காதல் திருத்தம்-7

உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!
****
என்றோ நாம் சிரித்ததை நினைத்து இன்று கண்ணீர் சிந்துவோம்..., என்றோ நாம் அழுததை நினைத்து இன்று சிரிப்போம்... இது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும். இன்று அவள் கண்களில் வரும் கண்ணீருக்குக் காரணமான நிகழ்வு என்றோ நிகழ்ந்து முடிந்து விட்டது என்று அவள் சொன்னாலும் யாரும் நம்புவாரில்லை. ஏனெனில், ஒவ்வொரு முறையும் அவன் பிரிவின் வலி அவளுள் ஆழமான கண்ணீர் கடலை உருவாக்கி வைத்திருந்தது. அது என்றும் வற்றாமல் ஒவ்வொரு முறை அவனை நினைக்கும் போதும் தன்னோடு உப்பையும் சேர்த்துக்கொண்டு கண்கள் கரிக்க கன்னம் தாண்டியது.

"அம்மா வசுமதி... எங்க இருக்க??".

குரல் கேட்டு கண்கள் துடைத்தாள். ஆனால், கண்ணீரால் சிவந்த கண்களை என்ன செய்வதெனத் தெரியாமல் தலையை தாழ்த்தி, வார்த்தைகளுக்கு போராடி, அது வர மறுத்த பட்சத்தில் மிகவும் மெல்லியக் குரலில், "ம்ம்" என்றாள்.

"இந்த இருட்டுல... இவ்ளோ குளிர்ல.. இங்க என்னமா பண்ற??"

"ஒண்ணுமில்ல ஆன்டி.. சும்மா தான்.. காத்து வாங்கலாம்ன்னு வந்தேன்.."

"நல்லா காத்து வாங்கினே போ... உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது.. உள்ள வா.."

வெளிச்சத்திருக்கு வந்ததும் அவளின் கண்களின் சிவப்பு நன்கு புலனாகியது. எனினும், ஏற்கனவே அழுதிருக்கும் அவளிடம் எதுவும் கேட்டால் மீண்டும் அழக்கூடுமென பேசாமலிருந்தார்.

என்றும் போலவே இன்றும் சூரியன் கிழக்கில் தான் உதித்தது.. எனினும் அவளுள் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது.. நேற்று மனம் விட்டு அழுததால் என நினைத்தாள்.

"வசு எழுந்துட்டியா?? உன்ன பார்க்க விடியக்காலையே யாரோ ஒரு பையன் வந்தான்.. நீ தூங்கரன்னு சொன்னதும் உன்ன எழுப்ப வேணாம் வெயிட் பண்றேன்னு சொல்லி, உனக்காக வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கான் போயி பாரேன்.."

"பையனா??", கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.

'யாராக இருக்கும்?? ஒருவேள.. ஒருவேள.. அருணோ?? ச்சே.. ச்சே.. நிச்சயமா இருக்காது... பின்ன யாரு??'

வாசலைப்பார்த்து திரும்பி நின்றவன் முதுகு மிகவும் பரிச்சயமானது.

"சாரி வசு மறந்துடுன்னு சொல்லிட்டு போயிட்டேனே தவிர, என்னால சத்தியமா முடியல... எவ்ளோ பிரச்சனை வந்தா என்ன?? சமாளிச்சு எதிர்நீச்சல் போட்டு காதல்ல ஜெயிக்கனும்கர முடிவுல வந்துருக்கேன்.. ஆனா, உடனே இப்போவே என்னால உன்ன எங்க வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போக முடியாது.. நீ எனக்காக வெயிட் பண்ணுவன்னு நம்பறேன்.. நான் வரேன்..."

எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..

-முற்றும்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

எல்லாம் சுகமே...., என்னைத் தவிர...


கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....

'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுறங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-கவிதைகள்

உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!
***
நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்
***
எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??
***
பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்
***
இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??
***
இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!
***


-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-6

உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி
********
காதலிக்க ஆரம்பித்தப் பிறகு காதலர்களின் கால்கள் மட்டுமல்ல காலமும் இறக்கைக்கட்டி பறந்தது. இதுநாள் வரைத் தெரியாத, புரியாத, பயன்படாத சில வார்த்தைகளும், பல அர்த்தங்களும் புரிபட ஆரம்பித்தன. அறிவியலின் பலக் கண்டுப்பிடிப்புகளில் காதல் தேவதையின் குழந்தையாகக் கருதப்பட்டு வரும் செல்லிடைப்பேசி அவனுக்கும், அவளுக்கும் இடையில் அடிக்கடி பேசியும், சிணுங்கியும், காதலித்தும், கண்ணீர்வடித்தும் காற்றலைகளைக் காதலால் நிரப்பிக்கொண்டிருந்தது.

ஏனோ சந்தோஷங்களோ துக்கங்களோ நாடோடியாகவே இன்றும் இருக்கின்றன. நிறைய இடம் மனதில் தந்தாலும் அவை சிறிது காலத்திற்கு மேல் தங்குவதில்லை. அவளின் இன்றைய நிலையும் அதுதான்.. காதலை சொல்லத் தான் ஆடம்பரமான வார்த்தைகளும், அலங்காரமான முகபாவங்களும் வேண்டும். பிரிவுக்கு இவை எதுவும் தேவை இல்லை என அவன் ஒற்றை வார்த்தை உணர்த்தியது,

"சாரி உன்ன நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.. எல்லாத்தையும் மறந்துடுன்னு நான் சொல்லமாட்டேன்... ஏன்னா என்னாலயே அது முடியாது.... ஆனா மறக்க ட்ரை பண்ணு ப்ளீஸ்.... எனக்கு வேற வழி தெரியல... எங்கேயோ யார் காதலோ பிரியும்போது துடிச்சவன் தான்... இன்னைக்கு என் காதல, நான் உனக்கு தந்தத திரும்ப வாங்கிட்டு போக வந்திருக்கேன்..."

வெகுநாட்களுக்கு பிறகு, அதாவது ராஜனின் திடீர் மரணத்திற்கு பிறகு, நிலைக்குலைந்து போயிருந்த குடும்பத்தின் மூத்த பிள்ளையாய் இருந்த அருண்... இப்பொழுது அந்த சோகத்திலிருந்து விடுபட்டு அல்லது விடுபட வழிதேடி, ஆறுதல் தேடி தன்னை அழைத்ததாக நினைத்து ஆனந்தத்துடனும் அவனிடம் பேச ஆறுதல் வார்த்தைகளுடனும் வந்தவளுக்கு, ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் போனது கொடுமையே...

"அருண் என்ன சொல்ற??"

"ஆமா மதி நாம பிரிஞ்சிறலாம்..."

"உனக்கென்ன பைத்தியமா??"

"இல்ல நான் நம்ம நல்லதுக்கு தான் சொல்றேன்... ஏற்க்கனவே என் தங்கை கல்யாணத்துக்கு அப்பா வாங்கின கடன், நான் பிசினஸ் பண்றேன்னு சொல்லி கை சுட்டுகிட்டது, என் தங்கை லவ்... இதெல்லாத்துக்கும் மேல அப்பாவோட இழப்பு... இந்த நேரத்துல நானும் காதலிக்கிறேன்னு போயி என் அம்மா முன்னாடி நிக்க முடியாது... உனக்கு பார்த்திருக்கற மாப்பிள்ள நல்லவர்.. நானும் பேசினேன்.. நீ பேசாம அவரையே கல்யாணம் பண்ணிக்கோ.. நீ நிஜமா நல்லாருப்ப.. இதுக்கு மேலயும் நீயும், நானும் பேசுறது நல்லதில்ல.. சோ நான் போறேன்...", சொல்லிவிட்டு அவள் பதிலைக்கூட எதிர்பாராமல் ரயில் ஏறிச்சென்ற அந்த அதிர்வு இன்னும் அவள் மனதை விட்டு நீங்கவில்லை.

அவன் தந்த காதல் தான் என்பதற்காக அவனே அதை திரும்ப எடுத்துக்கொண்டது எந்த விதத்தில் நியாயம்?? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் கலங்கியக் கண்களுக்கு தூசிமேல் பழி போட?? யாருக்குமே தெரியாமல் முளைத்தக்காதல் இன்று மிக மோசமாக அவள் மனதிற்குள் கருகிகொண்டிருந்தது.. புது வார்த்தைகள் எதுவும் தேடப்பிடிக்காமல் கேட்பவர்களுக்கு பதிலும் சொல்லத்தெரியாமல் தவித்தாள்.. இருபத்தியொரு வருடம் சலனமில்லாமல் வாழ்ந்தாள் என்ற கர்வத்தை அடக்கியவன்.. வாழ்நாள் முழுவதும் அவனை நினைத்து அழும் வரத்தைத் தந்து சென்றான்.. பொய்யான புன்னகையால் முகமூடி அணிந்து அவள் முகத்தையே இழந்து நின்றாள்.. அவளால், அவள் காதலை, காதல் தோல்வியை வாய்விட்டு யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் கவிதையாக்கி அதை கண்ணீரில் நனைத்து பெருமூச்சில் குளிர் காய்ந்தாள்..

பசுமரமாய் இருந்த
கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
காதலின் பிரிவால்...
****
கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
காதலா??
****
உன் பெயர் சுமந்த
பலகைக் கூட
காதல்
சின்னம் தான்
****
கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...
****
-திருத்தங்கள் தொடரலாம்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்- பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 .
மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!
*******
எதுவுமே இல்லாத வெற்று நிமிடங்களாய் வாழ்க்கைக்கழியத் தொடங்கியது காதல் பிரிபடத்தொடங்கியதும். காதலின் கொடுரமான இன்னொரு பக்கம் அவனுக்கு புரிபடலாயிற்று. அவன் ஏங்கிய தனிமை அவனுக்கே அவனுக்கென இப்பொழுது தாராளமாகக் கிடைத்தது. ஆனால், அவனுக்காக அவள் தந்த காதல் தான் அவன் வசமில்லை. காதல் பிரிந்தாலும், அவளால் சூழப்பட்ட கனவுகளில் காலம் தள்ளலாம் என நினைத்த அவனின், தூக்கமே கனவாகிப்போனது... பிறகெங்கே அவளைக்காண்பது??

"டேய் சாப்ட வாடா... எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?? பசிக்குது...!!"

"எனக்கு வேண்டாம்... நீ சாப்டு..".

"ஏன்??"

"எனக்கு கொஞ்சம் வெளியில வேல இருக்கு.... நான் போயிட்டு வரேன்..."

அழைத்தக்குரலுக்கு திரும்பிப் பார்க்காமல் சென்றவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது இளங்கோவிற்கு. இது எதையும் கவனியாமல், கவனிக்கவும் தோணாமல் கால் போட்ட பாதையில் பயணமானான். ஒரு அமைதியான இடம் தேடி சென்று, கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.

காதலில் முதலானதும், முக்கியமானதுமான ஒன்று தான், தான் உணர்ந்த காதலை வெளிப்படுத்துவது. அதுவும் புரியும்படி, தயக்கமின்றி. ஆனால், இது உலகிலேயே சிறந்த ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலுமே, காதலை சொல்லும் போது, நாம் அவருக்கு தகுதியானவரா?? நம்மை மறுத்துவிடுவாரோ?? என்பது போன்ற பல தயக்கங்கள் இயல்பே.. அதையும் மீறி மொழிவடிவம் பெரும் காதல் தான் பாதி வெற்றி அடைகின்டறன... உண்மைதானே?? அழகான, முழுமையான தொடக்கமே, முழு வெற்றிக்கு வித்திடுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு. இவர்களைப்போல...

"ஹலோ மேடம்... கவிதை என்ன ஆச்சு??"

"ம்ம்ம்ம் கொண்டுவந்திருக்கேனே...", காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.

"ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? படியேன் பார்ப்போம்..."

"என்ன சொன்ன??"

"எது??"

"இப்ப நீ என்ன சொன்ன??"

"ஒன்னும் இல்லையே.."

"இல்ல நீ என்னமோ சொன்ன...", புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ.

"நான் சொன்னது உனக்கு புரியல??", அவனிடமான அவளின் எதிர்பார்ப்பும் அதுவேயானாலும் அவன் வாய் மொழிந்ததும் அவளின் அல்லது பெண்களின் இயல்பான பயமும், கூச்சமும் சிறிய கோபமும் அவளைவந்து கட்டிக்கொண்டது.

"என்ன ஒன்னும் பேசமாட்டேங்கிற??", முறைத்து பார்த்துத் திரும்பி நடந்தவள் ஒருவாரம் அவனை அலையவைத்தாள். இறுதியில்,

"வசு நில்லு.....!! நில்லு ப்ளீஸ்...!!"


"ஐயோ எல்லாரும் பார்க்கறாங்க... போறியா... என் பினாடி ஏன் ஓடி வர??"

"நீ ஏன் பேசமாட்டேங்கிற?? நான் சொன்னதுல ஏதாவது தப்பிருக்கா?? அப்படியே இருந்தாலும் அத அப்போவே சொல்லலாம்ல... அத விட்டுட்டு இப்படி என்ன பார்த்தாலே ஓடி ஒளியறியே ஏன்?? நான் என்ன நீ என்ன காதலிச்சு தான் ஆகனும்னு போர்ஸ் பண்ணேனா?? எனக்கு பிடிச்சிருந்தது சொனேன்... உனக்கு பிடிக்கலேனா, பிடிக்கலன்னு அப்போவே சொல்லிருக்கலாம்....!!".


"அவ்ளோதானா?? பேசிமுடிச்சிட்டியா?? வழிவிடு... நான் கோவிலுக்கு போகணும்.... இவங்க சொல்லுவாங்களாம்.. நாம ஒத்துக்கனுமாம்....!!"

"ஹலோ எதுவா இருந்தாலும் நேரா சொல்லு... முணுமுணுக்காத..."


"நான் ஒன்னும் முணுமுணுக்கல..."


"ம்ம்ம்ம் சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட??"


"ம்ம்ம் ஒன்னும் வேண்டிக்கல..."


"அப்பறம்..??"


"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.

அவள் திரையில் மட்டுமே கண்டு, கேட்டு, உணர்ந்த எட்டாகனியான காதல், இன்று, அவள் கைகளில். மனதில் தானே காதல் இந்த கால்களுக்கு என்ன வந்தது ஏன் இப்படி காற்றில் நடைப்போட வேண்டும்?? அவனை வென்றது என் மனது அதுவே ஆட்டம் போட்டுக்கொள்ளட்டும்.. என நினைவுகளில கோலமிட்டாள். ஆனால், இவளின் சொந்தமான பொருட்கள் எதுவும் இவள் வசமில்லை. முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள். அவனுக்கு கேட்கவே வேண்டாம்... இளங்கோவிடம் ஓடினான்..


"டேய், மச்சான்.. ப்ளீஸ் சொல்லேன்.. நீ ரமாவ லவ் பண்ண ஆரம்பிச்சதும் எங்க எங்க கூட்டிட்டு போன??"


"போடா இவனே, நானே எங்க லவ் என்ன ஆகுமோங்கற பயத்துல இருக்கேன்... நீவேற வந்து ஐடியா கேட்டுகிட்டு...!!"

"ஹே பிரபா..!! அக்காகிட்ட ஏதாவது சேன்ஜஸ் தெரியுதா சொல்லேன்...!!"

"உங்கிட்டயா?? ஒன்னும் இல்லையே... ஒன்னே ஒன்னத் தவிர..!!"

"என்னது??"

"உனக்கு நாளுக்குநாள் பைத்தியம் முத்திகிட்டே வருது... அதத் தவிர ஒரு சேன்ஜசும் இல்ல...."

"போடி லூஸ்...!!"

அவளின் கவிதைக்கெல்லாம் முதல் வாசகனும், கடைசி ரசிகனும் அவனே ஆனான்..

"அருண் சீக்கிரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாரேன்.... உனக்கு பிடிச்ச விஷ்வநாதன் ஆனந்த்..!!".


"ஹே இந்தா.."


"என்னதிது??"


"உனக்கு பிடிச்ச பா. விஜய் கவிதை புக்... 'உடைந்த நிலாக்கள்' கிடைக்கலன்னு சொன்னியே... ஊருக்கு வரும் போது பார்த்தேன்.. அதான், வாங்கிட்டு வந்தேன்...!!", அந்த புத்தகத்தை ஆயிரம் முறை படிக்க முற்பட்டாள். ஆனால், ஒவ்வொரு முறை புத்தகத்தை திறக்கும் போதும், அவன் கையெழுத்தால் இவள் பேரெழுதிய முதல் பக்கத்துடன் முழுகவிதையும் படித்த பேரானந்தம் பெற்றாள். கனவில் கூட காதலை அனுமதிக்காதவள் தான், கவிதையிலும் காதல் எழுத பயந்தவள் தான், இன்று அவனின் காதலை தேனீயாய் சேகரித்துக்கொண்டிருந்தாள். மாற்றம் நிகழ்த்திய மாற்றத்தினை மனமகிழ்வோடு அனுபவித்தாள், சிலக்காலம்....

வாழ்கையில் மாற்றங்கள் எப்பொழுதும் நிலையானதாக இருப்பதில்லை.. அது சோகமானதாகவோ, சந்தோஷமானதாகவோ, எதுவாக இருப்பினும்....

-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-4

உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...
*****

நினைவுகளின் நீரோடையில் மூழ்கி முகத்தை இழந்து நதியோடு செல்லவும் முடியாமல் நீந்தி தப்பிக்கவும் தெரியாமல் தத்தளித்து நின்றாள். காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர?? இவள் கேள்விக்கெல்லாம் பதிலில்லை.

"என்னம்மா..?? ரொம்ப நேரமா எதோ யோசிக்கற போல இருக்கு..!!", நினைவை கையுடன் சேர்ந்த ஒரு குரல் தடுக்க திடுமென நிமிர்ந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க...!!", இதயத்தைத் தொடாத புன்னகை ஒன்றை தற்காலிகமாக உதட்டின் வழி வழிய விட்டாள்.

"ம்ம்ம் சரி... சாப்டியா??"

"ம்ஹும்... பாட்டி இன்னும் பூஜை ரூம்ல இருந்து வரலியே...!!"

"அவங்க வர லேட் ஆகும்... நீ வாம்மா... எவ்ளோ நேரம் சாப்டாம இருப்ப?? இப்பவே மணி 12 ஆச்சு.... உட்காரும்மா...!!"

"ம்ம்ம்...!!"

"உன்ன பத்தி ஏன் ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற?? சரி உன் வீட்டப் பத்தியாவது சொல்லு.... யார்?? யார்?? இருக்கா...??"

"நான், அப்பா, அம்மா, அப்பறம் ரெண்டு தங்கச்சிங்க... அவ்ளோ தான்..!!"

"ம்ம்ம்... உன் தங்கைகள் என்ன பண்றாங்க??"

"பெரியவ இன்ஜினியரிங் ஃபர்ஸ்ட் இயர் பண்றா... ரெண்டாவது தங்கச்சி லெவன்த் படிக்கறா...!!"

"ஓஓ அப்படியா?? ம்ம்ம்... ரொம்ப அழகான குடும்பம்....!!",சிறு ஏக்கத்துடன் சிரித்தார்.

"உனக்கென்னம்மா சோகம்???", திடீரென்ற அவரின் இந்த கேள்வியை அவள் எதிப்பார்கத்தானில்லை.

"எனக்கா...?? ஒன்னும் இல்லையே...!!"

"நீ ஒன்னும் இல்லன்னு அவசரமா மறுக்கறதிலேயே தெரியுது... எதோ இருக்குன்னு.... உன் சொந்த விஷயத்துல மூக்க நுழைக்கிறதா நினைச்சா... வேண்டாம்...!!"

"அப்படியெல்லாம் இல்ல ஆன்....!!"

"ம்ம்ம் பரவால்ல... ஆன்ட்டி-ன்னே சொல்லு.... அம்மான்னு சொல்லதான் பையன் இங்கில்ல...!!"

"உங்களுக்கு மகன் இருக்காரா??"

"ம்ம்ம் இருக்கான்.... அழகா ஒரு மருமகள் ஏன் பேர குழந்தைகள் கூட இருக்காங்க... ஆனா இங்க இல்ல கண்காணா தூரத்துல... எங்கேயோ ஒரு அந்நிய நாட்டுல வேலைப் பார்க்கிறான்... வருஷத்துக்கு ஒரு முறை வருவான்... இல்லேன்னா ஒரு போன் பண்ணி வரமுடியாததுக்கு காரணம் சொல்லுவான்.. அவ்ளோதான்... அவன சொல்லியும் ஒன்னும் குத்தமில்ல... எல்லாரும் அப்படிதான்....!!", சூடான பெருமூச்சு ஒன்று வெளியானது.

"ஆன்ட்டி.....!!"

"ம்ம்ம் ஒன்னும் கவலை இல்ல.... பழகி போச்சு...!!", கலகலவென சிரித்தார்.

"உனக்கொரு கதை தெரியுமா....?? ஒரு குட்டி கதை....!!"

"ம்ஹும்..!!"

"சரி சொல்றேன்.. கேளு..!!"

"ஒரு ஊர்ல ஒரு தாய் குருவியும் அதனோட இரண்டு குட்டி குருவிகளும் இருந்ததாம்.... ஒருநாள் அந்த பக்கமா வந்த வழிபோக்கர்கள் இந்த ஊர்ல வெள்ளம் வர வாய்ப்புகள் இருக்குன்னு பேசிகிட்டு போனாங்களாம்.. இதக் கேட்ட தாய் குருவி, உடனே ஒரு உயரமான மரத்துல கூடு கட்டி வெள்ளம் வரதுக்குள்ள அங்க இந்த ரெண்டு குட்டி குருவியையும் கொண்டு போயி வெச்சு வெள்ளத்துல இருந்து காப்பாத்தினதாம்... அங்க அந்த குட்டி குருவிங்க ரெண்டும் ரொம்ப சந்தோஷமா, பாதுகாப்பா, வளர்ந்ததாம்... இதப் பார்த்த தாய் குருவி கேட்டதாம்... "நான் உங்கள வளர்க்கறதுக்கும், பாதுகாக்கறதுக்கும் இவ்ளோ கஷ்டப்படறேனே... அதே மாதிரி நாளைக்கு.. நான் வயசான காலத்துல கஷ்டப்படும்போது... நீங்க ரெண்டுபேரும் என்ன காப்பாத்துவீங்களா??"-ன்னு கேட்டதாம்... அதுக்கு அந்த குட்டி குருவிகள் சொன்னதாம்... "அம்மா.. ஒரு ஆபத்து வரும் போது நீ உன் குடும்பமான எங்கள தான் காப்பாத்த நினைச்சியே.. ஒழிய, உன் அம்மா, அப்பாவ பத்தி நினைச்சியா??? அதே மாதிரி தான், நாளைக்கு ஒரு துன்பமோ, ஆபத்தோ வரும் போது நாங்க எங்க குடும்பத்த தான் பார்ப்போம்"-னு சொல்லிச்சாம்... ம்ம்ம் குருவியா இருந்தா என்ன?? மனிதர்களா இருந்தா என்ன?? அவங்கவங்களுக்கு, அவங்க வாழ்க்கை, அவங்க குடும்பம் தான் முக்கியம்... இது தான் நிதர்சனம்...!!", சொல்லியத் தாயின் தொண்டை அடைத்தது.

"அன்னைக்கு, அம்மா, அப்பா வேண்டாம்ன்னு.. நான் நினைச்சேன்...!! இன்னைக்கு நான் வேண்டாம்ன்னு மகன் நினைக்கிறான்... அவ்ளோ தான்..!!".

இதற்குமேல் எதுவும் கேட்க தோணாமல் வசுமதி நகர்ந்தாள். இது போன்றதொரு சொல்வீசினால் தான்.. தான் கட்டிய காதல் மாளிகை சுக்குநூறாக உடைந்ததை நினைக்க கண்களில் நீர் கோர்த்தது.

அதேசமயம் அங்கே, "ஏய் என்னடா அருண் இப்படி மிட் நைட்ல வந்துருக்க...?? நீ போன வேகத்த பார்த்தா கல்யாணம் முடிஞ்சி தான் வருவன்னு நினைச்சேன்...!!".

'நேரம், காலம் தெரியாம இவன் வேற..!!' , இளங்கோவின் வார்த்தை அருணின் கோபத்தைக் கிளறினாலும் வீண்வாதம் வேண்டாம் என நினைத்து... "ம்ம்ம் வந்துட்டேன்...!!" , என சம்பந்தமே இல்லாமல் முடித்தான்.

"யாரு அருண் அண்ணாவா?? எப்படி இருக்கீங்க அண்ணா??"

"ம்ம்ம்.. நல்லாயிருக்கேன்மா..!!".

இளங்கோ, ரமா... அருணால் சேர்த்துவைக்கப்பட்ட காதல் ஜோடி. இளங்கோ வேலைப் பார்ப்பது அருணோடு.. ரமா படித்துக்கொண்டிருந்த கல்லுரிக்கு அருகில் தான் அருண், இளங்கோவின் வீடு. முதலில் இளங்கோ தான் காதலிப்பதாக சொல்லும்போது பொய் என்றே நினைத்தான் அருண். அவன் ராமாவுடன் நடுராத்திரி வந்து ரூம் கதவைத் தட்டும் வரை,

"டேய் சாரிடா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... அவ வீட்ல மாப்ள பார்க்கராங்கன்னு சொன்னா... நானும் சும்மாதான்னு நினைச்சேன்.. கடைசியில வீட்ட விட்டே வந்துட்டாடா... நான் என்ன பண்ணுவேன்?? எங்க போவேன்?? எனக்கு உன்ன விட்டா யார தெரியும்??", கண்கலங்கி நின்ற நண்பனுக்கு ஆறுதல் சொல்வதன்றி ஏதும் தோணாமல் நின்றான். நிறைய எதிர்ப்புகளுக்குப் பிறகு அருண் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தான்.

"அருண் நாமளும் இப்படி தான் ஓடி போயி கல்யாணம் பண்ணிக்கனுமா??", கல்யாணத்துக்கு வீட்டில் பொய் சொல்லிவிட்டு வந்த வசுமதி கேட்டாள். நல்லபடியாக கல்யாணம் முடிந்து, வழக்கம் போல இருவீட்டின் எதிர்ப்புக்கும் உள்ளாகி, அருண், இளங்கோ தங்கியிருந்த வீட்டின் கீழே இளங்கோ, ரமா தங்க வைக்கப்பட்டனர்.

"இளங்கோ மாடி சாவி குடு..!!".

"இருங்க அண்ணா.. நான் காபி போட்டு தரேன்..!!".

"இருக்கட்டும்மா... நான் காலைல வந்து குடிச்சிக்கறேன்...!!"

அலங்கோலமாய்க் கிடந்த அறையை சுத்தப்படுத்தக் கூட தோணாமல் சோபாவில் சாய்ந்தான்.

"டேய் மாப்ள... மணி பத்து இன்னுமா தூங்கற?? இந்தா காபி... குடிச்சிட்டு, குளிச்சிட்டு, கீழ வா.. இன்னைக்கு ஒருநாள் அங்க சாப்ட்டுக்கலாம்... ஆமா போன மேட்டர் என்ன ஆச்சு?? அத பத்தி ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற...!!".

"ஒன்னும் இல்ல....!!"

"என்ன காதல் கிளோசா???"

"இளங்கோ......!!"

"கோவப்படாத நண்பா... நாந்தான் அப்பவே சொன்னேன்ல... காதலிக்காதன்னு... அனுபவஸ்தன் சொன்னா கேட்கணும்... சரி, சரி சீக்கிரம் வந்துரு குளிச்சிட்டு...!!"

"என்ன ஆச்சு??"

"ஒன்னும் சொல்லமாட்டேங்கிறான்....!!"

"ம்ம்ம்ம் உங்க ஃப்ரெண்ட ஒரு பொண்ணு லவ் பண்ணதே பெரிசு... இதுல கோவம் வேறயா??"

"ஏய் கத்தி பேசாத அவன் காதுல விழுந்துடப்போகுது..!!"

ரமா, இளங்கோவின் உரையாடல் காதில் மட்டுமல்ல, அவன் இதயத்திலும் வேலைப் பாய்ச்சியது. எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போலான தனிமை முதல்முதலாக அவனை வாட்டியது.

"அருண் குட் மார்னிங்... என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட போல இருக்கு.... ரெண்டு நாளா நீ ஊர்ல வேற இல்லையா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல... நானும் உன்னோட வேலூர் வந்துடலாம்னு நினைச்சேன்... அப்பறம் அந்த எண்ணத்த விட்டுட்டேன்... சரி நீ சாப்டியா?? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?? உடம்பெதும் சரி இல்லையா?? என்ன ஆச்சு?? நான்பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்... நீ ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற....??"

"வசு ப்ளீஸ் லீவ் மீ அலோன்.... சும்மா எப்பப்பாரு என்னையே ஏன் சுத்திவர?? நான் என்ன நாய் குட்டியா?? எனக்கு உடம்பு சரியில்ல... இல்ல, பசிக்குதுன்னா... எனக்கு பார்த்துக்கத் தெரியும்... நீ ஒன்னும் அத அடிக்கடி கேட்க வேண்டாம்....", நேற்று அவன் நலம் விசாரித்து அவனின் அலுவலகத்துக்கு இவள் தொலைப்பேசியதால் வந்த விளைவு இது என பின்பு அறிந்து கொண்டாள்.

'ச்சே அன்னைக்கு அவ எவ்ளோ வருத்தப்பட்டிருப்பா??'.

இப்பொழுது எல்லாமுமாய் சேர்ந்து அவனை வருத்தியது.. தனிமை இன்னும் கொடுமையாய்....

-திருத்தங்கள் தொடரும்....

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது