிரிவறிந்த போது

கொட்டத்தொடங்கிய மழை
இன்று
குத்தத் தொடங்கியது
குடைக் கம்பியென...
பிரிவின் மழைக்காலமும்
கொடுமையே...

நூலருந்த பட்டம்
என்னிதயம்
பிரிவி்ன் போது...

மாலையாகிவிட்ட
மல்லிகைகள்
சொல்லிக்கொண்டன
பிரிவெல்லாம்
பிரிவல்லவென்று

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காத்திருக்கலாம்...

வற்றிய மேகங்கள் பொழிய,
வானம் நிலவொடு மகிழ,
இரவை சூரியன் விழுங்க,
இமைகள் இரண்டும் தீண்ட,
எனை நீங்கா
உன்னின் நினைவுகள்
எனைத் தொடர
காத்திருக்கலாம்.....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~


காத்திருக்கும் நேரம்,

கண்கள் யோசிக்கும்
கவிதை நீ...!
கவனங்களைத் திருடும்
காற்றும் நீ...!
கணங்களில் கடக்கும்
யுகமும் நீ...!
கவிதைகள் மட்டும் படைக்கும்
மொழியும் நீ...!
மொழிகள் யாசிக்கும்
மௌனம் நீ...!
கண்கள் காணத்துடிக்கும்
கனவும் நீ...!
அக்கனவைப் பறிக்கும்
விழிப்பும் நீ...!

  • எப்பவோ எழுதி Draft-ல இருந்தது. கவிதை வேணும்ன்னு அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக(இது தேவையா??) போட்டது.. ;-))
-அன்புடன்,
ஸ்ரீமதி.

And, Now


மௌனங்களுடன் உரையாடும் மணித்துளிகள்
என்னுடையதாயிருந்தன....
எண்ணங்கள் வளர்க்கும் அவன் நினைவுகள்
நான் சுவைக்க ஏதுவாய் எப்பொழுதும் என்னுடன்...

இரவு பகல் எந்நேரமும் என்னுடைதாயிருந்தது
கோர்க்கப்படாமல் விட்ட சொற்கள்....

மௌனம் முடிச்சவிழ்ந்த ஒரு மாலை நேரத்தில்
நான் அவனுடையதாகியிருந்தேன்...

சிதறிய வார்த்தைகளைக் கோர்த்துவிட்டதில்
காணாமல் போயிருந்தது...
அவனுக்கான என் மௌனம்...

ஆதிமூலம்:

தமிழன்- கறுப்பி

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கந்தசாமி - ஷங்கர் ஃபார்முலா??


முன் குறிப்பு அல்லது முக்கிய குறிப்பு: நக்கீரர்களின் கவனத்திற்கு, இது கண்டிப்பாக கந்தசாமி படத்தின் விமர்சனம் இல்ல. படத்த பார்த்து நொந்த என் போல் சிலரின் ஆதங்கமே. ஏற்கனவே சொல்லிருக்கேன் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு படம் பார்க்கும் அந்த மூன்று மணி நேரம் மட்டுமே. அதுக்கப்பறம் கதை கூட ஞாபகம் இருக்காது. ஆனா, இந்த படத்தப் பார்த்து நொந்ததினால் மட்டுமே இந்த போஸ்ட். இத படிச்சிட்டு படம் பார்க்கிறதும் படம் பார்க்காததும் உங்க இஷ்டம். பார்க்காதீங்கன்னு நான் சொல்ல மாட்டேன்.

கதை (அப்படின்னா?!) பணக்கார வில்லன், போலிஸ் ஹீரோ அப்பறம் என்ன நடக்கும்ன்னு உங்களால யூகிக்க முடியலேன்னா, ஒன்னு நீங்க வேற்று நாட்டுக்காரரா இருக்கனும், இல்ல என்ன மாதிரி சினிமா பார்க்காத ஆசாமியா இருக்கனும். இந்த படத்துல கதை இல்லன்னு எவன் சொன்னது?? எத்தனை படத்தோட கதை இருக்கு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்வ்.... "விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார், திருட்டு பயலே எடுத்த சுசி கணேசன் என்கிற தமிழ் பட இயக்குனரை காணவில்லை"ன்னு விளம்பரமே தரலாம். மாஸ் ஹீரோவ வெச்சு படம் பண்ற பதட்டமா என்னன்னு தெரியல. அப்படி ஒரு சறுக்கல் மனுஷனுக்கு. தயவு செய்து நீங்க மார்க்கெட் போன, அல்லது புது முகம் இப்படி பட்ட ஹீரோக்களையே ட்ரை பண்ணுங்க ப்ளீஸ் மாஸ் ஹீரோ மார்க்கெட்டாவது மிஞ்சும்.

ஹீரோ விக்ரம் மனுஷன் செம்ம ஸ்மார்ட், செம்ம ட்ரிம்மா ஒரு யங் CBI ஆஃபிஸர் காரெக்டர்ல பொருந்தி போறாரு. நல்லா நடிக்கவும் செஞ்சிருக்காரு. பில்லா அஜித்துக்கு போட்டியா மனுஷன் நடக்கராரு நடக்கராரு நடந்துகிட்டே இருக்காரு. பாடல்கள்ல சரத்குமாருக்கு போட்டியா நடனம் ஆடிருக்காரு( அதாவது நான் நிக்கிறேன், நான் நிக்கிறேன் தான்). ரொம்ப அழகா தெரிஞ்சாலும் தாடியோட வர சீன்ஸ் அவர் வயச காட்டிக்கொடுத்துடுது (தாடிக்கு டை அடிக்க முடியாதா??). மத்தபடி இப்படி ஒரு நடிகர டைரக்டருக்கு பயன்படுத்தத் தெரியலன்னு தான் சொல்லனும். இனியும் இப்படி படங்கள் தேர்ந்தெடுத்து நடிச்சா அந்த பாலாவால கூட உங்கள காப்பாத்த முடியாது.

ஈரோயின் சாரி ஹீரோயின் ஷ்ரேயா அவ்வ்வ்வ் அல்ரெடி சிவாஜில இதோட க்ளோஸப் காட்சிகள பார்த்து பயம் தெளியாம இருக்கற எனக்கு இங்கயும் பயங்கற அதிச்சியா நிறைய க்ளோஸப் காட்சிகள். கோடி கோடியா கொட்டி படம் எடுக்கறாங்க இந்த புள்ளைக்கு ஒரு பாவாட தெச்சிப் போடப்படாதோ?? பாவம் என்ன அவசரமோ தெரியல படம் பூரா பாதி ட்ரெஸோடவே வருது. மீதி போடறதுக்குள்ள டைரக்டர் ஸ்டார்ட், கேமரா சொல்லிட்டாரு போலருக்கு... இதுக்கு ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடின முமைத் கானவே ஹீரோயினா போட்ருக்கலாம். அது காட்டின அளவுக்கு எக்ஃஸ்ப்ரஷன்ஸ் கூட இவங்க முகத்துல இல்ல. கன்னாபின்னான்னு இது வாயசைக்க இதுக்கு பின்னனி குரல் அட்சர சுத்த தமிழோட சுச்சி. படம் பூரா உதட்ட சுழிக்குது, சுழிக்குது எல்லாரும் மூஞ்சிய சுழிக்கிற வரைக்கும் சுழிக்குது. "என் அழகப்பார்த்து நொந்தசாமி... "- கண்டிப்பா அவரில்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்... அப்பறம்... இன்னும் என்ன அப்பறம்... இவங்கள பத்தி இவ்ளோ எழுதினதே பெரிசு...

படத்துல வடிவேலுவும் இருக்காரு(!?!) அவ்ளோ தான் சொல்ல முடியும்.

பாடல்கள் கேட்கறத விட பார்க்க படு மோசமா இருக்கறதால FMல கேட்கறதோட நிறுத்திக்கோங்க. பாத்துட்டு, அதனால் வர விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்ல.. இதுவரைக்கும் வந்த திருடன் போலிஸ் படங்கள யாராவது பார்க்காம மிஸ் பண்ணிருந்தா கண்டிப்பா போய் படம் பாருங்க. அத்தன படத்தோட கதையும் இருக்கு நம்புங்க. ரெய்டு வந்ததும் ஸ்டோர்க் வரது எத்தன படத்துல பார்க்கறது செல்லமே? மணி லாண்டரி(இததான் ஜிவாஜில நல்லா விம் பார் போட்டு விளக்கிட்டாங்கல்ல??), ப்ளாக் மணி, இருக்கரவங்கக்கிட்ட இருந்து எடுத்து இல்லாதவங்களுக்குக் கொடுக்கறது... அட போங்கப்பா... இன்னும் எத்தன படம் இதே ஃபார்முலால வருமோ?? அவ்வ்வ்வ்...

கந்தசாமி - Nothing Special

பின் குறிப்பு: கோடி கோடியா கொட்டி படம் எடுக்கறோம் திருட்டு விசிடி-ல பார்க்காதீங்கன்னு சொல்றாங்க. ஆனா, படம் பார்க்க நாம ஆயிரம் ஆயிரமா செலவு பண்றோம் அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது??

-அன்புடன்,
ஸ்ரீமதி.

வீணை


மடியில் சிறிதும்,
மனதில் பெரிதும்
கனத்தபடி இன்று
வடதெற்கு மூலையில்
சாய்ந்து வைக்கப்பட்டிருந்த,
அதனின் காலை நேரத்து
ஆராதனைகளும், அர்ச்சனைகளும்
நிறுத்தப்பட்டிருந்தது....
விரல்களின் மரத்துப்போன பகுதிகளில்
நரம்புகளின் சீண்டல்கள்
இன்னும் ஓய்ந்தப்பாடில்லை...
தன்னை அதனுள் செலுத்தி
மாயப் புல்லாங்குழலாக்க
காற்று முயன்று
கானங்களை அலைக்கழித்தது...
எனினும்,
எழுந்து நடக்கத் தொடங்கியிருந்த
காலங்களால்,
காயங்கள் சிறிது ஆறிவிட்டிருந்தது,
என்றோ அறுந்த வீணையிலிருந்து
தெறித்த நரம்புகள்
எங்கோ ஆரோகணத்தில்
இன்னும்
சுருதி சேர்த்துக்கொண்டிருந்தன....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

விடுபட வழி?!


தனக்குள்ளே போட்டியிட்டு
நாட்கள் தன்னைத் தானே
நீட்டித்துக்கொண்டன...
காலம் கடந்து பழுப்பேறிய நினைவுகள்
கிழிந்த புத்தகத்தின்
ஒட்டா பக்கங்களென
மனதை நெருடி,
உறுத்தி நின்றது...
உன்னிலிருந்து பிய்த்து எடுத்து வந்த பிறகும்,
இன்னும் சில நாள்
சுவாசம் தாங்கவும்,
ரத்தம் சிந்தவும்,
உடன்பட்டிருந்தது இதயம்...
பேச நினைத்தவைகளும், பேசியவைகளும்,
கண்கள் வழி வெந்நீராய் வழிந்து,
கொஞ்சம் கன்னம் கரித்தது...
எனினும், பழகிய இருளின்
கரிய கோட்டோவியமென..
இன்றும் உன் வசமாயிருப்பவை,
என் பரிமாறமுடிந்த
புன்னகைகள் மட்டுமே...
இனியேனும் விட்டுப் பிரிகையில்
விடுபட வழி சொல்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

நினைவுகள்...


காலை நேரத் தூரல்,
காற்றுக் கடத்தும் குரல்கள்,
கறுப்புக் கூந்தலில் குடிபுகுந்து
கவனம் திருடும் வாசனைப் பூ,
கால் கடுக்கும் காத்திருப்புகள்,
கவிதை வரிகளுக்கானத் தேடல்,
கட்டிடக் கட்டுமானங்களின்
காதைத் துளைக்கும் இரைச்சல்கள்,
இவைக் கடந்து
அலுவலகம் நுழைந்த
அடுத்த நொடி,
உன்னின் பதினேழு மணி நேர பயணத்தில்
எத்தனை முறை எனை நினைத்தாய்
எனக் கணக்கிடும்
என் பாழாய் போன மனது...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

நிலா முற்றம்...


வகிட்டில் வந்து
ஒட்டிக்கொண்ட குங்குமம்,
வார்த்தைகளில் புதிதாக
சேர்ந்துக்கொண்ட நாணம்,
கழுத்தில் காற்றில் ஆடும்
மஞ்சள் தாலி,
கால்களிலே தங்கிவிட்ட மிஞ்சி,
என என்னை எனக்கு
பெண்ணாய் காட்டும்
இவைத்தவிர,
நிலா முற்றத்தின்
கனவுகள் சுமந்த
தனிமையின் இரவுகள்
உனக்கும் பொதுவானவை
என்பதில் மகிழ்கிறேன்....
-அன்புடன்,
ஸ்ரீமதி.

சிரிக்கவா?அழவா??


முத்தங்களுடன் முடிவுற்ற
நன் நேசங்களின்
வெறுமைப் படர்ந்த அந்த
கடைசி நாள் இரவின் விளிம்பில்
என் மணிக்கட்டு வழி விடுபட்டு
அறை முழுவதும் வியாபித்திருந்தது
நம் காதல்
அறியாதவர்கள் அதை
'சிவப்புத் திரவமென்றும்'
என்னை
'இறந்துவிட்டது' என்றும்
முனகினர்...
முட்டாள்கள் முணுமுணுக்கட்டும்
நீ சொல்
இருமுறை இறந்திருக்கிறேன்...
சிரிக்கவா? அழவா??

-அன்புடன்,
ஸ்ரீமதி.

மழை... கதம்பம்ன்னும் சொல்லலாம்...

ஊர்ல கொஞ்சமா மழை பெய்ய ஆரம்பிசிருக்கு. ஏதோ நம்மலால எல்லாரும் நல்லா இருந்தா சரி. அக்கா தான் சொன்னா நீ இப்போல்லாம் சீக்கிரம் எழுந்துக்கற, ஒழுங்கா சாப்பிடற, மழை வரும்ன்னு. நாலு பேர் நல்லா இருப்பாங்கன்னா எதுவுமே தப்பில்ல. ;-)

இது நாயகன் பட வசனம் தானே.. ம்ம் அந்தப்படத்துல கமல் பொண்ணா நடிச்சிருக்குற நடிகை பேர் என்ன? :-( ரொம்ப நாளா நானும் அவங்க பேர தெரிஞ்சிக்க ட்ரை பண்றேன் ம்ஹீம் தெரியல...

பேர்.. இது எனக்கு ஒரு பெரிய தொல்லை.. பேர மறந்து தொலைகிறேன். அப்பறம் அந்த பொண்ணு எதிர்ல வரும்போது தெரியாத மாதிரி போலாம்னாலும் முடியல.

"ஹாய் ஸ்ரீ, எப்படி இருக்க?"

"ஓ... நல்லா இருக்கேனே... தாங்க்ஸ்"

இனிதான் பிரச்சனையே அவங்க என்ன நல்லா இருக்கியான்னு கேட்டாங்கல்ல வித் பேரோட? இப்போ நான் கேட்கனும் வித் பேரோட... :-(( நீ எப்படி இருக்கன்னு கேட்டாலும் பிரச்சனை, நீங்க எப்படி இருக்கீங்கன்னாலும் பிரச்சனை.. ஏன்னா அவங்கள முதல்ல பார்த்த போது என்ன சொன்னேனோ அத தானே மெயின்டெயின் பண்ணனும்? நாம பாட்டுக்கு மரியாதைக் கொடுத்து பழக்கிட்டா அப்பறம் கஷ்டம்... அதனால கஷ்ட்டப்பட்டு மூளைய கசக்கி,

"Then, How do u do?"

அப்படின்னு கேட்டுடுவேன்... ஹி ஹி ஹி ஆங்கிலம் அந்த அரை நொடி மட்டும் வாழ்க.. ;-)))

வாழ்க... ம்ம்ம் இந்த வாழ்க கோஷம் போடறவங்கள பார்த்தாலே எனக்கு தலையே வெடிக்குது.

தலை... ம்ம்ம் அஜித் படம் ஒன்னும் வரலியா இப்போதைக்கு? கார்க்கிக்கு சந்தோஷமாவும், கொஞ்சம் கவலையாவும் இருக்கும். சந்தோஷம்- படம் வராததுக்கு, கவலையும்- படம் வராததுக்கு தான். கிண்டல் பண்ண ஆள் கிடைக்காதே. கார்த்திக்கு தெரியும்.

கார்த்திக்... அக்னி நட்சத்திரம் படத்துல கார்த்திக், நிரோஷா டூயட் "வாவா அன்பே, அன்பே" ரொம்ப பிடிச்ச பாட்டு... பாட்டு கேட்டே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.. என் டீம் லீடுக்கு பாட்டு கேட்டாலே பிடிக்காது. அவர்கிட்ட நான் பொங்கலுக்கு(இப்போ இல்ல...) ஊருக்கு போக லீவ் கேட்டதுக்கு(லீவுக்கே லீவ் கேட்டது நானா தான் இருப்பேன்) சொல்றார்,

"பொங்கலுக்கு லீவா? வாட் ஈஸ் திஸ் மா? எனக்கும் தான் பொங்கல் இருக்கு, நான் வொர்க் பண்ணல?".

இதே ஆளு என் ஃப்ரெண்ட் தலைவலிக்குது கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போகனும்ன்னு சொன்னதுக்கு, " எனக்கும் தான் தலை வலிக்குது"-ன்னு சொல்லிருக்கு. அடுத்த ஃப்ரெண்ட் லீவ் கேட்கப்போறான். உனக்கு எய்ட்ஸ்-ன்னு சொல்லுடான்னு சொல்லிருக்கோம். பார்க்கலாம் என்ன சொல்றார்ன்னு.

இவர சொல்லி ப்ரயோஜனமே இல்ல. இப்போ எல்லாருமே இப்படிதான், எல்லாமே இப்படிதான்... ஒரு பிசின்ஸ் மைண்டடா மாறிகிட்டே வராங்க. மனித நேயமே குறைஞ்சு போச்சோ? மனிதர்களுக்கே மதிப்பில்லாம போச்சோன்னு தோணுது... பெரியவங்க தான் இப்படி இருக்காங்க, சரி குழந்தைங்கள்ல இருந்து ஆரம்பிக்கலாம்னா, அவங்களையும் Read/ Write CD மாதிரி மாத்தி வெச்சிருக்காங்க. புக்ல இருக்கறதத்தவிர ஒன்னும் தெரிய மாட்டேங்குது... :-(( சகோதரத்துவம், சமத்துவம் எல்லாம் எங்கயோ தொல் பொருள் மாதிரி மறைஞ்சு போச்சு.

சமத்துவம்... ஷேர் ஆட்டோக்கள்லயும், Software companies-லயும் மட்டும் தான் இருக்கோன்னு தோணுது... பெண்கள் சம உரிமையும் அங்க தான்.

"நைட் 12 வரைக்குமெல்லாம் இருக்க முடியாது. எனக்கு ரெண்டு குழந்தை இருக்கு..."

"Well Miss, எனக்கும் தான் குழந்தை இருக்கு". என்னமோ இவர் தான் அந்த குழந்தைக்கு அம்மா மாதிரி... ம்ம்ம் என்ன சொல்ல? நாட்கள் இப்படியே போச்சு... ஆனா, இதுவும் நல்லாதான் இருந்தது.. :-))) இடையில் வலைச்சர ஆசிரியரா இருந்ததும் நல்ல மாறதலா இருந்தது. இன்னும் முழுதாக வெளிவரவில்லைன்னாலும், இப்போதைக்கு கொஞ்சம் தெளிவாக உணர்கிறேன். வெகு சீக்கிரம் வருகை வாடிக்கையாகும். :-))) அதுவரை கடைய பார்த்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றி... :-)))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

நீளட்டும்....


இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
அவன் இதழ்வழி
என் கரம் புகுந்து
உயிர்க்குடித்த
அந்த முதல் முத்தம்
இன்னும் கொஞ்சம்
நீண்டிருக்கலாமென‌...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

கேள்விகள் கார்த்திக்... பதில் மட்டும் நான்...

ரொம்ப நாள் கழிச்சு கரையோரம் வந்துருக்கேன் டேக் போஸ்ட்டோட.. அகநானூறு, அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விகளைத் தவிர மத்ததுக்கெல்லாம் பதில் மாதிரி ஏதோ ஒன்ன சொல்ல ட்ரை பண்ணிருக்கேன்...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அப்பா அம்மா வெச்சதுனால... ரொம்ப பிடிக்கும் அது என்னமோ என்ன மாயமோ தெரியல என் பேர சொன்ன அடுத்த நிமிஷம் யாரா இருந்தாலும் ஸ்ரீ ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க ரொம்ப ஃ ப்ரென்ட்லியா இருக்கும்..

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சோகமா இருக்கும்போது அழறத எல்லாம் ஞாபகம் வெச்சிக்கறதில்ல... சந்தோஷத்துக்கு எதுக்கு அழனும்

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் எல்லா மதியமும் தயிர் சாதம் தான் நிறைய முறை அம்மா கிட்ட இதுக்காக சண்ட போட்ருக்கேன் பட் இப்போ அது தான் என் பேவரிட் டிஷ்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
ம்ஹும் மாட்டேன். ஏன்னா நான் நல்லா பேசினாலும் கோவம் கொஞ்சம் அதிகம் நானா போய் யார் கிட்டயும் பேசமாட்டேன்.. சோ நான் என்னோட நட்ப என்னோட வெச்சிக்க மாட்டேன்.. ஒரே எண்ணம் கொண்ட ரெண்டுபேர் நிச்சயம் ரொம்ப நாள் சேர்ந்து இருக்க முடியாதுங்கறது என் எண்ணம்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
சாரி எனக்கு ரெண்டுமே பார்க்க மட்டும் தான் பிடிக்கும்.


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள். அவர் எப்படிப்பட்டவர்ங்கறத ஈசியா தெரிஞ்சிக்கலாம் அதோட கண்ண பார்த்து பேசறதுதான் மேனர்ஸ்ன்னு எனக்கு சொல்லி தந்துருக்காங்க.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் தான் பிடிக்காத விஷயமும். எல்லார்கிட்டயும் ஈசியா ஃ ப்ரென்ட் ஆகிடரதுனால அவ்ளோ பேரையும் ஹேண்டில் பண்ண முடியாம தவிக்கிறேன்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பாஸ்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பாஸ்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கிரே வித் ஆரஞ்சு (ரொம்ப முக்கியம்)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என் சிஸ்டம் பார்த்துகிட்டு. ஒரு கல் ஒரு கண்ணாடி கேட்டுட்டு இருக்கேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ரெட்.

14. பிடித்த மணம்?
நிறைய. பெட்ரோல் வாசனை புது புத்தகத்தின் நடுப்பக்க வாசனை நெயில் பாலிஷ் வாசனை இன்னும் நிறைய அதுவும் நேரத்துக்கு தகுந்தார் போல மாறும்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
பிடிக்காத விஷயம்ன்னு பெரிசா எதுவும் இல்ல, அது தான் பிடிச்ச விஷயமே.. ;-)) காரணம் வேற என்ன "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்" தான்..

நாணல்.
புதியவன்.
ஜி3.
காயத்ரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நிறைய இருக்கு. ரொம்ப ரசிச்சு சிரிக்க வெச்சது இந்த பதிவு தான்.

17. பிடித்த விளையாட்டு?
பார்க்க கிரிக்கெட்.. விளையாட ஷெட்டில்கார்க்.. ;-))

18. கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ம்ம்ம்ம் அது திரைப்படம்ன்னு பிரிச்சு பார்க்கமுடியாத யதார்த்தமான படங்கள் ரொம்ப பிடிக்கும்..

20. கடைசியாகப் பார்த்த படம்?
அயன்.

21. பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-சுஜாதா
விழுந்த நட்சத்திரம்-சுஜாதா

(கார்த்திக் சேம் ஸ்வீட் நீ படிக்கற A Thousand Splendid Suns நானும் படிச்சிட்டு இருக்கேன்.. பட் ரெண்டு பெரும் அத சொல்ல வேண்டாம்ன்னு தான் வேற புக் சொல்லிருக்கேன். :-) )

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போ எனக்கு பிடிக்காம போகுதோ அப்போ மாத்திடுவேன் நாள் கணக்கெல்லாம் இல்ல.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
ம்ம்ம் பஞ்சு மிட்டாய், குல்பி ஐஸ் வரும்போது வருமே அந்த குட்டி மணி சத்தம் அது ரொம்ப பிடிக்கும். வாங்கறேனோ, இல்லையோ கேட்டதும் ஓடி வந்து பார்ப்பேன்.
பிடிக்காதது டிவி சத்தம்.. எப்பவுமே எனக்கு ரொம்ப அமைதியா இருக்கற சூழல் தான் பிடிக்கும். நான் சத்தத்திற்கு எதிரி.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஹைதிராபாத் (எத்தன கிலோ மீட்டர் கார்க்கி? )

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படின்னா??

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய் சொல்றது. உண்மை சொல்றதுனால வர விளைவுகள கூட தாங்க தயாரில்லாதவன், வாழ தகுதி இல்லாதவன் அப்படிங்கறது என் எண்ணம்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கேரளா (வாழ விருப்பப்பட்ட இடம்). மற்றபடி, மலையில் இருக்கும் எல்லா இடங்களும் எனக்கு பிடிக்கும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே எப்பவும்....

31.கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பாஸ்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் விளக்க முடியாதது தான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பார்க்கணும்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஜூன் ஜூலை மாதத்தில்...

வாழ்க்கை எனக்கான நன்மைகள் எல்லாத்தையும் தரும் பொழுது ஜூன் மாதத்தில மட்டும் கொஞ்சம் அதிகமாவே தூவிவிட்டதா என்று எனக்கு எப்பவும் தோணும். ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது இந்த மாதத்தில் தான் புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க... எல்லாருக்கும் இது பொதுதான்னாலும் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்... ஏன்னா, எதிர்பாரா இடத்திலிருந்து பணவரவு வரும்ன்னு சொல்ற மாதிரி... நான் எதிர்ப்பார்க்காதவங்க கிட்டயிருந்தெல்லாம் நட்பு கிடைக்கும்... அதாவது, ஸ்கூல் ஆனாலும் காலேஜ் ஆனாலும் சீனியர்ஸ் எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க... வேலைக்கு வந்த பிறகும் அப்படி தான்... அதேமாதிரியான ஒரு ஃபைன் டே ஜூன்ல(June 5th) தான் என் இந்த வலைப்பூவையும் ஆரம்பிச்சேன்.. (இத சொல்லதான் இவ்ளோ பில்டப்பா??) இப்போ ஒரு வயசாயாச்சு...
Happy Birthday to you... Sorry Belated Birthday wishes to you.. ;-))

வலைப்பூக்கு வராத இந்த நாட்கள்ல உருப்படியா எதுவும் செய்யல, படிக்கல வேலை மற்றும் எக்ஸாம்க்கு படிச்சத தவிர.... பிடிச்ச விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்ன்னு எதையும் யோசிச்சு செய்ய நேரம் இல்லாம இந்த நாட்கள் ஓடினது கூட நல்லா தான் இருந்தது.... இரவு 12:00 மணி சென்னை எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சிகிட்டேன்.... ஹைவே சோடியம் லாம்ப் வெளிச்சம் பிடிச்சிருந்தது... ஒரு நாள் விடுமுறையா ட்ரைன்ல போனது ரொம்ப பிடிச்சிருந்தது.... ஏதோ ஒரு பூஜாவுக்கு அவளின் காதலன் சொல்லால் சொல்ல முடியாத காதலையோ அல்லது சொன்ன காதலையோ எண்களால் எழுதிவைத்த அந்த ஜன்னல்... அவ்வளவு நெரிசல்லயும் யார்மேலையும் இடிக்காம காபி வித்துட்டு போன அந்த பையன்... ஏதோ ஒரு காதலிகிட்ட நொடிக்கு ஒருதரம் தாமதத்துக்காக மன்னிப்பு கேட்ட காதலன்... வழி பூரா திட்டிக்கிட்டே வந்த குடும்ப தலைவி....... இவ்வளவு கும்பல்லயும் அண்ணா கிட்ட டிரஸ் கலர்க்காக சேம் ஸ்வீட் கேட்ட குட்டி பொண்ணு.... எங்குமே சத்தமாக மட்டுமே பேசும் கறைத் துண்டை கழுத்தில் போட்டிருக்கும் வெள்ளை வெட்டி மனிதர்... எல்லாத்துக்கும் மேல தனக்கு வந்த காத்த எனக்கு வழி அனுப்பி ஊர் வந்து சேரும் வரைக்கும் கைக்குள்ளயே வெச்சு பாதுக்காத்து பத்திரமா கொண்டுவந்து சேர்த்த என் அண்ணாவுடனான அந்த அன்ரிசர்வ்ட் ரயில் பயணமும் கூட மஞ்சள் வானமும் ஆரஞ்சு சூரியனும் முடி கலைக்கும் ஜன்னல் காற்றும் இல்லேன்னாலுமே நல்லா தான் இருந்தது...

டிஸ்கி: யாரோட பதிவுகளையும் படிக்கல.. யார்கிட்டயும் பேசவும் முடியல.. "அச்சச்சோ என்னம்மா ஆச்சு??"-ன்னு பதறாம... "என்ன ஆச்சு? ஏன் எழுதல?"-ன்னு கேட்டு மெயில் பண்ண, கால் பண்ண எல்லாருக்கும் நன்றிகள். இப்பவும் கடமை என்னை வா வான்னு அழைக்கறதுனால தொடர்ந்து எழுத முடியும்ன்னு தோணல.. :-(( (ரொம்ப சந்தோஷம்).... அப்பறம் வரும்போதே டேக் போஸ்ட் தான் எழுதபோறேன்.... (கார்த்திக் பண்ண வேலை) சீக்கிரம் எழுதறேன்... இப்போதைக்கு பை..! பை..!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஈரம்


கோடைக்கால
மழை மேகத்தையோ,
பன்னீரால் பரவசப்படுத்தும்
சிறு பூவையோ,
ஞாபகப்படுத்தி சென்றது
கொடியில் காயும் அம்மாவின்
பருத்திப் புடவை ஈரம்...

மழையின் ஈரம்
காயாத இலைகள்
ஞாபகப்படுத்திச் சென்றன
நேற்றைய
உன் முத்தத்தை...

குளித்து தலைத்துவட்டி
நீர் தெளிப்பத‌ற்குள்
அவசரமாக வரையப்பட்டிருந்தது
வாசலில் கோலம்.
அதிகாலை மழை...

குடைக் கொண்டவர்கள்
நனையத் தயாரில்லை...
அவர்களுக்கெனப் பெய்ய
மழையும் தயாரில்லை...

நீ கவிழ்த்த கோப்பையில்
இன்னும்
மிதந்துக்கொண்டிருந்தது
எனக்கான வானம்...


முதல்ல எல்லாரோட அன்புக்கும் நன்றி எழுதலன்னு சொன்னதும் பதறிபோய் வந்து திரும்பக்கூப்ட்டதுக்கு... :-) நான் கொஞ்ச நாள் லீவ் தான் கேட்டேன் மத்தபடி எழுதவே மாட்டேன்னு சொல்லல... இப்பவும் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல தான் வந்தேன்.. நிறைய புதிய ப்லோக்கேர்ஸ் வந்திருந்தீங்க முந்தைய பதிவுக்கு அவங்களுக்கும் நன்றி.. :-) இப்பவும் புதிய இடம், நிறைய வேலை, எக்ஸாம்ஸ் வேறன்னு பிஸியா இருக்கேன். கூடிய சீக்கிரம் உங்கள சந்திக்கிறேன்.. பை பை..!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

இன்றும் ஒரு நாளென..

அன்று படித்த வரிகளின் தாக்கம்
இன்று இல்லை என் கவிதைகளில்.
துரு ஏறிய இரும்புப்பெட்டியின் உள் விளிம்பில்
காய்ந்துவிட்டிருந்தது
கட்டைவிரலின் இரத்தம்.
கற்றை முடிகளோடு தெருவில் கிடந்தது
நேற்றைய புதிய சீப்பு.
காலம் மட்டும் சுழன்றுகொண்டேயிருந்தது
இன்றும் ஒரு நாளென...

அறிவிப்பு(?!), டிஸ்கி(?!), (ஏதோ ஒன்னு... சொல்லுங்கப்பா): நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில். கடைக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுடவா?? அதாவது, கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கருக்கப்பட்ட கனவுகள்...

கால் வரைத் தாழ்ந்து
காதல் சொல்லாத கணங்களிலும்...,
சுவாசிக்கும் காற்று
வடிகட்டப்படும் நேரங்களிலும்,
என்மேலான என்னுரிமைகள்
உன்னால் பறிக்கப்பட்ட பொழுதுகளிலும்
என,
என் கருக்கப்பட்ட
கனவுகளனைத்தும்...
கருப்புப்பூசி
கவிதைகளாய்
கடைவீதிகளில் உலாவரலாம்....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கவிதையின் ஆரம்பம்


எந்த எழுத்தில் தொடங்குவது
எனத்துவங்கி,
எண்ண முடிச்சுகளால்
கொஞ்சம் நீண்டு...
நினைவுகளிலும், பிரிவுகளிலும்
அகன்றும், குறுகியும்
அவனின் அவதானிப்பிலும்,
சிறிது நிதானிப்பிலும் வளர்ந்து...
காற்புள்ளிகளையும் தாண்டி
ஏதோ ஒரு புள்ளியில்
முற்றுப்புள்ளிகளோடு முடிவுறுகின்றன...
குழப்பங்களும்,
ஆரம்பிக்கும் ஒவ்வொரு கவிதைகளும்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

உப்புமா செய்வது எப்படி?? (அப்படின்னா??)

உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான சமையல் சமாச்சாரம் உப்புமா தான்... யார் சொன்னா?? நான் தான் சொல்றேன்... ஏன்னா தண்ணி கம்மியா போனாலும் பிரச்சனை, தண்ணி அதிகமா ஆனாலும் டம்ப்ளர்ல ஊத்தி குடிக்கிறமாதிரி ஆகிடும்... இவ்ளோ கஷ்டமான இந்த உப்புமா செய்யறது எப்படின்னு உங்களுக்கு நான் சொல்லப்போறேன்னு நினைசீங்கன்னா அதுதான் தப்பு... ஏன்னா என்னைவிட நல்லா சமைக்கிற நிறைய பேர் இங்க இருக்கீங்க எனக்கு தெரியும்... அதனால இத்தகைய வரலாற்று புகழ் மிக்க உப்புமாவ நான் எப்படி செஞ்சேன்னு தான் சொல்லப்போறேன் வித் டிப்ஸோட... (என்ன கொடும சரவணா??)

தேவையான பொருட்கள்லாம் உங்களுக்கே தெரியும்.. ஆனா, முதல் முதல்ல சமைக்கரவங்களுக்கு அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி அவசரமா சமையல் கத்துக்கரவங்களுக்கு அவசியமான பொருட்கள் என்னென்னன்னு சொல்றேன்...

1.முதல்ல ஒரு செல்போன். நிஜமா தாங்க... அதுல எந்நேரமும் மெசேஜோ, காலோ வந்துகிட்டே இருக்கணும்... அதுவும் அவரோடதா இருந்தா டபுள் ஓகே... இது பின்னாளில்.. அதாவது, கல்யாணத்துக்கு பிறகு ஏன் உப்புமா ஒழுங்கா செய்யலைன்னு அவர் கேள்வி கேட்கும் போது, நான் கலைய கத்துக்கும் போது உங்களோடு தொலைபேசியதால் தான் முழுமையா கத்துக்க முடியலன்னு பழி போட வசதியா இருக்கும்... (இந்த ரகசியமெல்லாம் உங்களுக்கு மட்டும் அவர்கிட்ட அனாவசியமா சொல்லி உஷார் பண்ணிடாதீங்க)...

2.அப்பறம் ஒரு அண்ணன். (அதுவும் எனக்கு (இளிச்ச) வாய்..ச்ச மாதிரி... எதுக்குன்னா வெங்காயம் கட் பண்ணி கொடுக்க.. அப்பறம் உப்பு சரி பார்த்து சொல்ல... இதுவும் ஏன்னு சொல்றேன்.. சப்போஸ் நீங்க பண்ண உப்புமா கன்றாவியா இருந்துதுனா (கண்டிப்பா அப்படிதான் இருக்கும்) அதுக்கு கண்டிப்பா திட்டு விழும்.. அப்போ, நாம தப்பிக்க நல்ல வழி இது தான்... உடனே நீ வெங்காயம் கட் பண்ணி கொடுத்ததுதான் சரி இல்ல... அதான் உப்புமா இப்படி ஆயிடிச்சின்னோ... அல்லது, நீ போட்ட உப்பு பத்தல இல்லன்னா என் உப்புமா தேவாமிர்தம் (த்தூ...) மாதிரி இருக்கும்ன்னோ வாதாடலாம்.... )

3.அப்பறம் இன்னுமொரு ஜீவன் இருக்கட்டும்.. அதுவும் உங்களைவிட சின்னவனா.. (எதுக்கா?? நாம செஞ்சத ருசி பார்க்க தான்.... :-(( கண்டிப்பா நாம செய்யறத பக்கத்துல இருந்து பார்த்த அண்ணனுக்கு அதை சாப்ட்டு பார்க்கும் துணிவு இருக்காது... அதனால வேற ஒரு ஜீவன தான் இதுக்கு தேடனும்... அதுவும் கிடைச்சாச்சுன்னா உப்புமா ரெடி... )

4. இன்னுமொரு முக்கியமான விஷயம் தவறி கூட அந்த உப்புமாவ நீங்க சாப்டுடாதீங்க ஏன்னா தற்கொலையும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே...!!

டிஸ்கி1: பதிவு முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல.

டிஸ்கி2:உண்மைக்கதையோ, சொந்தக்கதையோ அல்ல.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

நெய்விளக்கு


காலைத்துயிலெழ,
காட்டுமல்லி பூக்க,
கடிதங்கள் வந்து சேர,
கனவுகளில் கூட நான் சிரிக்க,
தாலியையும்,
தன் கணவனையும் காப்பாற்ற,
பண்டிகைகள் முதல்
பலகாரங்கள் வரை சிறக்க,
தன்னைவருத்தும் தன்னிலிருந்து
என்னைப்பிரிக்கும் திருமணம்
என எல்லாவற்றிற்கும் நம்புவாள்
குளத்தங்கரை அய்யனாருக்கு வாங்கி ஏற்றும்,
இரண்டு ரூபாய் நெய்விளக்கை...
தன் பெருமை தானறியாத,
என் அம்மா....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

கனவுகள் விற்பனைக்கல்ல...


கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்....
வாழ்வின் துவக்கப்புள்ளியினின்று
தள்ளியிருக்கிறேன்...
விடுபட வரமளி...
இன்றைய எந்நிலை உணர்த்த
எனக்கும் வாய்ப்பளி...
ஏனெனில்,
உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு
உடன்பட்டிருக்கிறேன்....
என்னில்,
உனக்கான விதிமுறைகள்
இன்னும் தளர்ந்தப்பாடில்லை....
எனினும்,
மனதில் மட்டும்
மாட்டிவைத்துள்ளேன்,
என் கனவுகள் எதுவும்
விற்பனைக்கல்லவென்று...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

மழைக்கம்பிகள்


தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிலிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....
எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?


-அன்புடன்,
ஸ்ரீமதி.

பக்கத்து வீடு


தனியே ஆடும் ஒற்றை ஊஞ்சல்,
பூத்து, வாடி, உதிரும் மஞ்சள் ரோஜா,
நீளமான தாழ்வாரத்தின்
ஆள் வாசனையற்ற தூண்கள்,
மகிழ்ச்சிக்கென விலைக்கொடுத்து
தனிமையே கொண்டு சேர்க்கும்
தகவல் தொழில்நுட்பங்கள்,
விடிந்துவிட்ட எதோவொரு காலையின்
அவசர அயல்நாட்டு அழைப்புகள்,
சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்...

டிஸ்கி: பரிசல் அண்ணாவின் இன்றைய இந்த பதிவின் தாக்கம்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கவிதை தூண்டும் வரிகள்

கவிதை தூண்ட வரிகள்;
வரிகள் கோர்க்க வார்த்தை;
வார்த்தை தோன்ற வாழ்க்கை;
வாழ்க்கை சிறக்க காதல்;
காதல் பருக சிறு ஊடல்;
ஊடல் முடிக்குமொரு மௌனம்;
மௌனம் கலைக்கும் ஒரு கவிதை;
கவிதைத் தூண்ட வரிகள்
வேண்டும்.............

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வேறு

பேசினோம்
கேட்காமல் கடந்தது
காலம்...
~*~
ஆளுக்கொரு வார்த்தை
வாழ்க்கை...
~*~
மனப்போராட்டம்
டிவியில் கிரிக்கெட்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

வட்டத்திற்குள் பெண்..[எச்சரிக்கை: தொடர் பதிவு]

முன் குறிப்பு: இது என்னோட வழக்கமான பதிவு இல்ல... கவிதை வேண்டுவோர் நேற்று போட்ட இடுகையை படித்துக்கொள்ளவும்.

'வட்டத்திற்குள் பெண்' தலைப்பே எனக்கு புரியல... அதென்ன வட்டத்திற்குள் பெண்?? ஏன் சதுரத்திற்குள் பெண்ணுன்னு இருக்கக்கூடாதான்னு ரொம்ப யோசிச்சு.... அப்பறம் கண்டுபிடிச்சேன் சதுரத்திற்கு மூலை (மூளை) இருக்கு... வட்டத்திற்கு தான் இல்லைன்னு... இப்படி தான் பல தேவையில்லாத, இன்னும் சொல்லப்போனா வட்டம் போல மூலை (மூளை) இல்லாத பல விஷயங்கள்ல தன்னை மாட்ட வெச்சிகிட்டு வெளிவரத் தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்காங்க, இல்ல தவிக்கவிடறாங்க...

பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? எனக்கு ஒண்ணுமே புரியல...

அவங்களும் நம்ம கூட நம்மள மாதிரி பிறந்தவங்கதான்னு நினைச்சாலே போதும்.... ஆனா, பெண்களே அப்படி நினைக்கிறதில்ல... என்னவோ தான் ஒரு தனிப்பிறவின்னும், தியாகத்தின் மறுஉருவம்னும் நினைப்பு... பழைய சாதத்துலையும், ஆறு முழம் புடைவைலையும் தன்னோட ஆசைகளையும், ஆயுளையும் முடிச்சிக்கிறதுதான் அல்லது முடியறதுதான் தனக்கு பெருமை... அப்பதான் இந்த உலகம் தலைல வெச்சுக்கொண்டாடும்ன்னு நினைப்பு....

இன்னமும் பல பெண்களுக்கு கல்யாணம் செஞ்சுக்கரதுதான் வாழ்க்கைல செட்டில் ஆனதுக்கு அர்த்தம்ன்னு நினைச்சுக்கறது வேதனையான உண்மை... 'கணவன் கிரிக்கெட்ல ஜெயிச்சா காலர துவைச்சது நாந்தான்'ன்னு பெருமைப்பட்டுக்கற பெண்கள் தான் அதிகம் நாட்டுல... அவங்கள சொல்லி தப்பில்ல... பெண்கள மகள்களாகவே வளர்க்கப்படுவதில்லை.... ஏதோ ஜல்லிக்கட்டுக்கு காளைய ரெடி பண்ற மாதிரி கல்யாணத்துக்கு ரெடி பண்றாங்க.....

எனக்கு இந்த தலைப்பிலேயே உடன்பாடில்ல... ஏன் பெண்ணுன்னு பிரிச்சி பேசனும்ன்னு தோணுது?? அதான் இப்படி... இந்த பதிவ நான் யாரையும் புண்படுத்தறதுக்காக எழுதல... இந்த பதிவு எதுக்கு ஆரம்பிச்சாங்க?? இதுவரைக்கும் இதுல என்ன எழுதினாங்க?? எதுவுமே எனக்கு தெரியாது... இந்த தலைப்புல எனக்கு என்ன தோணித்தோ, அத இங்க எழுதிருக்கேன்... அதுத் தவிர யார் மனசையாவது புண்படுத்தியிருந்தேனா... தயவு செய்து மருந்து வாங்கி தடவிக்கோங்க.... இந்த தொடர் பதிவுக்கு அழைத்த பாவத்துக்காக சரவணன்கிட்ட காசு வாங்கிக்கோங்க...

சரவணனுக்கு:- சரவணா! நீ இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நாளிலிருந்து நானும் யோசிக்கிறேன்... யோசிக்கிறேன்... யோசிச்சிகிட்டே இருக்கேன்.... எனக்கு இதத் தவிர வேற எதுவும் தோணல... மன்னிக்கவும்.. :-((

கவிதை இருக்கும்ன்னு நினைச்சு வந்தவங்களுக்கு:- நல்ல தலைப்ப கொடுத்து எழுத சொன்னா... அத வெச்சு பெண் பூ போன்றவள்... பிரிட்ஜ்ல வெச்சிருந்தா ரெண்டுநாள் கழிச்சுக்கூட யூஸ் பண்ணிக்கலாம்ன்னு கவிதைங்கற பேர்ல பூசி மெழுக எனக்கு விருப்பமில்ல... சாரி...

யாரையும் இத தொடர கூப்பிடவும் ஆசையில்ல... சாரி...

டிஸ்கி: லேபிள்ல 'பதிவர் சதுரம்'ன்னு போட்ருக்கேன்... வட்டத்துக்கு மூளை இல்லன்னு சொல்லிட்டு, நானே பதிவர் வட்டம்ன்னு போட்டா தேவையில்லாத ஆட்டோக்களை சந்திக்கவேண்டியிருக்கும்கற காரணத்தால்....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

குறிப்புகளாய் சில கவிதைகள்

உனக்கான கவிதைகளை
குறிப்பெடுத்துக்கொண்ட கைப்பேசி
இப்பொழுதெல்லாம்
சிணுங்குவதே இல்லை....
பிரிவுக்கவிதைகளை
காகிதத்தில் உமிழ்ந்தப்பின்....

பறந்துவிட்ட காகிதத்தில்
குறித்துவைத்த வார்த்தைகள்
மறந்துவிடுமுன்
முடித்துவிட வேண்டும்
கவிதையை....

வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...

கண்கள் எரிய
இரவில் கோர்த்துவிட்ட
கவிதைகளால்
வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....

படித்துமுடித்த புத்தகத்திலிருந்து
குறிப்புகளாய் வந்து விழுந்தன
கொஞ்சம்
கவிதைகளும்,
நிறைய
வார்த்தைக் குவியல்களும்...

முழுவதும் மொழியாத
பொழுதுகளில்
குறிப்புகளாய்
சில கவிதைகள்...-அன்புடன்,
ஸ்ரீமதி.

ரசிக்கத் தெரியாதவனின் கவிதை

கவிதை ரசிக்கத் தெரியாதவனின்
கண்களிலிருந்து கவிதையைக் காண
எத்தனித்தேன்
சில வார்த்தைகள்
என்னையும் அறியாமல்
கவிதைக்குள் இழுக்க
பெரும் பாடுடன் நான் வெளிவருவதும்,
உள்ளிழுப்பதும் தொடர்ந்தது
இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....-அன்புடன்,
ஸ்ரீமதி.

சந்திப்புகள்


கலைந்துவிட்ட கேசத்தை
சரி செய்ய சொல்லியிருக்கலாம்...
நெற்றி திலகத்தை
நேர்ப்படுத்த மொழிந்திருக்கலாம்...
தொலைந்துவிட்ட குங்குமத்திற்கான
காரணம் வினவியிருக்கலாம்....
வளர்ந்துவிட்ட நகங்களை சீர்ப்படுத்த
வழிமுறைகள் பகன்றிருக்கலாம்....
அங்கு,
அவளின் மடியில் அழும்
அந்த குழந்தையின் உச்சி முகர்ந்து
வேடிக்கைக்காட்டியிருக்கலாம்...
என் துறையினை சார்ந்து
எங்கோ ஓர் மூலையில்
இருக்கும் காதலனிடம்
கேட்ட பெண்ணின்
சந்தேகம் தீர்த்திருக்கலாம்...
முன்பின் முகமறியாத எங்களின்,
எதிர்ப்பாராமல் ஒன்றாக அமைந்துவிட
இந்த பயணத்தில்,
எதுவும் செய்யயியலவில்லை என்னால்...
எல்லாவற்றிற்குமாய்
ஒரு சிறு புன்னகையும்,
இந்த கவிதையும் தவிர...


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வணக்கம்..! உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்... 'சந்திப்புகள்' என்னுடைய 100-வது பதிவு. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு (எப்படி இவ்ளோ பதிவு போட்டேன்னு இல்ல ;-)) இவ்ளோ சீக்கிரம் எப்படி உங்க மனசுல எல்லாம் இடம் பிடிச்சேன்னு தான்... சாதாரணமா வலையுலகத்துக்கு வரவங்க எல்லாம் சொல்ற டையலாக் தான்... "நான் அதிகம் யார்கூடயும் பேசமாட்டேன்... இங்க வந்ததுக்கு அப்பறம் தான் பேச கத்துக்கிட்டேன்"-னு.. ஆனா நான் அப்படி இல்லைன்னாலும் நல்லா பேச, பழக இங்க வந்துதான் கத்துகிட்டேன். அந்த பெருமை எல்லாம் உங்களையே சாரும். ரொம்ப சீக்கிரம் பல நல்ல உள்ளங்கள சம்பாதிச்சிருக்கேன்.. :-)) ம்ம்ம் அப்பறம் இவ்ளோ நாள் நான் போட்ட மொக்கை எல்லாம் தாங்கிகிட்டு இவளும் ரொம்ப நல்லவன்னு நம்பி வந்து படிச்சிட்டு கமெண்ட்டிட்டு போனவங்களும், முதல் முதல்ல நான் தமிழ்மணத்துல சேர ரொம்ப உதவியா இருந்த நிஜம்ஸ் அண்ணா, தமிழ்ப்ரியன் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா அவர்களுக்கும் (இப்போல்லாம் ஏன்னு தெரியல நிஜம்ஸ் அண்ணா வெறும் ஸ்மைலியோட போயிடுறார்.. :-(( ) இவ்ளோ நாள் நான் எழுத ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் என் நன்றி! நன்றி! நன்றி!

வெறும் நன்றி மட்டும் சொல்லி உங்களை எல்லாம் பிரிக்க விரும்பல.. சோ கூடிய சீக்கிரம் உங்களுக்கெல்லாம் ட்ரீட் வெக்கிறேன்.. இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-))) ஒவ்வொருத்தர் பேரோடவும் நன்றி சொல்லனும்ன்னு தான் ஆசை... அப்பறம் பதிவு பெரிசா போச்சுன்னு அடிக்க வந்துடுவீங்க.. :-(( அதனால இதோட இந்த நன்றி நவிலல் படலத்த முடிச்சிக்கிறேன்... பை..! :-)


-அன்புடன்,
ஸ்ரீமதி.

வேலிப் பூக்கள்

(புகைப்படம்: TKB காந்தி)

சாலை இருமருங்கிலும்
கிளை விரித்து பரவியிருந்தது..
ஆரஞ்சும், சிவப்பும் கலந்திருக்க
அந்திவேளை ஞாயிறை ஞாபகப்படுத்தியது...
பொம்மை இழந்து
கண்மை கலைய
அம்மா பின் சென்ற பிஞ்சுக்கும்,
காதல் இழந்து
தனியாய் தவிக்கும் அவளுக்கும்,
மல்லிகை மட்டுமே
கூந்தலில் சூடும்
வழக்கம் கொண்ட என் அம்மாவுக்கும்,
கணவன் இழந்த
அடுத்த வீட்டு பெண்ணுக்கும் என,
எல்லாம் ஓய்ந்துவிட்ட
இந்த வேளையில் பூத்திருக்க வேண்டாம்
சாலையோர வேலிப் பூக்கள்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் தோய்ந்து


(புகைப்பட உதவி: TKB காந்தி)

தனித்து நின்ற தனிமையை
எரித்துவிட்டு போனது
உன் பிரிவு;
சாம்பல் மட்டும்
சாயம் போகா
உன் நினைவுகளாக
என்னில்.....

போட்டதும் கலைந்த
படுக்கையும்,
கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,
சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றன
இரவுகளை....

உன்னை நினைத்து
உறங்கிவிட்ட இரவுகளில்
கவிதைகளெதுவும் கைவரவில்லை...
மைதோய்ந்த காகிதங்களும்,
கொஞ்சம் மையும்
மட்டும் கோலமிட்டிருந்தது,
உன் காதலை
என்னைச் சுற்றி....

தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வேறு

நள்ளிரவு நேரத்தில்
கைப்பேசி வெளிச்சத்தில்
கைவலிக்க எழுதிய
நலம் குறித்த
அம்மாவுக்கான கடிதத்தை
கிழித்தெறிகிறேன்
அறைத்தோழியின்
"சுகந்தன்னே?"-வில்...


காடு, மலைகளையும்
காட்டருவிகளையும்
இன்னப்பிற
இயற்கை நிகழ்வுகளையும்
நட்சத்திர, வெண்ணிலவுகளையும்
ரசிக்க முடிந்தது
மின்சாரம் தடைபடாத
முழு இரவின்
கனவில்....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

அம்மாவின் வாசனை


நகம் வெட்டிக்கொள்ளா
ஞாயிற்று கிழமைகளும்..
கலைந்த கூந்தலின்
சீகைக்காய், தேங்காய் எண்ணெய்
நறுமணங்களும்....
உன்னால் முணுமுணுக்கக் கற்றுக்கொண்ட
பழைய பாடல் வரிகளும்...
உள்ளங்கையின் இளஞ்சிவப்பு
மருதாணி நிறமும்...
மார்கழி மாதத்து உதட்டு வெடிப்பின்
நெய் பூசிய பளபளப்பும்...
வெளிச்சம் தொலைத்த இரவு
மெழுகு உருகல்களின்
கைச்சுடும் தீயும்....
புடவை முந்தானையின்
நனைந்துவிட்ட பாகமும்...
என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

எனக்கென்று ஒரு வானம்...


எனக்கென்று ஒரு வானம்,
துரோகங்களின் நிழல்கள் படியாமல்...
அங்கு, என்
விண்மீன்களை நாற்றுகளாக்கி,
விளைநிலங்களில்
வெண்ணிலாக்களை ஊடுபயிராக்கியிருந்தேன்...
வானம் தொட்டுப்பறந்த
பறவையின் சிறகுகளில்
கொஞ்சம் சிக்கி
அதன் எச்சங்களில்
கொஞ்சம் பூமி பார்த்தேன்....
கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...
அவ்வப்பொழுது
மின்னல் கீற்றுகளை அருவிகளாக்கி,
மலைகளை மாலைகளாக்க
வார்த்தைகளைக் கொஞ்சம் வழியவிட்டேன்...
கவிதை அமைந்தது...
சாகாவரம் பெற்ற கவிதைகளனைத்தும்
இப்பொழுது,
மரங்களாகி நிற்கிறது
மீண்டும் என் வானம் தொட....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

நர்சிம் அண்ணாவுக்காக.....

இன்னைக்கு நான் இத எழுத காரணம் நர்சிம் அண்ணா ரெண்டு நாளா போட்ட இந்த பதிவுகள் தான். அதுக்கு என்னன்னு கேட்கறீங்களா? இருக்கு... கடைசில சொல்றேன்.. இப்போ வலையுலகத்துல கொஞ்ச நாளாவே இந்த புத்தகங்கள பத்தின பதிவுகள் அதிகமா இருக்கு. பரிசல் அண்ணா, கார்க்கியோட இந்த பதிவுகள். இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம் தான். என்னென்ன புத்தகங்கள் படிச்சிருக்காங்க, நாம என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம், எதை எல்லாம் இன்னும் படிக்கல, இப்படி பல விஷயங்கள் தெரிஞ்சிக்க உதவுது. ஓகே., விஷயத்துக்குவா.. அதானே?? இருங்க சொல்றேன். அது வேற ஒன்னும் இல்ல எங்க வீட்லயே அதிகம் படிச்ச படிப்பாளி நான் தான் (சிரிக்கக்கூடாது..). பாட புத்தகங்கள் தவிர்த்து கைல கிடைக்கிற எந்த பேப்பரா இருந்தாலும் படிப்பேன். சக்கர கட்டி வந்த பேப்பர படிக்கிறேன்னு சர்க்கரை கொட்டி, அம்மா தலைல குட்டி... ஓகே விடுங்க...

இந்த படிக்கிற பழக்கம் எப்போ வந்ததுன்னு எனக்கு தெரியல.. என் அம்மாவோ, என் அப்பாவோ, மாதவனோ (அப்போவெல்லாம்) இப்படி புக் வெச்சிகிட்டு படிச்சு நான் பார்த்ததில்ல.. "கழுத வாய பார்த்து நெல்ல கோட்ட விட்ட கத" (இந்த கதை தெரியாதா??)தான் நடக்க போகுது உனக்குன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.. எப்படி இப்படி ஆனேன்னு தெரியல.. ஆனா, சின்ன வயசுலேயே பாட புத்தகமெல்லாம் வாங்கினதும் முதல் வேலையா என்னோட, அண்ணாவோட நான்-டீட்டெயில் எல்லாத்தையும் படிச்சிட்டு தான் வெப்பேன்.

அப்பறம், ஆறாவது படிக்கும் போதுன்னு நினைக்கிறேன்.. தமிழ் பாட புத்தகத்துல பாரதிதாசனோட 'இருண்ட வீடு' பத்தி படிச்சிட்டு லைப்ரரி மூட இருந்த அவசர அஞ்சு நிமிஷத்துல படிச்சேன். அப்பறம் அந்த லைப்ரரியனுக்கு (ஒரு அக்கா) என்ன பிடிக்காம போச்சு... (பின்ன பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை புக் எடுத்தா??) இப்படி ஆரம்பிச்ச என் பழக்கம் சுஜாதா படைப்புகலால நல்லா வளர்ந்து வந்தது. ஆனாலும், இது வரைக்கும் எல்லாராலையும் பேசப்படற பல பிரபல எழுத்தாளர்களோட படைப்புகள நான் படிச்சதில்ல. ஒரு பதிவுல சென்ஷி அண்ணா கேட்டதா ஞாபகம் பாலகுமாரன் எழுத்துகள் படிப்பீங்களான்னு?? அவர் புத்தகமெல்லாம் பார்த்திருக்கேன் (தாடியோட தானே இருப்பார்?) ரொம்ப பெரிசு பெரிசா இருக்கும்.. வீட்ல ஒத விழும் இவ்ளோ பெரிசா எடுத்துட்டு போனான்னு அதை அப்படியே விட்டுட்டேன்.

எனக்கும் சுஜாதாவுக்குமான பரிச்சயம் (ம்கும்..) அதிகமானது கல்லூரி நாட்கள்ல தான்... அவரோட எல்லா நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாத்தையும் படிச்சிட்டேன்னு சொல்ல முடியாது... ;-)) ஆனா, ஸ்ரீரங்கத்து தேவதைகள், வைர கல், காயத்ரி, நைலான் கயிறு, பத்து செகண்ட் முத்தம், எதையும் ஒரு முறை, ஓரிரு எண்ணங்கள்... இன்னும் பல முதல் அட்டை இல்லாத, சில பெயர் தெரியாத அப்படின்னு படிச்சிருக்கேன்.

அப்பறம் கவிதை புத்தகங்களுக்கு எப்பவும் முதலிடம் உண்டு. சும்மா கலந்து கட்டி படிப்பேன். வைரமுத்து, கவிக்கோ.அப்துல் ரஹ்மான், பா.விஜய்(உடைந்த நிலாக்கள் பாகம்-II), மீரா(கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்) ,தபூ சங்கர், அறிவுமதி (இவரோட 'நட்புகாலங்கள்' மட்டும் ஆயிரம் முறைக்குமேல வாசிச்சிருப்பேன்.) இதெல்லாம் ஓசில படிச்சது.. (மீன்ஸ் லைப்ரரில). ஆனா, எனக்கே எனக்குன்னு வந்த உயர்ந்த பரிசுகளா இன்னைக்கும் நினைக்கறது பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் (இருண்ட வீடு, குடும்ப விளக்கு, எதிர்பாரா முத்தம்), அப்பறம் திருக்குறள்.

கல்லூரி காலத்துல ரமணி சந்திரன் நாவல்கள் என் தோழிகள் மூலம் பழக்கம். சும்மா உளுந்து உளுந்து படிப்பாளுங்க. என்னதான் இருக்குன்னு வாங்கிபார்த்ததுல சத்தியமா சொல்றேன் அதுல உருப்படியா ஒண்ணுமே இல்ல. இப்பவும் பிடிச்ச ஒரே கத "லாவன்யா" (நல்லவேள அந்த ஆன்டி எழுதறதில்ல போல இப்போவெல்லாம்...)


'பொன்னியின் செல்வன்' படிச்ச குஷில 'சோழ நிலா' எடுத்தேன். 'இப்படியே போயிட்டு இருந்தா நீ காலேஜ் முடிக்கமாட்டன்'னு சொல்லி என் தோழிங்க பிடுங்கி வெச்சிட்டாங்க. (அப்போ எனக்கு பைனல் செமஸ்டர்..) அப்பறம் அதை பார்க்கவே முடியல.. :-(( காலேஜ் முடிச்சு வந்து இந்த ரெண்டு வருஷத்துல நான் படிச்ச புத்தகங்கள் கதாவிலாசம்(எஸ்.ரா), கற்றதும் பெற்றதும், வந்தார்கள் வென்றார்கள், சினிமா சினிமா, மால்குடி டேஸ், இப்போ மறுபடியும் ஓரிரு எண்ணங்கள். இவ்ளோ தாங்க நம்ம புத்தக அறிவு.

இப்போ நர்சிம் அண்ணா விஷயத்துக்கு வருவோம்... நானும் இந்த ரெண்டுநாளா அவர் போடற பதிவ படிக்கிறேன்... படிக்கிறேன்.... படிக்கிறேன்... படிச்சிகிட்டே இருக்கேன்... எனக்கு கொஞ்சமும் புரியவே இல்ல... பிரபல பதிவர கேட்டா அதெல்லாம் பின் நவீனத்துவம் உனக்கேதுக்குன்னுட்டார்... :-((

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கண்ணாடி துகள்கள்

சிதறிய
கண்ணாடி துகள்களென
என்னிதயம்
உன்னைக்
கடந்த பின்..!

உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...

காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்...

திருமணத்திற்கு
முந்தைய
காதலென உறுத்தியது
ஜீன்ஸ் அன்று
கால் கொலுசு...


கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

கனவில் இதுவரை

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது