ஊடல்களும் காதலே...!!

நம் ஊடலெல்லாம்
ஊடல்கள் அல்ல
நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு
செய்யும் காதல்


ஒரு நிலா
பல விண்மீன்களென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல


அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்
இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்
"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!
உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு
இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..


இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்தன்னை மறந்து
தூங்கிய நாட்களை
விட
உன்னை மறந்து
தூங்கிய இரவுகள்
குறைவே


திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் துறப்பதென..உன்னிடம்
மொழியப்படாத
வார்த்தைகள் அனைத்தும்
என்னுடன்
சண்டையிட்டு
மௌனம் காக்கின்றன
நீ முத்தமிடுகையில்...மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்-அன்புடன்,
ஸ்ரீமதி.

பின்விளைவுஆனந்த விகடனும்
அடுத்தவீட்டு நாய்க்குட்டியும்
எஃப். எம்மின் பரிச்சயமாகாத
குரல்களும்
பழைய பாடல்களும்
எங்கேயோ வெறித்தப் பார்வைகளும்
மனதின் ஏதோ ஒரு மூலையில்
உனக்கான ஏக்கங்களும்
என
எல்லாவற்றையும்
பழக்கிக்கொண்டேன்
நமக்கான
பிரிவு உறுதியானபோது...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

முகமூடி மனிதர்கள்

கந்தகம் கலந்த காற்றை காலை முதல் சுவாசித்தாள். இன்று எப்படியும் சொல்லிவிடவேண்டுமென எழுந்த எண்ணங்களுக்கு உரமிட்டு நன்கு வளர்த்திருந்தாள். மாலை வரும்முன் சொல்லிவிடத்துடித்தவள் எதிர்வருமெல்லோருக்காகவும் தன் கைகளில் தயாராக வைத்திருந்த சிரிக்கும் முகமூடி அணிந்தாள். மறு நிமிடம் அதைக் கழற்றி ஆகாயம் முழுவதும் சிறு சிறு துண்டுகளாக்கி சிதற செய்து பின் பெருமௌனம் கொண்டாள். இனி யாரும் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருக்க அலட்சிய பார்வையுடனான அவளின் முகமூடியை அணிந்து வெகு வேகமாக அவன் நினைவலைகள் அவள் நெஞ்சில் அடிக்கும் கொட்டத்தை பிரதிபலிக்கும் அந்த அலை நனைத்து நாளை மண்ணாகப்போகும் இன்றைய பாறையை நோக்கி நடந்தாள்.

இருள்வதற்குள் அவள் நிலை அவனுக்கு உரைக்க ஆயத்தமாக, மௌனத்தை இறுக்கி அணைத்து இனி மொழியப்படும் வார்த்தைகளை அதிக அடர்த்தியுடன் வெளிவரும் எரிமலைக் குழம்பாக்கிகொண்டிருந்தாள். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவளைப்போலவே முகமூடி அணிந்துகொண்டோ அல்லது அணிய முற்பட்டு தோற்றோ இருந்தனர். மனம் அவனை நினைத்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரிடமும் பேச, பழக ஒவ்வொரு முகமூடியை பயன்படுத்தினர். இதெதுவும் அவள் அறியாமலில்லை. இவளுக்கும் முகமூடியின் அவசியங்கள் தெரியாமலில்லை. அதை உபயோகப்படுத்துவத்தின் முக்கியத்துவத்தினை முகமூடி மனிதர்களிடமிருந்தே கேட்டறிந்திருந்தாள். எல்லாம் தெரிந்தும் அவள் அவளுடை நிலையிலிருந்து பிழன்று, எல்லாம் துறந்து, முகமூடியைப் பற்றி மறந்து, அவனிடம் பேசத்துவங்கிய அந்த மழைநாளின் முடிவில் எவருக்கும், ஏன்.. அவனுக்கும் தெரியாமல், ஆனால், மிக பூதாகரமாய் வளர்ந்திருந்தது அந்த மரம்.

இவளின் மரம் பற்றிய கேள்விகளுக்கு மனிதர்களிடம் பதிலற்று போக அவனிடமே தஞ்சமடைந்தாள். அவளின் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்தான். அவளிடமிருந்த முகமூடிகள் அவளறியாமல் அவனால் களவாடப்பட்டது. அவனும், அவளும் பேசிக்கொண்டதெல்லாம் காற்றில் அலைந்து, காட்டில் ஓடி, தனிமையோடு ஊடி, பின் அவர்களையே அடைந்தது. அவளின் தூக்கம் மறந்த மெல்லிய இரவுகளின் முனகல் கூட அவனுடையதாகியிருந்தது. அவனில்லாத பொழுதுகளின் வெகுநேர நிசப்தங்கள் சப்தக்கூடுகளை நிரப்பி ஓலமிட்டபடியிருந்தது.

மறுமுறையும் எச்சில் விழுங்கினாள். தொண்டையிலிருந்து உட்கிரகிக்கப்பட்ட உமிழ்நீரின் அமிலத்தில் அணுஅணுவாய் அவள் கரைந்தாள். இனியும், இதை சொல்ல இறுக்கமான, அதே சமயம் அதிக கொதிநிலையுடன் கூடிய கனமான மனம் தேவையென உணர்ந்து, தற்காலிகமாக பேச்சை நிறுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டாள். இழுத்தக் காற்றின் ஆக்ஸிஜனால் நுரையீரல் நிறைந்து புது வகையான சுகம் உணர்ந்தாள். எனினும், இன்றைய அவள் நிலை பற்றிய அவள் எண்ணம் இதயத்திலிருந்து உயிரின் ஒரு பகுதியை மட்டும் வலியோடு பிடுங்கி காற்றில் எரிந்தது. அந்த சிவப்பு வானம் முழுவதும் தெரிந்தது. அவன் வந்துவிடுவான். இன்று கேட்க வேண்டும்... நான் சொன்ன காதல் எல்லாம் அவனில் எங்கு தங்குகிறதென?? மறுபடி ஒருமுறை அவள் கைகளின் ரேகைக்குள் புதைந்திருந்த அந்த முகமூடியை பார்த்தாள்... மிக வேகமாக, மிகவும் அழுத்தமாக.. 'வேண்டாம்'.. என சத்தமிடும் இதயத்தை புறந்தள்ளி, வைத்திருந்த முகமூடியால் முகம்மூடி, அவள் தலைக்கோத அவன் பணித்திருந்த அவனின் விரல்களை அதிவேகத்தொடும் அலட்சியமாகவும் தள்ளி, கடைசியில் சொல்லியேவிட்டாள்....,

"இனிமே முத்தம் தராதடா...... ப்ளீஸ்...."

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தாய்மை

"இன்னைக்கு கார்த்தாலதான் நான் அதப் பார்த்தேன்.. ஒரு நாலு அஞ்சு இருக்கும்.."

"ஐ டூ சா தட்... உவ்வே..."

"நீ பாக்கலியா??"

"இல்ல மாமி... நான் வெளில போகவே இல்ல..." இன்றைய காலை தேநீர் நேரத்து ரொட்டித்துண்டுகளாகிப் போயிருந்தது அந்த நாலு ஐந்தின் வருகைக்கான பேச்சு.

"ம்ம்ம் என்னமோ போ... ஊரே மழையும், புயலுமா இருக்கு.. இதுங்க எப்படி தான் இருக்க போறதோ?? நான் போறேன் எங்காத்து மாமா ஆபீஸ் கிளம்பனும் டிபன் செய்யலேன்னா வள்ளுன்னுவார்".

மாமி நகர்ந்ததும் சுபாவும் கிளம்பினாள். வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது. என்னவரின் கண்கள் காலைநேர காபியோடு செய்தித் தாள்களின் விளையாட்டு செய்திகளில் லயித்திருந்தது. பால்கனியிலிருந்து பார்த்தால் தெரியும். அழகாக இருந்தது. கருப்பு வெள்ளையும் கொஞ்சம் செம்மண்ணும் வெள்ளையுமாய் ஐந்து நாய்க்குட்டிகள். எங்கள் தெருவின் புதுவரவு.

"அதெல்லாம் வேண்டாம்", குரல் கேட்டுத் திரும்பினாள்.

"என் பாஸ் குடுத்த பொமேரேனின் என்னாச்சு?? இந்த மாதிரி அப்பார்மெண்ட்ஸ்ல எல்லாம் நாய் வெச்சிக்கறது கஷ்டம்.", கல்யாணமான இந்த நான்கு வருடங்களில் நான் சொல்லாமல் அவர் புரிந்துக்கொண்ட ஒரு விஷயம் இது என்பதில் எனக்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம் உண்டு. சிறுவயதிலெல்லாம் எங்கேயாவது நானும் அண்ணாவும் நாய்க்குட்டியைப் பார்த்தால் போதும் வீட்டிற்கு தூக்கிவந்துவிடுவோம் அம்மாதான் சொல்வாள்,

"டேய் இத ஏன் இங்க தூக்கிண்டு வந்தீங்க??"

"அம்மா இதுக்கு அம்மா இல்லம்மா... பாவம் தனியா கத்திண்டு இருந்தது... அதான் எடுத்துண்டு வந்துட்டோம்.."

"அதோட அம்மா எங்கயாவது இதுக்கு சாப்பாடு தேட போயிருக்கும்... இப்ப அது இந்த குட்டிய தேடிண்டு இருக்கும்.. போயி எடுத்த இடத்துலேயே போட்டுட்டு வந்துடுங்க பாவம்... கத்தறது பாரு.." அடுத்த ஐந்தாவது நிமிஷம் அதன் அம்மா தேடிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுமோ என பயந்து எடுத்த இடத்தில் போட்டுவிட்டு வருவோம்.

"மாலினி டிபன் ரெடியா??"

"இதோ ஒரு நிமிஷம் சட்னி மட்டும் அரைச்சிடுறேன்.."

"ம்ம்.... இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும்.. நீ சாப்டுட்டு தூங்கு.. அந்த நாய்க்குட்டிகள நேத்து நைட்டே யாரோ சாக்குல கட்டி கொண்டுவந்து போட்டா நான் பார்த்தேன்... ஈவினிங்க்குள்ள ப்ளூ கிராஸ்க்கு போன் பண்றேன்", மனசுக்குள் ஏதோவருத்தியது. நாள் முழுவதும் அந்த குட்டிகளின் சத்தமும், மாமியின் அதைப்பற்றிய தகவல்களும், என்னை கவலையுறச் செய்தது.

"நம்ம முசுடு நாராயணன் எதானு பண்ணிடுவான் மாலி..."

"எஸ்" சுபா வேறு ஒத்துப்பாடினாள்..

முசுடு நாராயணன் இந்த இரண்டடுக்கு அப்பார்மெண்ட்ஸின் கீழ்தளத்தில் வசிப்பவர். குழந்தையில்லை, அவரும் அவர் மனைவியும் மட்டும் தான். இதுவரை அவர் அதிர்ந்து பேசியும் நான் கேட்டதில்லை, அனாவசியமாக பேசியும் நான் கேட்டதில்லை. பின் ஏன் அவருக்கு இப்பெயர் என மாமியிடம் கேட்க நினைத்து தொண்டையோடு வடிகட்டிவிடுவேன் வார்த்தைகளை...

என்னவரின் உடம்பு சரியில்லாமல் மூன்று நாள் ஹாஸ்பிடல் வீடு என நான் இருந்த காலத்தில் முசுடு நாராயணனும் அவர் மனைவியுமே துணையாயிருந்தனர் என நான் சொல்ல மகள் பிரசவத்திற்கென ஊர் சென்று திரும்பியிருந்த மாமி வாய் பிளந்தாள்.

"அதுங்க சத்தமே கொஞ்ச நேரமா காணலியே..."

"ஓ ரிஷி டோன்ட் லைக் பப்பிஸ்... உவ்வே..", என்றாள் சுபா.

"ஏண்டி மாலி உனக்குதான் ரொம்ப பிடிக்குமே.."

"இல்ல மாமி அவருக்கு பிடிக்காது..".

என்றைக்கும் இல்லாமல் இன்று தனிமை மிகவும் வாட்டுவதாயிருந்தது. இப்பொழுது நிஜமாகவே அவற்றின் குரல்கள் அடங்கியிருந்தது. தனிமை ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியிருந்தது.

"இன்னும் எவ்ளோ நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம்??" கடைசி முறை ஊருக்கு வந்த அவரின் அம்மாவின் கேள்வி.

"அவர் ஏதோ ஆன்ஸைட் போக சான்சஸ் இருக்கு அதனால இப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டார் அம்மா..."

"இப்படி சொல்லியே நாலு வருஷமாயிடுத்து... கேக்கரவாளுக்கு பதில் சொல்லிமாலல... நான் இனி இந்த வரதா இருந்தா அது உன் வளைக்காப்பு சீமந்தமா தான் இருக்கணும்..." சொல்லி சென்று பத்து மாதம் ஆகிறது.

கடைசியாக மாமி சொன்னாள் "ஏய் மாலி இந்த கூத்த கேளு முசுடும் அதோட ஆத்துக்காரியும் அந்த நாய்க்குட்டிகள அவா வீட்ல கொண்டு போயி வெச்சிண்டு இருக்கா... ம்ம்ம் நம்மாத்துல எல்லாம் குழந்தைங்க இருக்கு அதுகளுக்கு இதெல்லாம் ஆகாது..."

"என்ன மாலி தூங்கல??"

"ம்ஹும்... என்னங்க.."

"ம்ம்ம்..."

"நமக்கும் ஒரு குழந்தை வேணும்..", படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விலக்கி சிரித்தான்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரை காதல்

கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்

கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறதுகைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடிகடலோர
மணற் சிற்பமாக
ஆசை
உன் காதலை
சுவாசித்தப்படி
உன்னுள்ளே கரைய
நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்
அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமேகவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற


ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

துளி காதல்

அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்....


நாணக்குடை
பிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்....'ஏய் இனிமே
மழைல நனையாதடி...!!'
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது..
நீ அணைத்த
தடம் அழிக்கும்
மழை....

அந்த மழைநாளின்
விளிம்பில்
நீ தந்த முத்தம் தான்
சூடான தேநீராய்
இன்னும் இனிக்கிறது
இதழோரம்....ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...
துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்...

மழை எனதான்
மனதுக்குள் விழுந்தாய்
கணுக்கணுவாய்
வியர்த்துப்போகிறேன்
உன் காதலில்..


நீலம் பூசிய
வானத்தைவிட
கார்கால மேகம்
அழகு...
உன் நீலவிழிகளில்
தீட்டிய
கரு மைப்போல...


மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...
குடையில்லா நேரத்து
மழைப்போல
எதிர்ப்பாரா நேரத்து
உன் முத்தமும்
சுகமே...!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது