ஊடல்களும் காதலே...!!

நம் ஊடலெல்லாம்
ஊடல்கள் அல்ல
நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு
செய்யும் காதல்


ஒரு நிலா
பல விண்மீன்களென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல


அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்
இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்
"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!
உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு
இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..


இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்தன்னை மறந்து
தூங்கிய நாட்களை
விட
உன்னை மறந்து
தூங்கிய இரவுகள்
குறைவே


திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் துறப்பதென..உன்னிடம்
மொழியப்படாத
வார்த்தைகள் அனைத்தும்
என்னுடன்
சண்டையிட்டு
மௌனம் காக்கின்றன
நீ முத்தமிடுகையில்...மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்-அன்புடன்,
ஸ்ரீமதி.

பின்விளைவுஆனந்த விகடனும்
அடுத்தவீட்டு நாய்க்குட்டியும்
எஃப். எம்மின் பரிச்சயமாகாத
குரல்களும்
பழைய பாடல்களும்
எங்கேயோ வெறித்தப் பார்வைகளும்
மனதின் ஏதோ ஒரு மூலையில்
உனக்கான ஏக்கங்களும்
என
எல்லாவற்றையும்
பழக்கிக்கொண்டேன்
நமக்கான
பிரிவு உறுதியானபோது...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

முகமூடி மனிதர்கள்

கந்தகம் கலந்த காற்றை காலை முதல் சுவாசித்தாள். இன்று எப்படியும் சொல்லிவிடவேண்டுமென எழுந்த எண்ணங்களுக்கு உரமிட்டு நன்கு வளர்த்திருந்தாள். மாலை வரும்முன் சொல்லிவிடத்துடித்தவள் எதிர்வருமெல்லோருக்காகவும் தன் கைகளில் தயாராக வைத்திருந்த சிரிக்கும் முகமூடி அணிந்தாள். மறு நிமிடம் அதைக் கழற்றி ஆகாயம் முழுவதும் சிறு சிறு துண்டுகளாக்கி சிதற செய்து பின் பெருமௌனம் கொண்டாள். இனி யாரும் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருக்க அலட்சிய பார்வையுடனான அவளின் முகமூடியை அணிந்து வெகு வேகமாக அவன் நினைவலைகள் அவள் நெஞ்சில் அடிக்கும் கொட்டத்தை பிரதிபலிக்கும் அந்த அலை நனைத்து நாளை மண்ணாகப்போகும் இன்றைய பாறையை நோக்கி நடந்தாள்.

இருள்வதற்குள் அவள் நிலை அவனுக்கு உரைக்க ஆயத்தமாக, மௌனத்தை இறுக்கி அணைத்து இனி மொழியப்படும் வார்த்தைகளை அதிக அடர்த்தியுடன் வெளிவரும் எரிமலைக் குழம்பாக்கிகொண்டிருந்தாள். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவளைப்போலவே முகமூடி அணிந்துகொண்டோ அல்லது அணிய முற்பட்டு தோற்றோ இருந்தனர். மனம் அவனை நினைத்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரிடமும் பேச, பழக ஒவ்வொரு முகமூடியை பயன்படுத்தினர். இதெதுவும் அவள் அறியாமலில்லை. இவளுக்கும் முகமூடியின் அவசியங்கள் தெரியாமலில்லை. அதை உபயோகப்படுத்துவத்தின் முக்கியத்துவத்தினை முகமூடி மனிதர்களிடமிருந்தே கேட்டறிந்திருந்தாள். எல்லாம் தெரிந்தும் அவள் அவளுடை நிலையிலிருந்து பிழன்று, எல்லாம் துறந்து, முகமூடியைப் பற்றி மறந்து, அவனிடம் பேசத்துவங்கிய அந்த மழைநாளின் முடிவில் எவருக்கும், ஏன்.. அவனுக்கும் தெரியாமல், ஆனால், மிக பூதாகரமாய் வளர்ந்திருந்தது அந்த மரம்.

இவளின் மரம் பற்றிய கேள்விகளுக்கு மனிதர்களிடம் பதிலற்று போக அவனிடமே தஞ்சமடைந்தாள். அவளின் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்தான். அவளிடமிருந்த முகமூடிகள் அவளறியாமல் அவனால் களவாடப்பட்டது. அவனும், அவளும் பேசிக்கொண்டதெல்லாம் காற்றில் அலைந்து, காட்டில் ஓடி, தனிமையோடு ஊடி, பின் அவர்களையே அடைந்தது. அவளின் தூக்கம் மறந்த மெல்லிய இரவுகளின் முனகல் கூட அவனுடையதாகியிருந்தது. அவனில்லாத பொழுதுகளின் வெகுநேர நிசப்தங்கள் சப்தக்கூடுகளை நிரப்பி ஓலமிட்டபடியிருந்தது.

மறுமுறையும் எச்சில் விழுங்கினாள். தொண்டையிலிருந்து உட்கிரகிக்கப்பட்ட உமிழ்நீரின் அமிலத்தில் அணுஅணுவாய் அவள் கரைந்தாள். இனியும், இதை சொல்ல இறுக்கமான, அதே சமயம் அதிக கொதிநிலையுடன் கூடிய கனமான மனம் தேவையென உணர்ந்து, தற்காலிகமாக பேச்சை நிறுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டாள். இழுத்தக் காற்றின் ஆக்ஸிஜனால் நுரையீரல் நிறைந்து புது வகையான சுகம் உணர்ந்தாள். எனினும், இன்றைய அவள் நிலை பற்றிய அவள் எண்ணம் இதயத்திலிருந்து உயிரின் ஒரு பகுதியை மட்டும் வலியோடு பிடுங்கி காற்றில் எரிந்தது. அந்த சிவப்பு வானம் முழுவதும் தெரிந்தது. அவன் வந்துவிடுவான். இன்று கேட்க வேண்டும்... நான் சொன்ன காதல் எல்லாம் அவனில் எங்கு தங்குகிறதென?? மறுபடி ஒருமுறை அவள் கைகளின் ரேகைக்குள் புதைந்திருந்த அந்த முகமூடியை பார்த்தாள்... மிக வேகமாக, மிகவும் அழுத்தமாக.. 'வேண்டாம்'.. என சத்தமிடும் இதயத்தை புறந்தள்ளி, வைத்திருந்த முகமூடியால் முகம்மூடி, அவள் தலைக்கோத அவன் பணித்திருந்த அவனின் விரல்களை அதிவேகத்தொடும் அலட்சியமாகவும் தள்ளி, கடைசியில் சொல்லியேவிட்டாள்....,

"இனிமே முத்தம் தராதடா...... ப்ளீஸ்...."

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தாய்மை

"இன்னைக்கு கார்த்தாலதான் நான் அதப் பார்த்தேன்.. ஒரு நாலு அஞ்சு இருக்கும்.."

"ஐ டூ சா தட்... உவ்வே..."

"நீ பாக்கலியா??"

"இல்ல மாமி... நான் வெளில போகவே இல்ல..." இன்றைய காலை தேநீர் நேரத்து ரொட்டித்துண்டுகளாகிப் போயிருந்தது அந்த நாலு ஐந்தின் வருகைக்கான பேச்சு.

"ம்ம்ம் என்னமோ போ... ஊரே மழையும், புயலுமா இருக்கு.. இதுங்க எப்படி தான் இருக்க போறதோ?? நான் போறேன் எங்காத்து மாமா ஆபீஸ் கிளம்பனும் டிபன் செய்யலேன்னா வள்ளுன்னுவார்".

மாமி நகர்ந்ததும் சுபாவும் கிளம்பினாள். வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது. என்னவரின் கண்கள் காலைநேர காபியோடு செய்தித் தாள்களின் விளையாட்டு செய்திகளில் லயித்திருந்தது. பால்கனியிலிருந்து பார்த்தால் தெரியும். அழகாக இருந்தது. கருப்பு வெள்ளையும் கொஞ்சம் செம்மண்ணும் வெள்ளையுமாய் ஐந்து நாய்க்குட்டிகள். எங்கள் தெருவின் புதுவரவு.

"அதெல்லாம் வேண்டாம்", குரல் கேட்டுத் திரும்பினாள்.

"என் பாஸ் குடுத்த பொமேரேனின் என்னாச்சு?? இந்த மாதிரி அப்பார்மெண்ட்ஸ்ல எல்லாம் நாய் வெச்சிக்கறது கஷ்டம்.", கல்யாணமான இந்த நான்கு வருடங்களில் நான் சொல்லாமல் அவர் புரிந்துக்கொண்ட ஒரு விஷயம் இது என்பதில் எனக்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம் உண்டு. சிறுவயதிலெல்லாம் எங்கேயாவது நானும் அண்ணாவும் நாய்க்குட்டியைப் பார்த்தால் போதும் வீட்டிற்கு தூக்கிவந்துவிடுவோம் அம்மாதான் சொல்வாள்,

"டேய் இத ஏன் இங்க தூக்கிண்டு வந்தீங்க??"

"அம்மா இதுக்கு அம்மா இல்லம்மா... பாவம் தனியா கத்திண்டு இருந்தது... அதான் எடுத்துண்டு வந்துட்டோம்.."

"அதோட அம்மா எங்கயாவது இதுக்கு சாப்பாடு தேட போயிருக்கும்... இப்ப அது இந்த குட்டிய தேடிண்டு இருக்கும்.. போயி எடுத்த இடத்துலேயே போட்டுட்டு வந்துடுங்க பாவம்... கத்தறது பாரு.." அடுத்த ஐந்தாவது நிமிஷம் அதன் அம்மா தேடிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுமோ என பயந்து எடுத்த இடத்தில் போட்டுவிட்டு வருவோம்.

"மாலினி டிபன் ரெடியா??"

"இதோ ஒரு நிமிஷம் சட்னி மட்டும் அரைச்சிடுறேன்.."

"ம்ம்.... இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும்.. நீ சாப்டுட்டு தூங்கு.. அந்த நாய்க்குட்டிகள நேத்து நைட்டே யாரோ சாக்குல கட்டி கொண்டுவந்து போட்டா நான் பார்த்தேன்... ஈவினிங்க்குள்ள ப்ளூ கிராஸ்க்கு போன் பண்றேன்", மனசுக்குள் ஏதோவருத்தியது. நாள் முழுவதும் அந்த குட்டிகளின் சத்தமும், மாமியின் அதைப்பற்றிய தகவல்களும், என்னை கவலையுறச் செய்தது.

"நம்ம முசுடு நாராயணன் எதானு பண்ணிடுவான் மாலி..."

"எஸ்" சுபா வேறு ஒத்துப்பாடினாள்..

முசுடு நாராயணன் இந்த இரண்டடுக்கு அப்பார்மெண்ட்ஸின் கீழ்தளத்தில் வசிப்பவர். குழந்தையில்லை, அவரும் அவர் மனைவியும் மட்டும் தான். இதுவரை அவர் அதிர்ந்து பேசியும் நான் கேட்டதில்லை, அனாவசியமாக பேசியும் நான் கேட்டதில்லை. பின் ஏன் அவருக்கு இப்பெயர் என மாமியிடம் கேட்க நினைத்து தொண்டையோடு வடிகட்டிவிடுவேன் வார்த்தைகளை...

என்னவரின் உடம்பு சரியில்லாமல் மூன்று நாள் ஹாஸ்பிடல் வீடு என நான் இருந்த காலத்தில் முசுடு நாராயணனும் அவர் மனைவியுமே துணையாயிருந்தனர் என நான் சொல்ல மகள் பிரசவத்திற்கென ஊர் சென்று திரும்பியிருந்த மாமி வாய் பிளந்தாள்.

"அதுங்க சத்தமே கொஞ்ச நேரமா காணலியே..."

"ஓ ரிஷி டோன்ட் லைக் பப்பிஸ்... உவ்வே..", என்றாள் சுபா.

"ஏண்டி மாலி உனக்குதான் ரொம்ப பிடிக்குமே.."

"இல்ல மாமி அவருக்கு பிடிக்காது..".

என்றைக்கும் இல்லாமல் இன்று தனிமை மிகவும் வாட்டுவதாயிருந்தது. இப்பொழுது நிஜமாகவே அவற்றின் குரல்கள் அடங்கியிருந்தது. தனிமை ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியிருந்தது.

"இன்னும் எவ்ளோ நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம்??" கடைசி முறை ஊருக்கு வந்த அவரின் அம்மாவின் கேள்வி.

"அவர் ஏதோ ஆன்ஸைட் போக சான்சஸ் இருக்கு அதனால இப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டார் அம்மா..."

"இப்படி சொல்லியே நாலு வருஷமாயிடுத்து... கேக்கரவாளுக்கு பதில் சொல்லிமாலல... நான் இனி இந்த வரதா இருந்தா அது உன் வளைக்காப்பு சீமந்தமா தான் இருக்கணும்..." சொல்லி சென்று பத்து மாதம் ஆகிறது.

கடைசியாக மாமி சொன்னாள் "ஏய் மாலி இந்த கூத்த கேளு முசுடும் அதோட ஆத்துக்காரியும் அந்த நாய்க்குட்டிகள அவா வீட்ல கொண்டு போயி வெச்சிண்டு இருக்கா... ம்ம்ம் நம்மாத்துல எல்லாம் குழந்தைங்க இருக்கு அதுகளுக்கு இதெல்லாம் ஆகாது..."

"என்ன மாலி தூங்கல??"

"ம்ஹும்... என்னங்க.."

"ம்ம்ம்..."

"நமக்கும் ஒரு குழந்தை வேணும்..", படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விலக்கி சிரித்தான்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரை காதல்

கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்

கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறதுகைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடிகடலோர
மணற் சிற்பமாக
ஆசை
உன் காதலை
சுவாசித்தப்படி
உன்னுள்ளே கரைய
நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்
அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமேகவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற


ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

துளி காதல்

அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்....


நாணக்குடை
பிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்....'ஏய் இனிமே
மழைல நனையாதடி...!!'
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது..
நீ அணைத்த
தடம் அழிக்கும்
மழை....

அந்த மழைநாளின்
விளிம்பில்
நீ தந்த முத்தம் தான்
சூடான தேநீராய்
இன்னும் இனிக்கிறது
இதழோரம்....ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...
துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்...

மழை எனதான்
மனதுக்குள் விழுந்தாய்
கணுக்கணுவாய்
வியர்த்துப்போகிறேன்
உன் காதலில்..


நீலம் பூசிய
வானத்தைவிட
கார்கால மேகம்
அழகு...
உன் நீலவிழிகளில்
தீட்டிய
கரு மைப்போல...


மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...
குடையில்லா நேரத்து
மழைப்போல
எதிர்ப்பாரா நேரத்து
உன் முத்தமும்
சுகமே...!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-7

உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!
****
என்றோ நாம் சிரித்ததை நினைத்து இன்று கண்ணீர் சிந்துவோம்..., என்றோ நாம் அழுததை நினைத்து இன்று சிரிப்போம்... இது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும். இன்று அவள் கண்களில் வரும் கண்ணீருக்குக் காரணமான நிகழ்வு என்றோ நிகழ்ந்து முடிந்து விட்டது என்று அவள் சொன்னாலும் யாரும் நம்புவாரில்லை. ஏனெனில், ஒவ்வொரு முறையும் அவன் பிரிவின் வலி அவளுள் ஆழமான கண்ணீர் கடலை உருவாக்கி வைத்திருந்தது. அது என்றும் வற்றாமல் ஒவ்வொரு முறை அவனை நினைக்கும் போதும் தன்னோடு உப்பையும் சேர்த்துக்கொண்டு கண்கள் கரிக்க கன்னம் தாண்டியது.

"அம்மா வசுமதி... எங்க இருக்க??".

குரல் கேட்டு கண்கள் துடைத்தாள். ஆனால், கண்ணீரால் சிவந்த கண்களை என்ன செய்வதெனத் தெரியாமல் தலையை தாழ்த்தி, வார்த்தைகளுக்கு போராடி, அது வர மறுத்த பட்சத்தில் மிகவும் மெல்லியக் குரலில், "ம்ம்" என்றாள்.

"இந்த இருட்டுல... இவ்ளோ குளிர்ல.. இங்க என்னமா பண்ற??"

"ஒண்ணுமில்ல ஆன்டி.. சும்மா தான்.. காத்து வாங்கலாம்ன்னு வந்தேன்.."

"நல்லா காத்து வாங்கினே போ... உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது.. உள்ள வா.."

வெளிச்சத்திருக்கு வந்ததும் அவளின் கண்களின் சிவப்பு நன்கு புலனாகியது. எனினும், ஏற்கனவே அழுதிருக்கும் அவளிடம் எதுவும் கேட்டால் மீண்டும் அழக்கூடுமென பேசாமலிருந்தார்.

என்றும் போலவே இன்றும் சூரியன் கிழக்கில் தான் உதித்தது.. எனினும் அவளுள் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது.. நேற்று மனம் விட்டு அழுததால் என நினைத்தாள்.

"வசு எழுந்துட்டியா?? உன்ன பார்க்க விடியக்காலையே யாரோ ஒரு பையன் வந்தான்.. நீ தூங்கரன்னு சொன்னதும் உன்ன எழுப்ப வேணாம் வெயிட் பண்றேன்னு சொல்லி, உனக்காக வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கான் போயி பாரேன்.."

"பையனா??", கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.

'யாராக இருக்கும்?? ஒருவேள.. ஒருவேள.. அருணோ?? ச்சே.. ச்சே.. நிச்சயமா இருக்காது... பின்ன யாரு??'

வாசலைப்பார்த்து திரும்பி நின்றவன் முதுகு மிகவும் பரிச்சயமானது.

"சாரி வசு மறந்துடுன்னு சொல்லிட்டு போயிட்டேனே தவிர, என்னால சத்தியமா முடியல... எவ்ளோ பிரச்சனை வந்தா என்ன?? சமாளிச்சு எதிர்நீச்சல் போட்டு காதல்ல ஜெயிக்கனும்கர முடிவுல வந்துருக்கேன்.. ஆனா, உடனே இப்போவே என்னால உன்ன எங்க வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போக முடியாது.. நீ எனக்காக வெயிட் பண்ணுவன்னு நம்பறேன்.. நான் வரேன்..."

எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..

-முற்றும்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

எல்லாம் சுகமே...., என்னைத் தவிர...


கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....

'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுறங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-கவிதைகள்

உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!
***
நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்
***
எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??
***
பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்
***
இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??
***
இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!
***


-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-6

உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி
********
காதலிக்க ஆரம்பித்தப் பிறகு காதலர்களின் கால்கள் மட்டுமல்ல காலமும் இறக்கைக்கட்டி பறந்தது. இதுநாள் வரைத் தெரியாத, புரியாத, பயன்படாத சில வார்த்தைகளும், பல அர்த்தங்களும் புரிபட ஆரம்பித்தன. அறிவியலின் பலக் கண்டுப்பிடிப்புகளில் காதல் தேவதையின் குழந்தையாகக் கருதப்பட்டு வரும் செல்லிடைப்பேசி அவனுக்கும், அவளுக்கும் இடையில் அடிக்கடி பேசியும், சிணுங்கியும், காதலித்தும், கண்ணீர்வடித்தும் காற்றலைகளைக் காதலால் நிரப்பிக்கொண்டிருந்தது.

ஏனோ சந்தோஷங்களோ துக்கங்களோ நாடோடியாகவே இன்றும் இருக்கின்றன. நிறைய இடம் மனதில் தந்தாலும் அவை சிறிது காலத்திற்கு மேல் தங்குவதில்லை. அவளின் இன்றைய நிலையும் அதுதான்.. காதலை சொல்லத் தான் ஆடம்பரமான வார்த்தைகளும், அலங்காரமான முகபாவங்களும் வேண்டும். பிரிவுக்கு இவை எதுவும் தேவை இல்லை என அவன் ஒற்றை வார்த்தை உணர்த்தியது,

"சாரி உன்ன நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.. எல்லாத்தையும் மறந்துடுன்னு நான் சொல்லமாட்டேன்... ஏன்னா என்னாலயே அது முடியாது.... ஆனா மறக்க ட்ரை பண்ணு ப்ளீஸ்.... எனக்கு வேற வழி தெரியல... எங்கேயோ யார் காதலோ பிரியும்போது துடிச்சவன் தான்... இன்னைக்கு என் காதல, நான் உனக்கு தந்தத திரும்ப வாங்கிட்டு போக வந்திருக்கேன்..."

வெகுநாட்களுக்கு பிறகு, அதாவது ராஜனின் திடீர் மரணத்திற்கு பிறகு, நிலைக்குலைந்து போயிருந்த குடும்பத்தின் மூத்த பிள்ளையாய் இருந்த அருண்... இப்பொழுது அந்த சோகத்திலிருந்து விடுபட்டு அல்லது விடுபட வழிதேடி, ஆறுதல் தேடி தன்னை அழைத்ததாக நினைத்து ஆனந்தத்துடனும் அவனிடம் பேச ஆறுதல் வார்த்தைகளுடனும் வந்தவளுக்கு, ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் போனது கொடுமையே...

"அருண் என்ன சொல்ற??"

"ஆமா மதி நாம பிரிஞ்சிறலாம்..."

"உனக்கென்ன பைத்தியமா??"

"இல்ல நான் நம்ம நல்லதுக்கு தான் சொல்றேன்... ஏற்க்கனவே என் தங்கை கல்யாணத்துக்கு அப்பா வாங்கின கடன், நான் பிசினஸ் பண்றேன்னு சொல்லி கை சுட்டுகிட்டது, என் தங்கை லவ்... இதெல்லாத்துக்கும் மேல அப்பாவோட இழப்பு... இந்த நேரத்துல நானும் காதலிக்கிறேன்னு போயி என் அம்மா முன்னாடி நிக்க முடியாது... உனக்கு பார்த்திருக்கற மாப்பிள்ள நல்லவர்.. நானும் பேசினேன்.. நீ பேசாம அவரையே கல்யாணம் பண்ணிக்கோ.. நீ நிஜமா நல்லாருப்ப.. இதுக்கு மேலயும் நீயும், நானும் பேசுறது நல்லதில்ல.. சோ நான் போறேன்...", சொல்லிவிட்டு அவள் பதிலைக்கூட எதிர்பாராமல் ரயில் ஏறிச்சென்ற அந்த அதிர்வு இன்னும் அவள் மனதை விட்டு நீங்கவில்லை.

அவன் தந்த காதல் தான் என்பதற்காக அவனே அதை திரும்ப எடுத்துக்கொண்டது எந்த விதத்தில் நியாயம்?? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் கலங்கியக் கண்களுக்கு தூசிமேல் பழி போட?? யாருக்குமே தெரியாமல் முளைத்தக்காதல் இன்று மிக மோசமாக அவள் மனதிற்குள் கருகிகொண்டிருந்தது.. புது வார்த்தைகள் எதுவும் தேடப்பிடிக்காமல் கேட்பவர்களுக்கு பதிலும் சொல்லத்தெரியாமல் தவித்தாள்.. இருபத்தியொரு வருடம் சலனமில்லாமல் வாழ்ந்தாள் என்ற கர்வத்தை அடக்கியவன்.. வாழ்நாள் முழுவதும் அவனை நினைத்து அழும் வரத்தைத் தந்து சென்றான்.. பொய்யான புன்னகையால் முகமூடி அணிந்து அவள் முகத்தையே இழந்து நின்றாள்.. அவளால், அவள் காதலை, காதல் தோல்வியை வாய்விட்டு யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் கவிதையாக்கி அதை கண்ணீரில் நனைத்து பெருமூச்சில் குளிர் காய்ந்தாள்..

பசுமரமாய் இருந்த
கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
காதலின் பிரிவால்...
****
கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
காதலா??
****
உன் பெயர் சுமந்த
பலகைக் கூட
காதல்
சின்னம் தான்
****
கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...
****
-திருத்தங்கள் தொடரலாம்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்- பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 .
மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!
*******
எதுவுமே இல்லாத வெற்று நிமிடங்களாய் வாழ்க்கைக்கழியத் தொடங்கியது காதல் பிரிபடத்தொடங்கியதும். காதலின் கொடுரமான இன்னொரு பக்கம் அவனுக்கு புரிபடலாயிற்று. அவன் ஏங்கிய தனிமை அவனுக்கே அவனுக்கென இப்பொழுது தாராளமாகக் கிடைத்தது. ஆனால், அவனுக்காக அவள் தந்த காதல் தான் அவன் வசமில்லை. காதல் பிரிந்தாலும், அவளால் சூழப்பட்ட கனவுகளில் காலம் தள்ளலாம் என நினைத்த அவனின், தூக்கமே கனவாகிப்போனது... பிறகெங்கே அவளைக்காண்பது??

"டேய் சாப்ட வாடா... எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?? பசிக்குது...!!"

"எனக்கு வேண்டாம்... நீ சாப்டு..".

"ஏன்??"

"எனக்கு கொஞ்சம் வெளியில வேல இருக்கு.... நான் போயிட்டு வரேன்..."

அழைத்தக்குரலுக்கு திரும்பிப் பார்க்காமல் சென்றவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது இளங்கோவிற்கு. இது எதையும் கவனியாமல், கவனிக்கவும் தோணாமல் கால் போட்ட பாதையில் பயணமானான். ஒரு அமைதியான இடம் தேடி சென்று, கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.

காதலில் முதலானதும், முக்கியமானதுமான ஒன்று தான், தான் உணர்ந்த காதலை வெளிப்படுத்துவது. அதுவும் புரியும்படி, தயக்கமின்றி. ஆனால், இது உலகிலேயே சிறந்த ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலுமே, காதலை சொல்லும் போது, நாம் அவருக்கு தகுதியானவரா?? நம்மை மறுத்துவிடுவாரோ?? என்பது போன்ற பல தயக்கங்கள் இயல்பே.. அதையும் மீறி மொழிவடிவம் பெரும் காதல் தான் பாதி வெற்றி அடைகின்டறன... உண்மைதானே?? அழகான, முழுமையான தொடக்கமே, முழு வெற்றிக்கு வித்திடுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு. இவர்களைப்போல...

"ஹலோ மேடம்... கவிதை என்ன ஆச்சு??"

"ம்ம்ம்ம் கொண்டுவந்திருக்கேனே...", காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.

"ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? படியேன் பார்ப்போம்..."

"என்ன சொன்ன??"

"எது??"

"இப்ப நீ என்ன சொன்ன??"

"ஒன்னும் இல்லையே.."

"இல்ல நீ என்னமோ சொன்ன...", புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ.

"நான் சொன்னது உனக்கு புரியல??", அவனிடமான அவளின் எதிர்பார்ப்பும் அதுவேயானாலும் அவன் வாய் மொழிந்ததும் அவளின் அல்லது பெண்களின் இயல்பான பயமும், கூச்சமும் சிறிய கோபமும் அவளைவந்து கட்டிக்கொண்டது.

"என்ன ஒன்னும் பேசமாட்டேங்கிற??", முறைத்து பார்த்துத் திரும்பி நடந்தவள் ஒருவாரம் அவனை அலையவைத்தாள். இறுதியில்,

"வசு நில்லு.....!! நில்லு ப்ளீஸ்...!!"


"ஐயோ எல்லாரும் பார்க்கறாங்க... போறியா... என் பினாடி ஏன் ஓடி வர??"

"நீ ஏன் பேசமாட்டேங்கிற?? நான் சொன்னதுல ஏதாவது தப்பிருக்கா?? அப்படியே இருந்தாலும் அத அப்போவே சொல்லலாம்ல... அத விட்டுட்டு இப்படி என்ன பார்த்தாலே ஓடி ஒளியறியே ஏன்?? நான் என்ன நீ என்ன காதலிச்சு தான் ஆகனும்னு போர்ஸ் பண்ணேனா?? எனக்கு பிடிச்சிருந்தது சொனேன்... உனக்கு பிடிக்கலேனா, பிடிக்கலன்னு அப்போவே சொல்லிருக்கலாம்....!!".


"அவ்ளோதானா?? பேசிமுடிச்சிட்டியா?? வழிவிடு... நான் கோவிலுக்கு போகணும்.... இவங்க சொல்லுவாங்களாம்.. நாம ஒத்துக்கனுமாம்....!!"

"ஹலோ எதுவா இருந்தாலும் நேரா சொல்லு... முணுமுணுக்காத..."


"நான் ஒன்னும் முணுமுணுக்கல..."


"ம்ம்ம்ம் சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட??"


"ம்ம்ம் ஒன்னும் வேண்டிக்கல..."


"அப்பறம்..??"


"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.

அவள் திரையில் மட்டுமே கண்டு, கேட்டு, உணர்ந்த எட்டாகனியான காதல், இன்று, அவள் கைகளில். மனதில் தானே காதல் இந்த கால்களுக்கு என்ன வந்தது ஏன் இப்படி காற்றில் நடைப்போட வேண்டும்?? அவனை வென்றது என் மனது அதுவே ஆட்டம் போட்டுக்கொள்ளட்டும்.. என நினைவுகளில கோலமிட்டாள். ஆனால், இவளின் சொந்தமான பொருட்கள் எதுவும் இவள் வசமில்லை. முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள். அவனுக்கு கேட்கவே வேண்டாம்... இளங்கோவிடம் ஓடினான்..


"டேய், மச்சான்.. ப்ளீஸ் சொல்லேன்.. நீ ரமாவ லவ் பண்ண ஆரம்பிச்சதும் எங்க எங்க கூட்டிட்டு போன??"


"போடா இவனே, நானே எங்க லவ் என்ன ஆகுமோங்கற பயத்துல இருக்கேன்... நீவேற வந்து ஐடியா கேட்டுகிட்டு...!!"

"ஹே பிரபா..!! அக்காகிட்ட ஏதாவது சேன்ஜஸ் தெரியுதா சொல்லேன்...!!"

"உங்கிட்டயா?? ஒன்னும் இல்லையே... ஒன்னே ஒன்னத் தவிர..!!"

"என்னது??"

"உனக்கு நாளுக்குநாள் பைத்தியம் முத்திகிட்டே வருது... அதத் தவிர ஒரு சேன்ஜசும் இல்ல...."

"போடி லூஸ்...!!"

அவளின் கவிதைக்கெல்லாம் முதல் வாசகனும், கடைசி ரசிகனும் அவனே ஆனான்..

"அருண் சீக்கிரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாரேன்.... உனக்கு பிடிச்ச விஷ்வநாதன் ஆனந்த்..!!".


"ஹே இந்தா.."


"என்னதிது??"


"உனக்கு பிடிச்ச பா. விஜய் கவிதை புக்... 'உடைந்த நிலாக்கள்' கிடைக்கலன்னு சொன்னியே... ஊருக்கு வரும் போது பார்த்தேன்.. அதான், வாங்கிட்டு வந்தேன்...!!", அந்த புத்தகத்தை ஆயிரம் முறை படிக்க முற்பட்டாள். ஆனால், ஒவ்வொரு முறை புத்தகத்தை திறக்கும் போதும், அவன் கையெழுத்தால் இவள் பேரெழுதிய முதல் பக்கத்துடன் முழுகவிதையும் படித்த பேரானந்தம் பெற்றாள். கனவில் கூட காதலை அனுமதிக்காதவள் தான், கவிதையிலும் காதல் எழுத பயந்தவள் தான், இன்று அவனின் காதலை தேனீயாய் சேகரித்துக்கொண்டிருந்தாள். மாற்றம் நிகழ்த்திய மாற்றத்தினை மனமகிழ்வோடு அனுபவித்தாள், சிலக்காலம்....

வாழ்கையில் மாற்றங்கள் எப்பொழுதும் நிலையானதாக இருப்பதில்லை.. அது சோகமானதாகவோ, சந்தோஷமானதாகவோ, எதுவாக இருப்பினும்....

-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-4

உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...
*****

நினைவுகளின் நீரோடையில் மூழ்கி முகத்தை இழந்து நதியோடு செல்லவும் முடியாமல் நீந்தி தப்பிக்கவும் தெரியாமல் தத்தளித்து நின்றாள். காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர?? இவள் கேள்விக்கெல்லாம் பதிலில்லை.

"என்னம்மா..?? ரொம்ப நேரமா எதோ யோசிக்கற போல இருக்கு..!!", நினைவை கையுடன் சேர்ந்த ஒரு குரல் தடுக்க திடுமென நிமிர்ந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க...!!", இதயத்தைத் தொடாத புன்னகை ஒன்றை தற்காலிகமாக உதட்டின் வழி வழிய விட்டாள்.

"ம்ம்ம் சரி... சாப்டியா??"

"ம்ஹும்... பாட்டி இன்னும் பூஜை ரூம்ல இருந்து வரலியே...!!"

"அவங்க வர லேட் ஆகும்... நீ வாம்மா... எவ்ளோ நேரம் சாப்டாம இருப்ப?? இப்பவே மணி 12 ஆச்சு.... உட்காரும்மா...!!"

"ம்ம்ம்...!!"

"உன்ன பத்தி ஏன் ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற?? சரி உன் வீட்டப் பத்தியாவது சொல்லு.... யார்?? யார்?? இருக்கா...??"

"நான், அப்பா, அம்மா, அப்பறம் ரெண்டு தங்கச்சிங்க... அவ்ளோ தான்..!!"

"ம்ம்ம்... உன் தங்கைகள் என்ன பண்றாங்க??"

"பெரியவ இன்ஜினியரிங் ஃபர்ஸ்ட் இயர் பண்றா... ரெண்டாவது தங்கச்சி லெவன்த் படிக்கறா...!!"

"ஓஓ அப்படியா?? ம்ம்ம்... ரொம்ப அழகான குடும்பம்....!!",சிறு ஏக்கத்துடன் சிரித்தார்.

"உனக்கென்னம்மா சோகம்???", திடீரென்ற அவரின் இந்த கேள்வியை அவள் எதிப்பார்கத்தானில்லை.

"எனக்கா...?? ஒன்னும் இல்லையே...!!"

"நீ ஒன்னும் இல்லன்னு அவசரமா மறுக்கறதிலேயே தெரியுது... எதோ இருக்குன்னு.... உன் சொந்த விஷயத்துல மூக்க நுழைக்கிறதா நினைச்சா... வேண்டாம்...!!"

"அப்படியெல்லாம் இல்ல ஆன்....!!"

"ம்ம்ம் பரவால்ல... ஆன்ட்டி-ன்னே சொல்லு.... அம்மான்னு சொல்லதான் பையன் இங்கில்ல...!!"

"உங்களுக்கு மகன் இருக்காரா??"

"ம்ம்ம் இருக்கான்.... அழகா ஒரு மருமகள் ஏன் பேர குழந்தைகள் கூட இருக்காங்க... ஆனா இங்க இல்ல கண்காணா தூரத்துல... எங்கேயோ ஒரு அந்நிய நாட்டுல வேலைப் பார்க்கிறான்... வருஷத்துக்கு ஒரு முறை வருவான்... இல்லேன்னா ஒரு போன் பண்ணி வரமுடியாததுக்கு காரணம் சொல்லுவான்.. அவ்ளோதான்... அவன சொல்லியும் ஒன்னும் குத்தமில்ல... எல்லாரும் அப்படிதான்....!!", சூடான பெருமூச்சு ஒன்று வெளியானது.

"ஆன்ட்டி.....!!"

"ம்ம்ம் ஒன்னும் கவலை இல்ல.... பழகி போச்சு...!!", கலகலவென சிரித்தார்.

"உனக்கொரு கதை தெரியுமா....?? ஒரு குட்டி கதை....!!"

"ம்ஹும்..!!"

"சரி சொல்றேன்.. கேளு..!!"

"ஒரு ஊர்ல ஒரு தாய் குருவியும் அதனோட இரண்டு குட்டி குருவிகளும் இருந்ததாம்.... ஒருநாள் அந்த பக்கமா வந்த வழிபோக்கர்கள் இந்த ஊர்ல வெள்ளம் வர வாய்ப்புகள் இருக்குன்னு பேசிகிட்டு போனாங்களாம்.. இதக் கேட்ட தாய் குருவி, உடனே ஒரு உயரமான மரத்துல கூடு கட்டி வெள்ளம் வரதுக்குள்ள அங்க இந்த ரெண்டு குட்டி குருவியையும் கொண்டு போயி வெச்சு வெள்ளத்துல இருந்து காப்பாத்தினதாம்... அங்க அந்த குட்டி குருவிங்க ரெண்டும் ரொம்ப சந்தோஷமா, பாதுகாப்பா, வளர்ந்ததாம்... இதப் பார்த்த தாய் குருவி கேட்டதாம்... "நான் உங்கள வளர்க்கறதுக்கும், பாதுகாக்கறதுக்கும் இவ்ளோ கஷ்டப்படறேனே... அதே மாதிரி நாளைக்கு.. நான் வயசான காலத்துல கஷ்டப்படும்போது... நீங்க ரெண்டுபேரும் என்ன காப்பாத்துவீங்களா??"-ன்னு கேட்டதாம்... அதுக்கு அந்த குட்டி குருவிகள் சொன்னதாம்... "அம்மா.. ஒரு ஆபத்து வரும் போது நீ உன் குடும்பமான எங்கள தான் காப்பாத்த நினைச்சியே.. ஒழிய, உன் அம்மா, அப்பாவ பத்தி நினைச்சியா??? அதே மாதிரி தான், நாளைக்கு ஒரு துன்பமோ, ஆபத்தோ வரும் போது நாங்க எங்க குடும்பத்த தான் பார்ப்போம்"-னு சொல்லிச்சாம்... ம்ம்ம் குருவியா இருந்தா என்ன?? மனிதர்களா இருந்தா என்ன?? அவங்கவங்களுக்கு, அவங்க வாழ்க்கை, அவங்க குடும்பம் தான் முக்கியம்... இது தான் நிதர்சனம்...!!", சொல்லியத் தாயின் தொண்டை அடைத்தது.

"அன்னைக்கு, அம்மா, அப்பா வேண்டாம்ன்னு.. நான் நினைச்சேன்...!! இன்னைக்கு நான் வேண்டாம்ன்னு மகன் நினைக்கிறான்... அவ்ளோ தான்..!!".

இதற்குமேல் எதுவும் கேட்க தோணாமல் வசுமதி நகர்ந்தாள். இது போன்றதொரு சொல்வீசினால் தான்.. தான் கட்டிய காதல் மாளிகை சுக்குநூறாக உடைந்ததை நினைக்க கண்களில் நீர் கோர்த்தது.

அதேசமயம் அங்கே, "ஏய் என்னடா அருண் இப்படி மிட் நைட்ல வந்துருக்க...?? நீ போன வேகத்த பார்த்தா கல்யாணம் முடிஞ்சி தான் வருவன்னு நினைச்சேன்...!!".

'நேரம், காலம் தெரியாம இவன் வேற..!!' , இளங்கோவின் வார்த்தை அருணின் கோபத்தைக் கிளறினாலும் வீண்வாதம் வேண்டாம் என நினைத்து... "ம்ம்ம் வந்துட்டேன்...!!" , என சம்பந்தமே இல்லாமல் முடித்தான்.

"யாரு அருண் அண்ணாவா?? எப்படி இருக்கீங்க அண்ணா??"

"ம்ம்ம்.. நல்லாயிருக்கேன்மா..!!".

இளங்கோ, ரமா... அருணால் சேர்த்துவைக்கப்பட்ட காதல் ஜோடி. இளங்கோ வேலைப் பார்ப்பது அருணோடு.. ரமா படித்துக்கொண்டிருந்த கல்லுரிக்கு அருகில் தான் அருண், இளங்கோவின் வீடு. முதலில் இளங்கோ தான் காதலிப்பதாக சொல்லும்போது பொய் என்றே நினைத்தான் அருண். அவன் ராமாவுடன் நடுராத்திரி வந்து ரூம் கதவைத் தட்டும் வரை,

"டேய் சாரிடா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... அவ வீட்ல மாப்ள பார்க்கராங்கன்னு சொன்னா... நானும் சும்மாதான்னு நினைச்சேன்.. கடைசியில வீட்ட விட்டே வந்துட்டாடா... நான் என்ன பண்ணுவேன்?? எங்க போவேன்?? எனக்கு உன்ன விட்டா யார தெரியும்??", கண்கலங்கி நின்ற நண்பனுக்கு ஆறுதல் சொல்வதன்றி ஏதும் தோணாமல் நின்றான். நிறைய எதிர்ப்புகளுக்குப் பிறகு அருண் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தான்.

"அருண் நாமளும் இப்படி தான் ஓடி போயி கல்யாணம் பண்ணிக்கனுமா??", கல்யாணத்துக்கு வீட்டில் பொய் சொல்லிவிட்டு வந்த வசுமதி கேட்டாள். நல்லபடியாக கல்யாணம் முடிந்து, வழக்கம் போல இருவீட்டின் எதிர்ப்புக்கும் உள்ளாகி, அருண், இளங்கோ தங்கியிருந்த வீட்டின் கீழே இளங்கோ, ரமா தங்க வைக்கப்பட்டனர்.

"இளங்கோ மாடி சாவி குடு..!!".

"இருங்க அண்ணா.. நான் காபி போட்டு தரேன்..!!".

"இருக்கட்டும்மா... நான் காலைல வந்து குடிச்சிக்கறேன்...!!"

அலங்கோலமாய்க் கிடந்த அறையை சுத்தப்படுத்தக் கூட தோணாமல் சோபாவில் சாய்ந்தான்.

"டேய் மாப்ள... மணி பத்து இன்னுமா தூங்கற?? இந்தா காபி... குடிச்சிட்டு, குளிச்சிட்டு, கீழ வா.. இன்னைக்கு ஒருநாள் அங்க சாப்ட்டுக்கலாம்... ஆமா போன மேட்டர் என்ன ஆச்சு?? அத பத்தி ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற...!!".

"ஒன்னும் இல்ல....!!"

"என்ன காதல் கிளோசா???"

"இளங்கோ......!!"

"கோவப்படாத நண்பா... நாந்தான் அப்பவே சொன்னேன்ல... காதலிக்காதன்னு... அனுபவஸ்தன் சொன்னா கேட்கணும்... சரி, சரி சீக்கிரம் வந்துரு குளிச்சிட்டு...!!"

"என்ன ஆச்சு??"

"ஒன்னும் சொல்லமாட்டேங்கிறான்....!!"

"ம்ம்ம்ம் உங்க ஃப்ரெண்ட ஒரு பொண்ணு லவ் பண்ணதே பெரிசு... இதுல கோவம் வேறயா??"

"ஏய் கத்தி பேசாத அவன் காதுல விழுந்துடப்போகுது..!!"

ரமா, இளங்கோவின் உரையாடல் காதில் மட்டுமல்ல, அவன் இதயத்திலும் வேலைப் பாய்ச்சியது. எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போலான தனிமை முதல்முதலாக அவனை வாட்டியது.

"அருண் குட் மார்னிங்... என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட போல இருக்கு.... ரெண்டு நாளா நீ ஊர்ல வேற இல்லையா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல... நானும் உன்னோட வேலூர் வந்துடலாம்னு நினைச்சேன்... அப்பறம் அந்த எண்ணத்த விட்டுட்டேன்... சரி நீ சாப்டியா?? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?? உடம்பெதும் சரி இல்லையா?? என்ன ஆச்சு?? நான்பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்... நீ ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற....??"

"வசு ப்ளீஸ் லீவ் மீ அலோன்.... சும்மா எப்பப்பாரு என்னையே ஏன் சுத்திவர?? நான் என்ன நாய் குட்டியா?? எனக்கு உடம்பு சரியில்ல... இல்ல, பசிக்குதுன்னா... எனக்கு பார்த்துக்கத் தெரியும்... நீ ஒன்னும் அத அடிக்கடி கேட்க வேண்டாம்....", நேற்று அவன் நலம் விசாரித்து அவனின் அலுவலகத்துக்கு இவள் தொலைப்பேசியதால் வந்த விளைவு இது என பின்பு அறிந்து கொண்டாள்.

'ச்சே அன்னைக்கு அவ எவ்ளோ வருத்தப்பட்டிருப்பா??'.

இப்பொழுது எல்லாமுமாய் சேர்ந்து அவனை வருத்தியது.. தனிமை இன்னும் கொடுமையாய்....

-திருத்தங்கள் தொடரும்....

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-3


வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது
*****

காதல் தான் எவ்வளவு அழகான பைத்தியக்காரத்தனம்... இது போன்ற சில பைத்தியக்காரத் தனங்களால் தான் வாழ்க்கையே அழகாகிறது. காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம். இன்று அதுப் போன்றதொரு திசையை நோக்கித் தான் இருவருமே பயணித்தனர் என்கிற ரகசியம் இதுவரை அவர்களுக்கு ரகசியமாகவே இருந்தது.

"இப்படி பேசாமலே வந்தா தூக்கம் தான் வரும்... ஏதாவது சொல்லு..!!".

"என்ன சொல்ல..??".

"ம்ம்ம்.... உனக்கு பிடிச்சது, பிடிக்காதது என்னென்ன??".

"ஏன்?? அதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற??".

"சரி விடு....!! நான் பேசல..!!".

"ஹே.. நான் சும்மா சொன்னேன்.. எனக்கு பிடிச்சது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!!"

"'ம்ம்ம்' தான் உனக்கு பிடிக்குமா??"

"ஹய்யோ நான் யோசிக்கறேன்....".

"பிடிச்சத சொல்ல ஏன் யோசிக்கணும்??"

"பிடிச்சத சொல்ல யோசிக்கல... பிடிச்சது என்னன்னு யோசிக்கிறேன்...!!"

"நீ இப்படியே யோசிச்சுகிட்டே இரு.... நான் தூங்கறேன்...!!".

"ஓய் தூங்கினா நீ தோத்ததா அர்த்தம்....".

"என்னது ஓய்யா??".

"ம்ம்ம் ஓய்... ஏன்??"

"ஒன்னும் இல்ல... நீ சொல்றது நல்லா இருந்தது.. அதான் கேட்டேன்..!!".

"இதுல நல்லா இருக்க என்ன இருக்கு??".

"சரி அத விடு... எனக்கு கிரிக்கெட், செஸ், கேரம் இப்படி கேம்ஸ் பிடிக்கும்.. உனக்கு...??"

"எனக்கு கவிதை எழுத, படிக்க, யோசிக்க பிடிக்கும்..!!"

"வாவ்...!! அப்ப நீ நல்லா கவிதை எழுதுவன்னு சொல்லு...!!".

"கவிதை எழுதுவேன்... நல்லா எழுதுவனான்னு தெரியாது..!!"

"ம்ம்ம் அப்ப எனக்கொரு கவிதை சொல்லேன்...!!"

"இப்படி திடீர்ன்னு கேட்டா... எப்படி சொல்றது??"

"சரி நான் ஊருக்கு போனதும் ஒரு லெட்டர் போடறேன்... அப்பறம் சொல்லு...ஓகேவா??"

"ம்ம்ம் சரி..!!"

"என்னது சரியா?? சரி தான்..!!".

அதன்பின் பாரதியாரும், பாரதிதாசன்களும் அவனுக்கும்.. சச்சினும் விசுவநாதன் ஆனந்தும் இவளுக்கும் விரும்பப்படும், விவாதிக்கப்படும் பொருட்களாயினர் வேற்றுமை எல்லாம் தற்காலிக ஒற்றுமையாகியிருந்தது.
"ம்ம்ம் அப்பறம் சொல்லு...!!"


"இன்னும் என்ன சொல்ல?? என்னை இப்படி கேள்வி கேட்டுகிட்டே இருந்தா கோவம் வரும்..!!"

"பார்த்தா அப்படி தெரியலியே...!!"

"பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"

"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ".

அந்த இரவு சீக்கிரம் விடிந்ததாகவே இருவரும் உணர்ந்தனர். அவள் வாழ்க்கை புத்தகத்தின் அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய வரிகளில் எல்லாம் அருணே முதலும், முடிவும் ஆனான். இப்படியும் இன்னும் சில சின்ன சின்ன சண்டைகளோடும் அந்த பத்துநாள் சுற்றுலா இனிமையாக கழிந்தது. இப்பொழுதெல்லாம் அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது. அடுத்துவந்த நாட்களும் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. சாதாரணமாக ஆண் பெண் பேசினாலே அது காதலைப் பற்றியதாகத் தான் இருக்கும் என நேற்று வரை நினைத்த அவளுக்கு அவன் பேச்சு பெருத்த ஏமாற்றத்தை தந்ததே அவன் மீது காதல் கொள்ளச் செய்தது.

"வசு நீ எங்க வீட்டு கொலுவுல பாடின பாட்டு நல்லா இருந்தது..!!"

"என்னப் பாட்டு??"

"ம்ம்ம் கண்ட நாள் முதலாய்-ன்னு பாடினியே..!!"

"ஓஓ அதுவா?? "கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடா'"

"கண்டதும் காதல்ல உனக்கு நம்பிக்கை இருக்கா??".

"ம்ஹும் இல்ல..!!"

"ஓ... ஓகே.. ஓகே.. நான் கேட்ட கவிதை என்ன ஆச்சு ??"

"நாளைக்கு நிச்சயமா கவிதையோட வரேன்.. ஓகே??"

"ம்ம்ம் ஓகே..!!"

காலை எழுந்தவள் கவிதையோடு மட்டுமல்ல, காதலோடும் எழுந்தாள் என அவள் கவிதை அவளுக்கு உணர்த்தியது. எழுந்ததும் மனதில் நினைத்ததை வார்த்தைகளாய் வடித்து வைத்தாள். குளித்து வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவளின் கவிதை உருவில்,.


வார்த்தைகள்

இல்லா மொழி

'காதல்'

அதை வாசிக்கக்

கற்றுத் தந்தவன்

நீ..!!

அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்...

-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-4

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்-2

எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்
********

இயற்கை நாம் வாசிக்கவும், நேசிக்கவும், யாசிக்கவும் நிறைய புதையல்களை விட்டு செல்கிறது. இதை ஒவ்வொன்றையும் எண்ணியபடி புற்களின் ஈரம் பாத பூஜை செய்வதை சுகித்தபடி நடந்தாள். அவனுக்காக என இவள் கவிதைகள் செய்தது ஆயிரம். இயற்கைப் பற்றி, அவனைப் பற்றி, அவளைப் பற்றி, அவர்களைப் பற்றி, அவர்கள் காதலைப் பற்றி என,.. இப்பொழுது நினைக்க கண்களோரம் நீர் துளித்து நின்றது, அடித்த காற்று துடைத்து சென்றது. இன்னும் கொஞ்சம் இப்படியே போகலாம் என்றிருந்தவளை, அந்த பிரம்மாண்ட வீடு வழிமறித்தது. அதுதான் அவள் தேடிவந்த வீடு என முகப்பிலிருந்த பலகை அவளுக்குணர்த்தியது.


'மீனாக்ஷி அம்மாள் இல்லம்' முதலில் தொலைபேசும் போது இருந்த குரலுக்கும், வீட்டுக்கும் ம்ஹும் இந்த மாளிகைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றியது அவளுக்கு.

"அப்பா...... எவ்ளோ பெரிய வீடு ம்ஹும் மாளிகை..... இங்க குறைஞ்சது 30 பேராவது இருப்பாங்க... அவங்க ஒருத்தரால கூடவா அந்த பாட்டிய கவனிச்சுக்க முடியல......?? ச்சே என்ன ஜென்மங்களோ..?? ம்ம்ம் நமக்கேன்..!!".

வேலைக்காரி போன்ற ஒருத்தி வழிகாட்ட அலுவலகம் போல் தோற்றமளித்த அந்த சின்ன அறையினுள் நுழைந்தாள். அங்கே, வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி, 'அவங்க தான் மீனாக்ஷியா இருக்கும்... அப்ப நாம பார்த்துக்க வேண்டியது யார?? ஒருவேள இவங்க மாமியாரா இருக்கும்.. பார்க்க ரொம்ப சாந்தமா தான் இருக்காங்க...!!'


"உள்ள வாம்மா... உன் பேர் தானே வசுமதி??", சின்ன சிரிப்போடு கேட்டார்.

"ஆமாம்...!!".

"ம்ம்ம் உங்க டீடெயில்ஸ் எல்லாம் பார்த்தேன்... எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... ஆனா, ஒரே ஒரு சந்தேகம்,.. இவ்ளோ படிச்சு இருக்க... நல்ல வேலை கிடைக்குமே, அப்பறம் ஏன் இந்த வேலைய நீ தேர்ந்தேடுத்தன்னு நான் தெரிஞ்சிக்கலாமா...??".


"நிறைய வேலைகள் கிடைக்கும்... ஆனா, மனசுக்குப் பிடிச்ச, நிம்மதியான வேலை வேணும்னு ஆசைப்பட்டேன் அதான்...!!",மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.. இந்த கொஞ்ச நாளில் தான் அதில் தேறிவிட்டதாக வசுமதி உணர்ந்தாள்.

"ம்ம்ம்ம் சரி...!! நீ பார்த்துக்க வேண்டியது என் மாமியார தான்... என்னம்மா பார்க்கற இவ நல்லா தானே இருக்கா இவளால இது கூட செய்ய முடியாதானா..?? போன மாதம் நடந்த ஒரு விபத்துல என் கால இழந்துட்டேன் அதான்... எனக்கு எந்த துணையும் இல்லாம நான் என் வேலைய செஞ்சிப்பேன்.. ஆனா, அவங்க வயசானவங்க...!!", இப்பொழுதுதான் அவர்களின் காலைக் கண்டாள். தவறாக அவர்களை நினைத்ததற்கு மானசீகமாக மன்னிப்பு கேட்டாள்.

"வாம்மா உனக்கு அவங்கள அறிமுகப்படுத்தறேன்..!!",அறிமுகப் படலங்கள் முடிந்து அவள் வேலையும் உறுதிசெய்யப்பட்டது.

அவளுக்கான வேலை மிகக் குறைவானதாக இருந்தது. இது அவளுக்கு நிறைய தனிமையான நிமிடங்களைக் கொண்டு சேர்த்தது. பாட்டிக்கு காலையில் பூஜைக்கு உதவிய பிறகு அவர்கள் பூஜை அறையை விட்டு வெளி வரும் மதியம் வரை, இவள் ஏதும் செய்யாமல் இருந்ததே இவளைக் கொல்வது போலிருந்தது. தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

கல்லூரி முதலாம் ஆண்டு வரை எந்த ஒரு கவலையோ, கனவுகளோ இல்லாத பறவையாக தான் இருந்தாள். எப்போது மாற்றம் வந்தது...?? இப்பொழுதுதான் நான் மாற்றினேன் என்று சரியாக குறித்து சொல்ல அவளிடம் அவள் நிமிடங்கள் இல்லை அப்பொழுது...

"ராஜன் அங்கிள்... நாம எல்லாம் எப்ப டூர் போறோம் சொல்லுங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!".

ராஜன், காலனி போல் அமைந்த அந்த வீடுகளில் ஒரு வீட்டிற்கு சொந்தக்காரர். அரசு வேளையில் இருப்பதாலும், அங்கு உள்ளவர்களைவிட உயர் பதவி என்பதாலும், அங்குள்ளவர்களால் அதிகமாக மதிக்கப்படுபவர். இவரின் திட்டங்களே அங்கு அமுலாகும். அதேப் போல் வருடா வருடம் காலனி முழுவதும் சேர்ந்து விடுமுறைக்கு இவர் தலைமையில் எங்காவது சுற்றுலா செல்வது வழக்கம். இந்த விடுமுறைக்கும் அதுபோன்றதொரு நிகழ்வுக்கு தான் அனைவரும் காத்திருந்தனர் வசுவும் தான்.

"இரும்மா... நான் சொல்றேன்..!!".

"ஏன் அங்கிள் இந்த முறை மட்டும் இவ்ளோ லேட்...?? அப்பறம் எல்லாருக்கும் லீவ் முடிஞ்சிடும்..!!".

"ம்ம்ம் நம்ம அருணுக்கும் லீவ்.... அவனும் வரேன்னு சொன்னான்.... அதான் அவன் வந்ததும் கிளம்பற மாதிரி பிளான் பண்ணிட்டு இருக்கேன்...!!".

அருண், ராஜனின் மகன். சிறு வயது முதலே தன் அத்தையின் வீட்டில் தங்கி படிப்பவன். அத்தைக்கு குழைந்தைகள் இல்லாததால் இவனே குழந்தையாகி போனான். பள்ளி பருவத்தில் இங்கு வசுமதியோடு படித்தவன் தான் என்றாலும், வசுமதியும் அவனும் நண்பர்கள் கிடையாது. அதற்கு அவனின் பேசாத்தன்மையே காரணமாயிருந்தது. அதிகமாகவோ, அதிர்ந்தோ பேசாதவன், நன்றாக படிப்பவன், பெண்களிடம் அதிகம் பேசமாட்டான். அதனால், வசுமதிக்கு அவனுடன் பழகியதாக ஞாபகமே இல்லை. அப்படி ஒருவன் இருப்பதையே அவள் மறந்திருந்தாள் எனலாம். ஆனால், இப்போதைய அவன் வருகை அவளுள் ஒரு சிறு எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணியிருந்தது.

வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். இப்படி ஒரு எதிபாரா மாற்றத்தை தான் அருணின் வருகை அவளுக்குள் ஏற்படுத்தியது.

அந்த மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் அதிகப்படுத்த பாலமாக அமைந்தது அந்த பத்து நாள் சுற்றுலா. முதலில் தன் தோழியின் அண்ணன் என்பதைத் தவிர எந்தவித பிடிப்பும் அவனிடம் இல்லாமலிருந்தது. அதுவும் அந்த சுற்றுலாவின் நான்காம் நாள் இரவு வரைதான் நீடித்தது.

"ஹே... உங்களால நிச்சயம் முடியாது..!!"

"பெண்கள் நினைச்சா முடியாதது எதுவுமே இல்ல...!!",கோபமாக வந்து விழுந்தன வசுவின் வார்த்தைகள்.

"சரி பெட்... ம்ம்ம் ஓகே மச்சான்.. நீ ரெடியா இரு..!!", நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள். இப்பொழுது அந்த பொறுப்பில் இருந்தான் அருணின் நண்பன்.

"டேய் ஏன்டா...?? வந்த இடத்துல என்ஜாய் பண்றத விட்டுட்டு... சும்மா பெட்டு அது இதுன்னு...!!", அருணுக்கு இப்படி ஒரு போட்டியில் விருப்பமில்லை தான்.

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது...",அவனை அடக்கியது நட்பு.

"ஓகே பெட் இது தான்... இன்னைக்கு நைட் ஃபுல்லா நீங்க ரெண்டு பெரும் தூங்கவே கூடாது... அப்படி யார் மார்னிங் வரைக்கும் தூங்காம இருக்காங்களோ, அவங்களுக்கு தூங்கினவங்க ஏதாவது கிப்ட் வாங்கித்தரனும்.. ஓகேவா??".

"ஹே.. இது என்னடா சின்ன புள்ளத்தனமா??".

"பயப்படாதடா நாங்க இருக்கோம்ல...!!".

"அதெல்லாம் முடியாது.. நீங்க யாரும் அவங்களோட பேச்சு கொடுக்கக் கூடாது... அவங்க ரெண்டுபேரும் வேணா பேசிக்கலாம்...!!", அருணின் தங்கை ஆட்ட விதிகளை முடித்தாள். ஏதேதோ சண்டையில் கடைசியில் இருவரும் ஒன்றாக உட்கார வைக்கப்பட்டனர்.

"உனக்கு என் கூட உட்கார்ந்து இருக்கறதுல எந்த ஆட்சேபனையும் இல்லையே...??"

"ம்ஹும்...!!".

"ரெண்டு வார்த்தைக்கு மேல பேசமாட்டியா?? வேற வழி இல்ல பிடிக்குதோ, பிடிக்கலியோ நாம பேசி தான் ஆகணும்... பார் எல்லாரும் தூங்கிட்டாங்க..!!".

அதற்கு பிறகு பேசியதெல்லாம் அவள் தானா?? அவனிடம் தானா?? என்கிற சந்தேகம் இன்றும் அவளுள் உண்டு.

-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-3

காதல் திருத்தம்-4

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் திருத்தம்

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்
பூவுக்கும், தனக்குமான ஊடலில் பூமியைவிட்டு, தான் பிறந்த தாயகம் மேகத்திற்கு ஆவியாகி பனி செல்லும் இளங்காலைப்பொழுது. பூக்களுக்கு தலைக்கோதி, புல்வெளிக்குள் புகுந்து, பூமிக்கு புதுமை செய்யும் தென்றல், மெதுவாக உருவாகி, அவள் தலைக்கோதி சென்றது. சாதாரண நாளாக இருந்திருந்தால் இந்த இயற்கைக் காட்சிகளுக்கு அவள் இந்நேரம் கவிதை புனைந்திருக்கக்கூடும்.


அவள், அழகான கனவுகள் பல படைக்கும் நீல நிற கண்ணுக்கு சொந்தக்காரி. யாரையும் ஒரு முறை நின்று திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு. பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை. காற்றுக்கு கவிதைக் கற்றுக்கொடுக்கும் கனிவான பேச்சுக்குறியவள். இந்த வன தேவதைக்கு அம்மா, அப்பாவால் சூட்டப்பட்ட புனைப்பெயர் வசுமதி.


"வசு... நீ கண்டிப்பா போய் தான் ஆகணுமா??".


"அம்மா... நீ இதையே எத்தன முறை தான் கேட்ப?? நான் போகணும்...!!"


"ஏன்மா..?? அவ்ளோ தூரம்.. அதோட எங்க இருக்குன்னு கூட உனக்கு தெரியாது.. நீ படிச்சதுக்கு இந்த ஊர்லையே ஒரு நல்ல வேலைக் கிடைக்காமலா போய்டும்?? நான் வேணா நம்ம ராஜன் அண்ணா கிட்ட சொல்லட்டா?? உனக்கொரு நல்ல வேலைக்கு...!!"


'ராஜன் மாமா... ச்சே அந்த குடும்ப சவகாசமே வேண்டாம்ன்னு தான்.. நானே ஊர விட்டு எங்கயோ கண்காணா தூரம் போறேன்.. மறுபடியும் அவர் பத்தியா??'


"அம்மா ப்ளீஸ் வேண்டாம்... கொஞ்ச நாள் வேலைப் பார்க்கிறேன்.. அப்பறம் உன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. போதுமா??", ஏதோ இந்த மட்டும் அவள் சம்மதித்ததே போதும் என நினைத்தாள் அவள் அம்மா சாந்தி.


"பத்திரம்மா போயிட்டுவாம்மா.. போனதும் போன் பண்ணு..!!"


"ம்ம்ம் சரிமா.. நான் வரேன்.. அப்பா, தங்கைகள் எல்லாம் வந்ததும் சொல்லிடு..!!"


'அழகான குடும்பம்.. அம்மா, அப்பா, ரெண்டு தங்கைகள்ன்னு.. இப்ப எல்லாரையும் பிரிஞ்சு, எங்கேயோ கண்காணா தூரத்துல என்னை நானே மறைச்சிக்கிற நிலைமை'.


பேருந்தின் ஜன்னல் வழி உலகம் பரந்துவிரிந்து பச்சையால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. 'பச்சை... அவனுக்கு ரொம்ப பிடிச்ச கலர்...!!'.


"வசு நீ அந்த பச்சை நிற சுடிதார்ல அழகா இருந்த தெரியுமா..??", சொன்ன நாளிலிருந்து எல்லாமே அவளுக்கு பசுமையாகியிருந்தது. 'ச்சே இனிமே அவனப் பத்தி நினைக்கக் கூடாது..!!'.


மழைவரப் போவதை மண்வாசம் உணர்த்தியது. இப்படி ஒரு இயற்கை சூழலில் இருக்கவேண்டுமென்று தான் அவள் எப்பவும் ஆசைப்பட்டு அவனிடம் கேட்பாள்.


"அருண் ஒரு கிராமம்... அங்க அழகா ஒரு சின்ன வீடு... நிறைய தென்ன மரம்.... ம்ம்ம்... அப்பறம்....!!"


"ஏன் 'காணிநிலம் வேண்டும் பராசக்தி'-ன்னு பாட வேண்டியதுதானே?? இப்படி ஒன்னு ஒண்ணா சொல்றதுக்கு...!!"


"ஹே போடா... உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்... நான் நிஜமா தான் சொல்றேன்... நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் நாம, நான் சொல்றமாதிரியான பச்சை பசேல்ன்னு இருக்குற ஒரு கிராமத்துல தான் இருக்கணும்... நான் காலேஜ் கேம்ப் போனேன்ல ஒரு கிராமம்.... பேர் ஞாபகம் இல்ல.. அந்த மாதிரி ஒரு இடம்... என்ன ஓகேவா?? சரின்னு சொல்லேன்.. ப்ளீஸ்..!!", அவனிடம் அன்று கேஞ்சியதெல்லாம் நினைத்து இன்று அருவெறுப்பாக உணர்ந்தாள். அதற்குள் மழை வலுத்திருந்தது.


"அம்மா அந்த ஜன்னல கொஞ்சம் சாத்தேம்மா... சாரல் அடிக்குதில்ல...!!", பக்கத்து சீட்டு பெண்மணி பாதி நனைந்திருந்தார். "சாரி..!!", என சொல்லி ஜன்னலை சாத்த மனமின்றி சாத்தினாள். இன்னும் போக வேண்டிய ஊர் எவ்வளவு தொலைவு என மனதிற்குள் கணக்கிட்டாள். அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் இருக்கிறதை உறுதிசெய்தாள். முதலில் வேலைப் பற்றி சொன்னதும் அம்மாதான் கொதித்தெழுந்தாள். அம்மாவுக்கு இவள் வேலைக்கு செல்வதே பிடிக்கவில்லை. அதுவும் இது போன்றதொரு வேலையில் சுத்தமாக விருப்பமில்லை.


"உனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க... அவங்களையும் நாங்க பார்க்க வேண்டாமா?? உனக்கொரு கல்யாணம் பண்ணி வெச்சா.. எங்க நிலை கொஞ்சம் தெளியும்னு பார்த்தா.. அதுதான் இவ்ளோ நாள் வேண்டாம்னு சொன்ன... இப்ப என்னடானா இப்படி ஒரு வேலை தேடிட்டு வந்து நிக்கற.. உனக்கு என்னடி ஆச்சு??"


"அம்மா இது ஒன்னும் அவ்ளோ மோசமான வேலைக் கிடையாதும்மா... எனக்கு ஒரு பாட்டி இருந்திருந்தா நான் பார்த்துக்க மாட்டேன்னா?? அது மாதிரி தான்... பாவம் யாரோ வயசானவங்க தனியா இருக்காங்க.. பக்கத்துல பார்த்துக்க பையன் இல்ல... அதான் தன்னைப் பார்த்துக்க ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்துருக்காங்க... நான் அப்ளே பண்ணேன் கிடைச்சிது... அவ்ளோ தான்..!!",அவள் அம்மாவுக்கு திருப்தி இல்லை.


"விடு சாந்தி... என் அம்மாவ கடைசி காலத்துல என்னால பார்த்துக்க முடியல.. இதோ என் பொண்ணு யாரோ ஒருத்தருக்காக வாழ போறா.. நாளைக்கு நம்மளையும் அவ நிச்சயம் நல்லாப் பார்த்துப்பா..!!" சுந்தரத்தின் பேச்சால் இறங்கிவந்தார் அவள் அம்மா.


பழைய ஞாபகங்களை தற்போதைக்கு மூட்டைக்கட்டினாள், இறங்க வேண்டிய இடம் வந்ததால். 'முதல்ல அவங்களுக்கு போன் பண்ணனும்... இந்த கிராமத்துல எங்க போன் பூத் தேடறது...??', அவளை ரொம்பவும் அலைய வைக்காமல் அங்கே ஒரு பூத் தென்பட்டது.
"ஹலோ மீனாட்ஷி அம்மாள் இல்லம்..?? நான் வசுமதி பேசறேன்...!!", அவர்களிடம் சரியான விலாசமும், வருவதற்கான தகவலும் தெரிவித்து தொடர்பைத் துண்டித்தாள்.'இனி இது தான் என் உலகம்... அவனைப் பற்றியோ, இல்லை அவன் காதல் பற்றியோ.. நான் நினைக்கத் தேவையில்லாத இடம்..!!'.ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன. அதுதான் அவள் விஷயத்திலும் நடந்தது..எங்கே வந்தால் நிம்மதி கிடைக்குமென நினைத்தாளோ... அங்கும் பிரச்சனை வருமென பாவம் அவள் எதிர்ப்பார்க்கதான் இல்லை...!!-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-2

காதல் திருத்தம்-3

காதல் திருத்தம்-4

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

அச்சச்சோ மறுபடியுமா......?????

அது என்னமோ தெரியல... என்ன மாயமோ தெரியல... ஒரே தொடர் பதிவா வருது.... கவுஜயே வர மாட்டேங்குது.... :(( சரி, அண்ணா சொல்லி தட்டக்கூடாதுன்னு இந்த பதிவையும் போட்டுடறேன்... :)) நல்ல வேல இதுல கேள்வி பதிலெல்லாம் இல்ல.... சோ நீங்க கவலைப்பட வேண்டாம் ;))


நல்லாருக்கா????? :)) இது கேரளாவுல இருக்குற வயநாடு பாரஸ்ட்.. நம்ம நண்பன் ஒருத்தன் அனுப்பினான்.. பார்த்த உடனே பிடிச்சு போச்சு.. :)) ரொம்ப நாளா இது தான் இருக்கு... மாத்த மனசு வரல... வேற எதுவும் இதே மாதிரி பாத்ததும் பிடிக்கிற மாதிரி வந்தா மாத்திடுவேன்.. :)) காலைல வந்து இத ஓபன் பண்ணதும் ஏதோ அந்த பாதைல நாம நடந்து போற மாதிரி ஒரு பீலிங் வரும்... :))))) அதுக்காகவும் மாத்தல..!! :))

நம்மகிட்ட சிக்கினவங்க:

1.நாணல் அக்கா (ரொம்ப சாரி வேற வழி இல்ல..!!:))

2.நம்ம சரவணன் (அழுவுற படம் மாதிரி ஏதாவது போட்டா அவ்ளோ தான் நீ..!!:)))

3.நமீதா படம் போடலாமான்னு கேட்ட ஸ்ரீ அண்ணா...!! ;)))))))))))))

4.அப்பறம் நம்ம வெயிலில்மழை ஜி அண்ணா...!! :))

பை...!! பை...!! :))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

அந்த விடியலில்,.........

சேவல்
அடைகாக்க
பெட்டை
பூபாளமிசைக்கும்....!!
மீன்கள்
தூண்டிலிட்டு
கரையில்
காத்திருக்கும்..!!
மான்களெல்லாம்
வேட்டையாடி
வேடனை
வீழ்த்தும்..!!
வேர்கள் வெளியே
சுவாசிக்க
கிளைகளெல்லாம்
மண்ணுக்குள்
முகவரி தேடும்...!!
அதிசயமாய்
தொலைக்காட்சிகளில்
தமிழே
முழு நாளும்...!!
பெண் குழந்தையே
பிறக்க வேண்டுமென
ஆலயம் தோறும்
பெற்றோர்களின்
வேண்டுதல் முடிச்சுகள்...!!
அந்த விடியலில்,.........
கட்டிய புடவையுடன்
மட்டுமே காத்திருக்கும்
என்னை
கைப்பிடிக்க
வருவான்
ஒரு ராஜகுமாரன்...!!
-அன்புடன்,
ஸ்ரீமதி.

மறுபடியும் ம்ம்ம்மாட்டிகிட்டேன்..!!

இதெல்லாம் ரொம்ப அநியாயம்-ங்க பின்னூட்டம் போட்டதுக்கு போய் யாராவது இப்படி செய்வாங்களா?? பாருங்க இப்ப எனக்கு என்ன ஆச்சுன்னு..!! ம்ம்ம் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?? எழுதறேன்னு நாக்கு சாரி.. வாக்குக் கொடுத்துட்டேன் எழுதிதான் ஆகணும்... ஆனா பாருங்க இந்த கேள்வி பதிலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...... (எவ்ளோ தூரம்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது ச்ச்சின்னப் புள்ளத்தனமா..!!) நான் ஸ்கூல் படிக்கும் போதே (அட நிஜம்மா படிச்சேன்) 5 கேள்வி கேட்டா மேல மூணு, கீழ ரெண்டுன்னு சாய்ஸ்ல விட்டுடுவேன்.... இங்க அநியாயமா 11 கேள்விகள்... ஏதோ எனக்குத் தெரிஞ்சதுக்கு மட்டும் விடை சொல்றேன்.. ஓகே...!! :))


ம்ம்ம்ம்ம்ம்மாட்டிவிட்ட செந்தில்க்கு நன்றிகள்..!! :)))


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயசு சத்தியமா ஞாபகம் இல்ல..!! :(( ஆனா அடம்பிடிச்சு பார்த்தப் படம் "எழுந்துரு அஞ்சலி..!! அஞ்சலி...!! எழுந்துரு அஞ்சலி..!!"-ன்னு ஒரு பொண்ணு கத்துமே அந்த படம்தான்... என்ன உணர்ந்தேனா?? நீங்க வேற அதப் பார்த்துட்டு வந்து அதேமாதிரி அண்ணாவ எழுப்பறேன்னு சொல்லி அடிவாங்கினது தான் மிச்சம்..!!:((

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!) கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!! அப்பறம் இன்னுமொரு முக்கியமான விஷயம் நான் எந்த படம், அரங்கு மட்டுமல்ல... எங்க பார்த்தாலும், அமர்ந்துப் பார்க்கறதுதான் வழக்கம்.. சோ நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி அமர்ந்து பார்த்தப் படம்னெல்லாம் கேட்கக்கூடாது... ஓகே?? ;)))3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அச்சச்சோ அதையேன் கேட்கறீங்க..!! இந்த ஞாயி்ற்றுக் கிழைமை சன் டிவில போட்ட அனகோண்டா பார்த்தேன்..!! யப்பா பயந்தே போயிட்டேன்... :( நான் சாதாரணமா ரொம்ப பயப்பட மாட்டேன் ஹி ஹி ஹி..!! ;)) ஆனா இந்த பாம்பு, தண்ணி (குடிக்கிற + குளிக்கிற தண்ணி) இதுக்கெல்லாம் கொஞ்சம் பயம்..!! ஆனா அதுதான் அந்த படம் முழுசும்... உவ்வே..!! :(( அப்பறம் இதுல எல்லாரும் தமிழ்ல தான் பேசினாங்க.. சோ இங்க போட்டுட்டேன்.. மத்தபடி நான் சினிமா பார்க்க டைம்மே கிடைக்கிறதில்ல..!! ஐ அம் ஆல்வேஸ் பிஸி யூ நோவ்..!! ;))))))

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

யூ மீன் சினிமாக்கு போயி அடிவாங்கினத கேட்கறீங்களா?? ஹி ஹி ஹி..!! :)) அதுமட்டும் தான் நடந்துருக்கு... மத்தபடி என்னைத் தாக்கின சினிமான்னு ஒன்னும் இல்ல... பிகாஸ், அது சினிமா... வாழ்க்கை இல்ல... 3 மணிநேரம் படம் பார்த்தேன்னா அத மோஸ்ட்லி அங்கேயே மறந்துட்டு வந்துடனும்னு ஆசைப்படற ஜந்து நான்.... :)) சோ எந்த சினிமாவும் என்ன பாதிச்சதில்ல... அதுமட்டுமில்லாம என்ன பாதிக்குன்னு தெரிஞ்சா அந்த சினிமாவுக்கு போகாம தவிர்த்துடுவேன்... லைக் "பருத்திவீரன்", "சுப்ரமணியபுரம்" இந்த மாதிரி...நீ சுத்த வேஸ்ட்ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது...!! ;))பட் வாட் டு டூ?? சிரிச்சே பழகிட்டேன்..!! :)))

5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

இன்னும் ஒரு தடவக்கூட ஓட்டே போடல... அதுக்குள்ள உனக்கென்ன அரசியல்??ன்னு என் அண்ணன் கேட்கறான்... சோ இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடறேன்..!! :)) ஹி ஹி ஹி...!! ;))

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இப்படியெல்லாம் சுத்தி சுத்தி கேள்வி கேட்டா அழுதுடுவேன் ஆமா..!! :(( நானும் எவ்ளோ நேரம் தான் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது?????? :(( வீட்ல என்னடானா சினிமா பார்த்தா கெட்டு போய்டுவன்னு டிவி கூட இல்ல நான் படிக்கிற காலத்துல..... இங்க ஒரே சினிமா பத்தின கேள்விகள்..!!:(( சோ இதையும் சாய்ஸ்ல விடறேன்...!!! ;)))) (இத ஏண்டாப்பா இவ கைல கொடுத்தோம்னு செந்தில் கஷ்டப்படறது புரியுது.... ஹி ஹி ஹி..!! ;)))

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஓஓஓஓ நிறைய்ய்யவே... எந்த ஹீரோயின்க்கு/ஹீரோக்கு கல்யாணம் ஆகியிருக்கு?? அவளுக்கு/அவனுக்கு ஏன் ஆகல?? இது அவளுக்கு/அவனுக்கு எத்தனாவது கல்யாணம்?? இப்படி பல மேட்டர் தெரிஞ்சிப்பேன்..!! ;)) இதெல்லாம் தானே இப்ப ஹாட் டாபிக்ஸ்..!! ;)))


7.தமிழ்ச்சினிமா இசை?

இது ஒன்னு தாங்க ஆறுதல்... நான் சினிமான்னு ஒன்னு பார்க்கப் போறேன்னா எனக்கு அதுல பாடல்கள் நல்லா இருக்கணும்... அப்படி போயி நிறைய்ய மொக்கைப் படம் பார்த்த அனுபவம் இருக்கு...:(( உதாரணம் "ஜில்லுன்னு ஒரு காதல்" (பிடித்தவர்கள் மன்னிக்கவும்..!!;)) இந்தப் படத்துக்கு அநியாயமா பொய் எல்லாம் சொல்லி, காலேஜ் எல்லாம் கட் அடிச்சு போனேன்...!! :(( அதுக்கு நான் கிளாஸ்லையே பேசாம தூங்கிருக்கலாம்..!! :(( மத்தபடி யுவன், A.R. ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜான்னு கலந்துகட்டி பாட்டு கேட்பேன்... இதுல பிடிச்சவங்க, பிடிக்காதவங்கன்னு கிடையாது...!! :))


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?


தமிழ் தவிர வேறு இந்திய மொழி படம்ன்னா.... தெலுங்கு கொஞ்சம் புரியும்.. சோ அது பார்ப்பேன்... ஆனா அது தாக்கலாம் இல்ல..!! :(( அப்பறம் ஹிந்தி படம் பார்ப்பேன்.. "ஏக் துஜே கேலியே" மறக்க முடியாத படம்... எனக்கு ஹிந்தி சுத்தமா தெரியாது...அப்பா டைலாக்ஸ் சொல்ல சொல்ல (அப்பாவுக்கு ஹிந்தி தெரியும்) கேட்டு பார்த்தேன்... ஆனாலும் மொழி புரியாம அழவெச்ச படம்... ஹாட்ஸ் ஆப் டு கமல்..!! :))


நானெல்லாம் ஹாலிவுட் மூவிஸ் தான் அதிகம் பார்ப்பேன் அப்படினெல்லாம் பீட்டர் விட மாட்டேன்... நான் பார்த்த ஹாலிவுட் படமெல்லாம் சொன்னா சிரிப்பீங்க... Ice age I & II, Cast away, Big, Fat, Lier, The Breed, Evil death(அதிக பட்சம் ரெண்டு சி.டி-ய மூணு நாள் பார்த்தேன்...அப்பவும் சௌண்ட முயூட் பண்ணி தான் ம்ஹீம் முடியல..!! ), Titanic(டைடானிக்-2ன்னு ஒன்னு வந்ததே.. அது 2 இல்ல தூ... நம்பி போய் உட்கார்ந்தா...!!).


அவ்ளோ தாங்க நம்ம உலக அறிவு...!! :(( இதுல என்ன தாக்கினது ஜேக் மரணம்... :(( பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;)))


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடி தொடர்புன்னா எப்படி??? நான் டிக்கெட் வாங்கி, ஒழுங்கா பாக்கனும்னு நினைக்கிற புது படத்த, தியேட்டர் போய் பார்ப்பேன்...ஓஓ இத நான் பிடிச்சு தான் செய்யறேன்...மறுபடியுமா??? அதுக்கு நல்ல படமா வரணுமே... அது கொஞ்சம் கஷ்டம் தான்... ஹி ஹி ஹி...!! ;)) நிச்சயமா... பின்ன திருட்டு வி.சி.டி-ல பார்க்காம தியேட்டர் வரணும்ன்னு தானே அவங்களே ஆசைப்படறாங்க... ஆனா வரவங்கள அவங்களே அடிச்சு தொரத்தாத குறையா ஓட வெக்கறாங்க.... அதுவேற விஷயம்..!! ;))


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு எதிகாலம் தெரியாது... ஆனா இனிமேலும் குசேலன் பார்ட்-2 வரும்னா... தமிழ் சினிமாவ அந்த கண்ணனாலையே(Lord Krishna..!!) காப்பாத்த முடியாது...!! ;)))


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


என்னில் எந்த மாற்றமும் கிடையாது... இப்ப எப்படி இருக்கானோ அப்படி தான் இருப்பேன்... இன்னும் நிறைய மக்கள் மறந்து போன பழைய பாடல்கள் கேட்பேன்...!! :)) மக்களும் அதே மாதிரி "அடடா அந்த காலத்துல என்னமா படம் எடுத்துருக்கான் பாரேன்"-னு பழைய பட வி.சி.டி எல்லாம் போட்டு பார்த்து குசேல டைரக்டர கிழிப்பாங்க...!! ;)) மெகா சீரியல்கள், மெகா மெகா சீரியல்கள் ஆகும்...!! நயன்தாரா அம்மன் வேஷமும், அரைப்பாவடையோடவும் சீரியல்ல தரிசனம் தந்து தமிழ் மக்களை காப்பாத்துவா..!! ;))


நான் ம்ம்மாட்டிவிடப்போறவங்க....


1.பேருக்கும் ஆளுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாத பெரியவர்- பொடியன் சஞ்சய்.


2.கொஞ்சநாளா தலை மறைவா இருக்கும் என் அன்பு சகோதரி- நாணல்.


3.பெயரில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் நல்லவராகவே இருக்கும்- நிஜமா நல்லவர் அண்ணா (நீங்க சொன்ன மாதிரியே போட்டுட்டேன்.. பதிவ சமத்தா எழுதிடணும் புரிஞ்சதா அண்ணா?? ;)))


4. இனிய கவிதைகள் பல தரும் எங்கள் அக்கா ஹி ஹி ஹி..!! ;)) - இனியவள் புனிதா


5.எல்லாருக்கும் ஹோம் வொர்க் தரும் எங்கள் அண்ணா - சென்ஷி... ஹி ஹி ஹி..!! ;)))))


நன்றி...!! வணக்கம்..!! டாட்டா..!! குட் மார்னிங்... சாரி குட் பை...!! ;))


பி.கு: ஒரு போஸ்ட்டாவது கலர்புல்லா போடனும்னு நான் ஆசைப் பட்டத்தின் விளைவு...!! ;)) பொறுத்தருள்க...!! :)))


-அன்புடன்,
ஸ்ரீமதி.

25-ம் வருட திருமண நாள் வாழ்த்துகள்..!!

25-ம் வருட திருமண நாள் கொண்டாடும் என் அம்மா, அப்பாவுக்கு வாழ்த்துகள்..!! :-)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.
-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஜ்வாலை

காலம் கடந்த காற்று களை இழந்து இலைகளை உருட்டி இருளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அவளும் நானும் மட்டும் சருகுகளை குளிப்பாட்டி பௌர்ணமிக்கு வழிகாட்டும் அந்த குளக்கரையின் பாதங்கள் பதியும் நான்காம் படிக்கட்டில், வெள்ளிநிலா வர மறுத்து விரதம் பூண்ட அந்நாளில் குளத்திற்கு வெளிச்சமூட்டியபடி, மனதினுள் இருண்ட அவள். எனக்குக் காரணம் தெரியும். எனினும், காட்டிக்கொள்ளும் ஆசை இல்லாமலும், கரு இல்லாத கதையை யோசித்தப்படியும் இருந்தேன். அவளே பேசட்டும். எனக்கு எதிர்காலம் தெரியாது. அறிந்து கொள்ளும் ஆவலிலும் நான் இல்லை. ஏனோ எனக்கதில் விருப்பமும் இருந்ததில்லை. இன்னும் அவள் உடலிலிருந்து ஒளி கசிந்து, வழிந்து, குளக்கரையைச் சுற்றி, காற்றில் கலந்து, குளத்து நீரில் படர்ந்துக் கொண்டிருந்தது.

தொடர்பற்ற ஏதேதோ நினைவுகளில் அவள் மனம் சஞ்சரித்துக்கொண்டிருப்பதை முகம் என்னும் மாயக்கண்ணாடி வினாடிக்கு வினாடி எனக்குணர்த்தியது. இனியும் இங்கிருப்பின் சோகத்தில் வார்த்தைகளின் அடர்த்தி அதிகமாகும் என அஞ்சி கடைசி முறையாய் ஒளியில் கொஞ்சம் வழித்தெடுத்து என் உள்ளங்கையில் அடைத்தாள். எனக்கேனோ அது போதவில்லை. அவளிடமான என் எதிர்ப்பார்ப்பு குங்கும சிமிழ் அளவல்ல. அவளை போன்றதொரு ஒளி உமிழும் உடலை. இதவளுக்கு தெரியும் எத்தனையோ முறை எத்தனையோ வகைகளில் என்னால் அவளிடம் கேட்கப்பட்ட ஒன்று தான்.

ஆனாலும் அதைத் தருவதிலான அவளின் தயக்கம் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்கானக் காரணமும் அவளால் சொல்லப்படாமலில்லை. என் மனம் ஒப்பவில்லை என்பதை அவள் மனம் கண்டறியக்கூடவில்லை. என்னைப் போன்ற பெண்மையவள் ஆனால் உடலில் மட்டும் உலகெங்கும் பரவும் ஒளி, என்னால் தாங்கயியலவில்லை என நான் நினைத்தத் தருணங்களில், எல்லாவற்றிற்குமாய் அவளிடமிருந்து ஒரு வேற்று புன்னகை ஒளி பிண்டங்களோடு வந்து விழுந்து காக்கைக்கு உணவாகிப் போகும்.

பாட்டி எனக்கிவளை அறிமுகப்படுத்தியக் காலம் முதல் நான் அவள் முன் அதிகம் யாசித்தது அதைத்தான் "சூர்யா நீ தொட்டால் எல்லாம் ஒளிபெருமாமே... என்னையும் கொஞ்சம் தொடேன்..!!", கேட்ட கணம் விண்ணில் பறப்பாள், காற்றெல்லாம் ஒளி தெறிக்க பலம் கொண்ட மட்டும் சிரிப்பாள், மறுபடியும் அவள் கன்னத்தின் ஒளியை கையிலெடுத்து, என் கையில் கொடுத்து காற்றோடு சாகசங்கள் புரிந்து மறைவாள். இவள் மின்மினித்தேசத்து சொந்தக்காரி என பாட்டி சொல்லக்கேட்டதுண்டு. எனினும் அவளை பற்றிய மற்றத் தகவல்கள் அவளோடு பழகிய இக்காலங்களில் அவளால் சொல்லப்படவும் இல்லை, என்னால் கேட்கப்படவும் இல்லை. மீண்டும் ஒருமுறை கரு இல்லாதக் கதை என்னுள் தோன்றி மறைந்தது. அவள் குளத்தை நோக்கி வீசிய விழிமீன்களை இன்னும் மீட்டப்பாடில்லை.

சோகத்திற்கான காரணம் முழுவதும் அவளால் சொல்லப்படாமல் அவள் சோகத்தை நான் கொண்டாடும் நிலையில்லில்லாமலிருந்தேன். அவளின் சோகமும் ஒருவகையில் நல்லது தான் ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் அவளைவிட்டு அலையலையாய் காற்றிலும், நீரிலும் கரைந்து செல்லும் என்னும் என் எண்ணம் அவளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைத்து நிம்மதியுற்றேன். இப்பொழுது அவள் சோகம் கனத்த நீராகி அவள் ஒளியுடன் சேர்ந்து தீ ஜ்வாலையாக அவள் கண்களின் வழி வெளியேறிக்கொண்டிருந்தது. சோகத்தில் வார்த்தைகளின் வடிவம் இழந்து, "ஒளி வேணுமா? வேணாம்.. மறந்துடு.. பகலில் மறைந்துவிடுவாய்..!!" அவள் இரவில் மட்டும் எனைச் சந்திக்கவரும் காரணம் முதல் முறையாய் அறிந்தேன். எனினும் என் பிடிவாதம் அவளை உலுக்கியிருக்கக்கூடும். மீண்டுமொருமுறை பலமாகச் சிரித்து பறந்தாள். என் மேலெல்லாம் ஒளி சிந்தி இரு கைகளாலும் என்கன்னத்தில் ஒளிக்கோடு வரைந்து மறைந்தாள்.

இப்பொழுதெல்லாம் சூர்யா என்னைப் பார்க்கவருவதில்லை. அவளின் துணை அவள் ஊருக்கு ஒளியூட்டுவதால் அவளைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதை பின்னர் பாட்டியின் மூலம் அறிந்துக் கவலைப்பட்டேன். என் கன்னத்திலிருந்து ஒளி வழிந்துக்கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் எனக்கு சிறகு முளைக்கக்கூடும்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஐம்பதாவது பதிவு+அண்ணாவுக்காக... (குட்டிக்கதை)+ ஒரு மணத்தேடல்

நினைவுதெரிந்த இந்த இரண்டு வருடத்தில் இவன் இப்படி உட்கார்ந்திருந்து பார்ப்பது இரண்டாம் முறை. ஆனாலும் இன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் என்ன நிறையவே அழுகை கோபம் ஆதங்கம் வேறு இன்னும் என்னென்னவோ கலந்திருந்த அந்த முகத்தைப் பார்க்கவே எனக்கு பாவமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏனெனில் இப்படி பட்ட சமயத்தில் அவனிடம் சென்று அடிவாங்கிய அனுபவம் எனக்குண்டு. எனக்கு எதுவும் புரியாத இந்த நிகழ்வை வாயில் விரல் போட்டபடி பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா அவனை என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்த முயன்று முகமது கஜினியானாள். ஒவ்வொரு பெட்டியையும் அவள் கொண்டுவந்து வைக்கும்போதும் அவனின் அழுகையின் வீரியம் அதிகமானதை என்னால் உணர முடிந்தது.


ஒருவேளை அப்பா அண்ணாவை விடுதியில் சேர்க்கப் போகிறாரோ?? அண்ணா படிக்கப்படுத்துவான். அதனால், அப்பா அடிக்கடி சொல்வார் 'இனிமேலும் இப்படி இருந்தால் உன்னை ஹாஸ்டலில் கொண்டு விட்டுவிடுவேன்' என.. அதுபோல் எதுவும்?? இல்லையில்லை அப்படி இருக்காது.. அம்மா நிச்சயம் அதற்கு சம்மதிக்கமாட்டாள். அப்படியானால் இப்பொழுது என்னதான் நடக்கிறது??


அப்பா மீசை அங்கிளோடு பேசிக்கொண்டு வரும் சப்தம் கேட்டது. 'மீசை அங்கிள்' அவர் உண்மையான பெயர் தெரியாது. நாங்கள் முதன்முதலாக அப்பாவுக்கு மாற்றலாகி கொச்சின் வந்ததிலிருந்து எங்களுக்கு உதவியாக இருப்பவர். பெரிய மீசை தான் அவரின் அடையாளம். வழக்கம் போல அரவிந்துக்கு அவரைக் கண்டால் பயம். நன்றாக சிரித்து பேசுவார், என்னைத் தூக்கிக்கொண்டு ஊர் சுற்றுவார். அரவிந்த் அண்ணா மட்டும் அவரிடம் போக மாட்டான். அவரை வைத்து அண்ணாவை பயமுறுத்தி அம்மா சாதம் ஊட்டுவாள்.


இவரின் வருகையால் அண்ணாவின் அழுகை ஓய்ந்தது. வேலை முடிந்து அப்பா வழக்கம் போல இரண்டு சாக்லேட்டோடு வந்தார். அரவிந்த் அண்ணா வாங்கிக்கொள்ளவில்லை. இரவு வரை நடந்த இம்மாதிரி நிகழ்ச்சிகளால் எனக்கு புரிந்தது, அப்பாவுக்கு மறுபடியும் மாற்றலாகி இருக்கிறது. இம்முறை ஹைதராபாத்.


அண்ணாவின் சோகத்திற்கான காரணம் புரிந்தது. புது இடம், புது நண்பர்கள் என கொச்சின் வந்த போது அண்ணா பட்ட அதே கஷ்டம், இப்படி அடுத்த வருடமே மறுபடியும் சந்திப்பான் என அவன் நினைத்திருக்க மாட்டன். எனக்கு இந்த பிரச்சனை இல்லை. இனி தான் பள்ளி சேர போகிறேன். அண்ணா தான் பாவம். அவன் நண்பன் நவீனுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் என அழுதுக்கொண்டே தூங்கிப் போனான்.

ஹைதராபாதில் நல்ல ஸ்கூல் அண்ணாவுடையது. ஆனால், தினமும் ஒரு குறையோடு வருவான். தினம் அவன் குறை சொல்ல உச்சரிக்கும் பெயர் ரிஷி. அன்றும் அப்படி தான், "அம்மா நான் ஒன்னும் பண்ணல மா ரிஷி தான் அழிச்சிட்டான்". பயங்கரமாக அழுதான் பார்க்கவே பாவமாக இருந்தது. அம்மா, "என்னடா அழிச்சான்??", அவன் "எங்க ஸ்கூல்ல ம்ம்ம்ம் ஒரு போர்டு இருக்குமா... ம்ம்... அதுல... ம்ம்.... பிரெண்ட்ஸ் நேம் எல்லாம் எழுதலாம் மா.. நான் என் பேர அதுல எழுதினேன் மா... அவனில்ல?? ரிஷி அவன் அழிச்சிட்டான்....ம்ம்ம்... அதனால பாப்பாவ அந்த ஸ்கூல்ல சேக்காத மா... நாம மறுபடியும் நம்ம ஊருக்கே போலாம் மா....!!", அண்ணா அழுவதைப் பார்த்த எனக்கும் அழுகை வந்தது.


"இனிமே அப்படி செய்யமாட்டான்.. கண்ணா... நீ சமத்து தானே?? அழக்கூடாது.. சரியா??"

அண்ணாவின் பயம் என்னையும் தொத்திக்கொண்டது. நல்லவேளை என்னை அண்ணாவின் வகுப்பில், ரிஷியோடு போடவில்லை. அதற்கு நான் சிறியவள் என்றுக் காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அண்ணா அவனோடு என்னை அழைத்து செல்வதில்லை "நீ கேர்ள்.. நான் பாய்.. நீ உன் பிரெண்டோட போ..." என்றான்.


முதலிலெல்லாம் அவனின் இந்த செய்கை எனக்குள் அழுகையையும், கோவத்தையும் தூண்டிவிட்டது. இப்பொழுது பழகிய ஒன்றாகிப் போனது மதுவால். அவள் அண்ணனும் அப்படி தானாம். நாங்கள் நல்ல நண்பர்களானோம். ஆனால், அண்ணா மட்டும் குறை சொல்வதை நிறுத்தவே இல்லை.


அன்று மது அவள் வீட்டுக்கு என்னை அழைத்திருந்தாள். நாங்கள் தங்கியிருந்த அதே குவார்ட்ரஸில் நான்கு வீடு தள்ளி இருந்தது அவள் வீடு. அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு போனாள். இப்பொழுதெல்லாம் நானே நடக்கக் கற்றுக்கொண்டேன். ஆனாலும், அம்மா திருப்திக்காக அவளிடம் தொத்திக்கொண்டேன். அண்ணா காலில் கிள்ளிவிட்டான். வலியோடு அழ எத்தனித்தவளை தூக்கிக்கொண்டு, அவன் முதுகில் ஒரு அடி போட்டுவிட்டு வேகமாக அம்மா மது வீடு வந்தடைந்தாள்.

அங்கு மதுவின் அம்மாவும், என் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். நானும், மதுவும், அவன் அண்ணனும் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம். "அம்மா...........!!", கத்தியபடி அண்ணா ஓடி வந்தான். "அப்பா உன்ன வர சொல்றாங்க ம்மா..!!", சொல்லித் திரும்பியவன் என்னை பார்த்து முறைத்துவிட்டு ஓடினான். இன்னுமொரு கிள்ளு நிச்சயம் இன்று எனக்கு உண்டு என நினைத்துக்கொண்டே சென்றேன்.


மறுநாள் என்றும் இல்லாமல் பரவசமாக அண்ணா அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு நோட், அவனுடையது தான், அதைக் காட்டி ஏதோ சொன்னான். என்னிடம் திரும்பியவன் அழகாக முத்தமிட்டான், "இங்க பாத்தியா... என் நோட்ல... இது கார்த்தி..... இது மகி.... இது ரோசி..... இது ரிஷி...... இது அரவிந்த்..... இங்க பார் கீழ ப்ஃரெண்ட்ஸ்..... 3 rd standard, 'B' section-ன்னு போட்ருக்கு...!!", அவன் சொன்ன எல்லாமே அந்த நோட்டில் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது.


"உனக்கு இப்ப மது ப்ஃரெண்ட்... எனக்கு இப்ப அவ அண்ணா ரிஷி ப்ஃரெண்ட்...!!". அண்ணாவின் சந்தோஷம் என்னையும் தொத்திக்கொண்டது. இப்பொழுதெல்லாம் அவன் என்னை அதிகம் அடிப்பதில்லை. அவனுடன் சேர்ந்துதான் பள்ளிக்கு செல்கிறேன். மதுவும் தான்.

888888888888888888888888888888888888888888888888888

ஹாய்.......!! உங்க எல்லாருக்கும் தெரியும் இது என்னோட ஐம்பதாவது பதிவு. நான் இந்த வலையுலகத்துக்கு வந்து உருப்படியா என்ன செஞ்சேன்னுத் தெரியல... ஆனா நிறைய நல்ல உள்ளங்கள சம்பாதிச்சிருக்கேன்.. அதுவே பெரிய விஷயமா நினைக்கிறேன். நான் இங்க (வலையுலகத்துக்கு) வர முடிவு பண்ணதுக்கு, வந்ததுக்கு, இப்ப இங்க நான் இருக்கறதுக்குன்னு எல்லாத்துக்கும் என் அண்ணாஸ் மற்றும் அக்காஸ் தான் காரணம் அதுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஆனா நான் இத ஆரம்பிச்சதுக்கு இல்ல இத ஆரம்பி அப்படின்னு சொன்னது என் அண்ணா. ஆனா, அவன் சொன்னப்ப நான் ஆரம்பிக்கல. (நமக்கு தான் அவன் பேச்சைக் கேட்டு பழக்கமே இல்லையே..!! ;))


அதுக்கு ரெண்டு காரணம் உண்டு.. ஒன்னு எனக்கு வேலை இருந்தது (அப்ப இப்ப இல்லையான்னு கேட்கக் கூடாது..!!;)). ரெண்டு என்ன எழுதரதுன்னுத் தெரியல. அதுக்கும் என் அண்ணாவே ஐடியா சொன்னான் "என்ன பத்தி எழுத்துடி"-ன்னு..பாத்தீங்களா..?? இப்படிலாம் உங்கள கொடுமைப்படுத்தக் கூடாதுன்னு தான் நான் அவன் சொன்னப்ப ஆரம்பிக்கல...

ஆனாலும் அவன் சொன்ன இன்னொரு விஷயம் (கடைசியா சொல்றேன்) அதுக்காக தான் நான் இப்ப அவனப் பத்தி சொல்றேன்.ஆனா நான் இதை ஆரம்பிச்சதும் அவன் என்கிட்டே அவனப் பத்தி ஒரு பதிவு போட சொன்னான். நானும் தலையாட்டிட்டேன், நாக்கு ச்சீ வாக்குக் கொடுத்துட்டேன். ஆனா இதுவரைக்கும் அவனப் பத்தி அதிகம் எழுதல... சோ இந்தப் பதிவு அவனுக்கு மற்றும் என் அண்ணா அக்கா எல்லாருக்கும் சமர்ப்பணம்...!!


ஏற்கனவே பதிவு நீளமா போச்சு.. இதுல எங்க 21 வருஷ நட்பு, பந்தம் இதப் பத்தி சொல்லனும்னா இந்தப் பதிவு போதாது... அப்பறம் ஆயில்யன் அண்ணா என்ன ஆனாலும் சரின்னு கதார்லேர்ந்து என்ன அடிக்க வந்துடுவாரு.. சோ எங்க அண்ணன பத்தி சுருக்கமா சொல்லனும்னா.. "மாதா பிதா குரு (மணிரத்னம் படம் இல்ல) தெய்வம்"-ன்னு சொல்லுவாங்க.. இதுல மாதவன் எனக்கு எல்லாத்துக்கும் மேல... (நோ அழக்கூடாது..;))..!! ஏன்னு காரணத்தையும் சொல்லிடுறேன்.. என் அம்மாவுக்கு நான் ஒழுங்கா சாப்ட்டா போதும், என் அப்பாவுக்கு நான் ஒழுங்கா படிச்சா போதும், இது ரெண்டையுமே நான் ஓரளவுக்கு செய்யறதுனால என்ன அவ்ளோவா ஒன்னும் சொல்லமாட்டாங்க. அதனால என் அண்ணா தான் நான் என்னப் பண்ணனும், எப்படி இருக்கணும், எத்தன மணிக்கு எழுந்திருக்கனும்கறதுல இருந்து எல்லாத்தையும் கவனிக்கறது..!! இப்ப சொல்லுங்க அவன் எல்லாத்துக்கும் மேல தானே?? அதுக்காக நாங்க பாசமலர்ன்னு சொல்லமாட்டோம்.. காலைல எழுந்ததுல இருந்து ராத்திரி தூங்க போற வரைக்கும் எங்க சண்டைய தீர்த்து வைக்க ஒரு நாட்டாம வேணும்...!! :))ஓகே இப்போதைக்கு அவ்ளோதான் அவனப் பத்தி..!! :-)) அந்த விஷயம் கடைசியா சொல்றேன்னு சொன்னேனே... அது வேற ஒன்னும் இல்லைங்க நான் ப்ளாக் ஆரம்பிச்சா அதுல அவன் போட்டோ போட்டு, அவனுக்கொரு பொண்ணுப் பார்த்துத் தரணுமாம்.. வேறவழி இல்ல வாக்குக் கொடுத்துட்டேன்.. :-( சரி கீழ அவன் போட்டோ இருக்கு பார்த்து பொண்ணுக் கொடுங்க..!! :-)


சின்னப் பையனா இருக்கானேன்னு பார்க்காதீங்க... இது அவன் ஒரு வயசுல எடுத்தது...!! இப்ப அவனுக்கு 23 வயசு சிங்காரவேலன்-ல சின்ன வயசு போட்டோவ வெச்சி கமல் குஷ்புவ கண்டுபிடிச்ச மாதிரி கண்டுபிடிங்க...!! ;-) பை.....!!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

உன்னில் நான்

உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!


காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!


நீ நான் என்னும்
இடைவெளியை இட்டு
நிரப்ப வந்தது
'காதல்' என்னும்
அழகான வார்த்தை..!!

சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தமிழ்மணம் சூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி??

என்ன தேடறீங்க விடையா??? அதுத் தெரியாம தானே நானே உங்கள கேட்ருக்கேன்... யாருக்காவது தெரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீஸ்... நானும் என்னென்னமோ பண்றேன் ம்ஹும் வரலியே இது வரைக்கும்... :(

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கடவுள்.... காதல்.... நாரதர்....

செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, வேகமானதாகவும், தண்டவாளங்களின் மேல் மோகம் கொள்ளாததுவும், வட்டமானதுமான சக்கரங்களைக் கொண்டதுவுமான அந்த நீளமான புகைவண்டி. எண்ணிக்கையில் அதிகமான அதன் பெட்டிகளின் ஒன்றன் மீதொன்றான காதலில் லயித்தும் பின் சற்று ஆச்சர்யமுற்றதுமான என் மனம் மிக வேகமாக ரயிலை முந்தியும், மழையைப் பிய்த்தெறிந்தும், பள்ளம் மேடுகளைத் தாண்டியும், கொஞ்சம் அதனாலேற்பட்ட நடுக்கத்துடனும் பின்னோக்கிப் பயணித்தது.

அந்த வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கறுப்பு வண்ணம் பூசிக்கொண்டன. நினைவுகளுக்கு பச்சையைப் பூசி பயணிக்கத் தயார்ப்படுத்தின. இதனால் என் விரல் நுனியிலிருந்து உண்டான சிறு வெப்பத்தைத் தணிக்க ஜன்னலோர மழைக்கு முகத்தையும், நினைவுகளுக்கு, வழிந்த இருளுகிடையில் வழியையும் கொடுக்க, இருளோடு கைக்கோர்த்து எண்ணங்கள் கலவையான வண்ணத்தில் நடைப்போட்டது.

இவை எல்லாம் கவனியாமல் கவனித்துக்கொண்டிருந்த அவன் கண்கள் முந்தைய ரயில் பயணங்களில், மழையால் ஆக்ரமிக்கப்பட்டக் காலத்தில், காளானாய் முளைத்த, அன்றைய எங்களுக்கானக் காதலை அவனுக்குள் நியாபகப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டிக் கண்ணீரை சிந்தி நின்றதை என்னால் உணர முடிந்தது. அவன் துணையென நான் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த அந்தக் மாலைப் பொழுதின் விளிம்பில் ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்" என சொல்லிக் கட்டிய கயிற்றைப் போலவே கறுப்புக் கட்டி அலைந்துக் கொண்டிருக்கிறது அவன் மீதான என் காதலும் என் மீதான அவன் காதலும் இன்று.

இப்பொழுது, ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை. இனி காவல் மட்டுமே செய்வதாகவும், கறுப்புக் கயிறுக் கட்டிக்கொள்ளப் போவதில்லை, எனவும் கடவுள் சொன்னாதாக நாரதர் என்னிடம் சொல்லி மறைந்தார். ஆனால் மனிதனின் உயிர் மூச்சுகளாலும், பெரு மூச்சுகளாலும், நிரம்பி இருந்த அந்த இரும்புக் காதல் இன்னும் பயணித்துக் கொண்டு தான் இருந்தது, அடுத்த மழைத்திரையை நோக்கி...-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

கனவில் இதுவரை

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது